திருவானைக்கா என அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் ஜம்புகேஸ்வரர் அன்னைக்கு ஞான உபதேசம் செய்த தலம். இங்கு உச்சிக்கால வேளையில் தினமும் அர்ச்சகர் புடவை அணிந்து ஜம்பு நாயகருக்கு வழிபாடு செய்து கோ பூஜை செய்து அம்மன் சந்நிதிக்கு திரும்புவார். பிரம்மா தான் படைத்த பெண்ணாகிய திலோத்தமையை அடைவதற்கு முற்பட்ட காரணத்தினால் பிரம்மஹத்தி தோஷம் அவரை பிடிக்கிறது. ஆதலால், ஜம்புகேஸ்வரரை வழிபட்டு ஆராதனை செய்கிறார். இதற்கு மனமுவந்த பார்வதி சிவனிடம் அனுக்கிரஹம் செய்ய வேண்டும் என வேண்டுகிறார். ஆகவே, திரிபுரசுந்தரியாகிய உன் மீது ஆசைப்பட்டதால், நீ நானாகவும் நான் நீயாகவும் மாறி பிரம்மாவிற்கு பிரம்மாவிற்கு அருள்புரிவோம் என முடிவெடுத்து அருள்புரிகின்றனர். அச்சமயம் பிரம்மா தலைகுனிந்து நிற்கிறார். இந்த வைபவம் பங்குனி பிரமோற்சவ நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. அன்றைய ஒருநாள் ஜம்புகேஸ்வரருக்கு அம்பிகை அலங்காரமும் அன்னை அகிலாண்டேஸ்வரிக்கு ஜம்புகேஸ்வரர் அலங்காரமும் செய்யப்பட்டு பிரம்மா இவர்களை வணங்கியபடியே பிரகாரங்களில் எழுந்தருளுவார்கள்.
ஜம்பு முனிவர், கௌதம முனிவர், பாரசாரர், அக்னி, வருணன், அஷ்ட திக்கு பாலகர்கள், அஷ்ட வசுக்கள், வாயு ராமர், சூரியன், சந்திரன், பிரம்மா ஆகியோர் வணங்கிய ஸ்தலங்களில் இது சிறப்புற்று விளங்குகிறது.இது பஞ்சபூதங்களில் அப்பு(நீர்) ஸ்தலமாக விளங்குகிறது. இத்தலத்தில் உள்ள தெய்வங்களுக்கு சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி, கேது ஆகிய கிரகங்கள் நாமாகரணம் செய்துள்ளன. தன்னுடைய மனைவிகள் இருவருடன் சனி பகவான் காட்சி தருகிறார்.
* ஏழைரைச் சனியில் உள்ளவர்கள் அதாவது முதல் சுற்று உள்ளவர்கள் இங்குள்ள சுவாமிக்கு எள்ளுருண்டை நைவேத்யம் செய்து வருகின்ற பக்தர்களுக்கு கொடுத்தால் வளமான வாய்ப்புகள் உண்டாகும்.சனி பகவான் அருளைப் பெறுவார்கள். எப்படியாக இருந்தாலும் சனி பகவான் தன் கடமையைச் செய்வார். இருந்தாலும் பெரிய பாதிப்புகளை தரமாட்டார்.
* ஏழைரைச் சனியின் இரண்டாம் சுற்றில் உள்ளவர்கள் பூசணிக்காயில் கடுகு எண்ணெயில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், சில கர்ம பலன்கள் குறைந்து சனி கருணைப் பார்வையில் இருப்பார்கள்.
* ஏழைரைச் சனியின் மூன்றாம் சுற்றில் உள்ளவர்கள். கடுகு எண்ணெயில் சப்பாத்தி சமைத்து தெருவில் நடமாடும் நாற்கால் ஜீவன்களான நாய்களுக்கு உணவளித்தால் சனியின் கருணையைப் பெறுவீர்கள்.
* சூரியனோடு – ராகு / கேதுவோ இணைந்திருந்தால் கிரகணத்தன்று தோஷம் குறையும். பஞ்சமுக விநாயகரை வழிபட்டு நான்கு தேங்காயை காவிரி ஆற்றில் நீரில் விட்டு வழிபட்டால் கிரகண தோஷத்தில் இருந்து விடுபடலாம்.
* சந்திரனோடு – ராகு / கேது இணைந்திருந்தாலும் பஞ்சமுக ஆஞ்சநேயரையும் ஜம்புகேஸ்வரரையும் வழிபட்டால் கிரகண தோஷம் விலகி நன்மை பெறுவார்கள்.
* பஞ்ச பூத ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சிவஸ்தலமாகவும் அம்பாள் சிவனை வழிபட்ட சிறப்பு ஸ்தலமாகவும் உள்ளது மிகவும் சிறப்பாகும். மேலும், இது ஒரு முக்தி ஸ்தலமாக உள்ளது.
