வேதங்கள் கற்று, அவை சொல்லும்படியே திருமணம் புரிந்து, இல்லற தர்மத்தை நடத்தி வந்த ஒருவர், வெளியே போய்விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் குறுக்கிட்ட ஆற்றைக் கடப்பதற்காக நீரில் இறங்கினார். வழக்கத்தைவிட நதியின் ஆழமும் இழுப்பும் அதிகமாகவே இருந்தது.
‘‘சரி! மேற்கே எங்காவது மழை பெய்திருக்கும். அதனால்தான் இன்று நீர்மட்டம் அதிகமாகி இழுப்பும் அதிகமாக இருக்கிறது. இப்படியே பார்த்துப் போய் விடலாம்’’ என்ற எண்ணத்தில், மேலே நடக்கத் தொடங்கினார். போகப் போக ஆழமாக இருந்தது. திரும்பிப்போய் விடலாம் என்று திரும்பிப் பார்த்தார். ஓடும் தண்ணீர் பயத்தை அதிகரித்தது.
முன்னாலும் போக முடியாது, பின்னாலும் போக முடியாத நிலை. திகைத்தார்; விநாடி நேரம்தான்; வேதம் முதலான நூல்கள் எல்லாம் படித்தவரல்லவா? அதனால் அவருக்குப் ‘பளிச்’சென ஓர் எண்ணம் தோன்றியது. `‘சந்யாசம் வாங்கிக் கொண்டால், அது மறுபிறவிக்குச் சமம். இந்தப் பிறவியால் உண்டாகும் பிரச்னைகள் இருக்காது என்று ஞானநூல்கள் சொல்கின்றன. ஆகையால், இப்போது நாம் துறவு மேற்கொண்டால், இந்த வெள்ள அபாயத்தில் இருந்து தப்பிவிடலாம்’’ என்று அழுத்தமாக நினைத்தார். நினைப்பு செயலானது. ஆம்! தண்ணீரில் நின்றபடியே அவர், மனதாறத் துறவறம் ஏற்றார். அதே விநாடியில், வெள்ளம் வடியத் தொடங்கியது.
‘மளமள’வென நீரில் நடந்து வந்தவர், கரையேறினார். நம்மைக் கரையேற்றுவதற்காகவும் கரையேறினார்.‘‘அடப்போங்க சார்! என்னமோ இவரு வேண்டிக்கிட்டாராம். தண்ணீர் வடிஞ்சிருச்சாம்! இதெல்லாந்தான் சார்! நம்பற மாதிரி இல்ல’’ என்ற எண்ணம் வரலாம். இவ்வாறு நடந்தது என்பதற்கு, சரித்திர பூர்வமான ஆதாரங்கள் உண்டு. இந்து மதத்தின் ஆணி வேர்களாகக் கருதப்படும்
ஸ்ரீஆதிசங்கரர், ஸ்ரீவித்தியாரண்யர் ஆகியோர் வாழ்விலும், இப்படியே நடந்துள்ளன. நாம் நம்பவில்லை என்பதற்காக, சூரியன் உதிக்காமல் இருக்கப் போவதில்லை. காற்று வீசாமல் இருக்கப் போவது இல்லை. வாருங்கள்! கரையேறியவரிடம் போகலாம்.
அவரும் எவ்வளவு நேரம்தான் அங்கேயே இருப்பார்? கரையேறிய வேத வல்லுனருக்குப் புது பிரச்னை ஒன்று முளைத்தது.‘‘நாம் பாட்டுக்கு சந்யாசம் வாங்கிக் கொண்டு விட்டோம். இதை எப்படி மனைவியிடம் சொல்வது? அவள் தாங்க மாட்டாளே! ஊஹூம்! வேறு வழியில்லை’’ என்று நினைத்தார்.ஆனால், இவர் வீடுசென்று சேர்வதற்கு முன்பே அதற்கான ஏற்பாடுகளைத் தெய்வம் செய்துவிட்டது. இவர் வீட்டை அடைந்தவுடன் இவரைப் பார்த்த மனைவி திடுக்கிட்டார்.
மனைவியின் திகைப்பைக்கண்டவர், ‘‘ஏன் திகைக்கிறாய்? முகத்தில் பயம் வேறு தெரிகிறது. என்ன ஆயிற்று உனக்கு?’’ எனக் கேட்டார். காரணம் சொன்னார் மனைவி; ‘‘என்ன இது? காவி ஆடை, மொட்டைத்தலை, தண்டம் ஆகியவற்றோடு காட்சி அளிக்கிறீர்களே! எதற்காக இந்தத் துறவுக்கோலம்?’’ எனக் கேட்டார் மனைவி.
இப்போது இவருக்கு சந்தேகமாகப் போய் விட்டது.‘‘என்ன இவள் இப்படிச் சொல்கிறாள்? நாம் மனதால் துறவு பூண்டோமே தவிர, துறவிகளுக்கான ஆடை முதலானவைகளைப் பூண வில்லையே! எப்படியோ நல்லது நடந்தால் சரி! நாம் துறவு மேற் கொண்டதை இவளிடம் எப்படிச் சொல்வது எனக் குழம்பினோம். அதற்குத் தெய்வமே பதில்சொல்லி விட்டது. என் வடிவத்தைத் துறவு கோலத்தில் காண்பித்து விட்டது’’ என எண்ணியவர், ‘‘நான் இன்னும் துறவு மேற்கொள்ளவில்லையே’’ என்றார் மனைவியிடம்.
அதே விநாடியில் கண்களுக்கு, பழைய கணவராகவே காட்சியளித்தார். துறவு கோலம் மறைந்திருந்தது.வியந்தார் மனைவி; விவரம் கேட்டார். தான் ஆபத்தில் அகப்பட்டதன் காரணமாகத் துறவு மேற்கொண்டதை விவரித்தார் கணவர். நடந்ததை உணர்ந்த மனைவி, வேறு வழியற்ற நிலையில், `‘தெய்வச்செயலால் நடந்த இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது?’’ என்று எண்ணி, கணவருக்குத் துறவு பூண அனுமதி அளித்தார். நதியைக் கடக்கும்போது, அவ்வாறு துறவு பூண்ட அந்த மகான்தான், “ஸ்ரீ நாராயண தீர்த்தர்’’ (இனி இவரைத் ‘தீர்த்தர்’ என்றே பார்க்கலாம்) மனதாறத் துறவு பூண்டு, மனைவியிடம் அனுமதியும் பெற்ற தீர்த்தர், மகான் ஒருவரிடம் சென்று முறைப்படித் துறவு பெற்று, ‘‘அடியேனுக்குக் கண்ணனின் அருள் கிடைக்க, தாங்கள் அருள் புரிய வேண்டும்’’ என வேண்டினார்.
தீர்த்தரின் உள்ளத்தையும் எதிர்கால நிகழ்வுகளையும் உணர்ந்த அந்தமகான், ‘‘காவேரிக்கரையில் எழுந்தருளியிருக்கும் போதேந்திர சுவாமிகளிடம் செல்!’’ என்று ஆசிகூறி அனுப்பினார். அவரை வணங்கிப் புறப்பட்ட தீர்த்தர், தலங்கள் பலவற்றையும் தரிசித்தபடி வந்து கொண்டிருந்தவர், திருப்பதியை அடைந்தார். அங்கு பெருமாளைத் தரிசித்ததும், ‘‘இங்கேயே சில காலம் இருந்து, ஸ்ரீவெங்கடேஸ்வரப் பெருமாளை நாள் தோறும் தரிசிக்க வேண்டும்’’ என எண்ணினார். எண்ணம் செயலானது. தீர்த்தர் திருப்பதியிலேயே தங்கினார்.நாள்தோறும் அதிகாலையில் எழுவது, உண்டான அனுஷ்டானங்களை முறையாகச் செய்வது, ஆலயத்தை வலம் வருவது, சற்று தூரத்தில் இருந்தபடியே சந்நதியில் உள்ள பகவானைத் தரிசிப்பது என நாட்கள் போய்க் கொண்டிருந்தன.
ஒருநாள் தீர்த்தர் தன் வழக்கப்படித் தரிசனம் செய்து, பகவானைத் துதித்துக் கொண்டிருந்தபோது, பதினோரு வயது சிறுவன் ஒருவன் அங்கு வந்தான். வந்தவன் சும்மா வரவில்லை. கை நிறைய இனிப்பு பட்சணங்கள், வடை எனப் பலவற்றையும் கொண்டு வந்திருந்தான். சற்று தூரத்தில் இருந்தாலும், தீர்த்தரின் பார்வையில் படும்படியாக நின்று கொண்டு, பட்சணங்களை ஒவ்வொன்றாக உள்ளே தள்ள ஆரம்பித்தான். திருப்பரங்குன்றத்தில் நக்கீரர் கவனம் திரும்பியதைப்போல, திருப்பதியில் தீர்த்தரின் கவனம் திரும்பியது.
தீர்த்தரின் கவனத்தைத் திருப்பிய சிறுவன், கொண்டு வந்தவற்றையெல்லாம் வெகுவேகமாகக் காலி செய்து விட்டு, அங்கிருந்து ஓடினான். மறுபடியும் கைநிறைய பட்சணங்களுடன் வந்த சிறுவன், பழையபடியே தீர்த்தரின் பார்வையில் படும் படியாக நின்று, பட்சணங்களை உண்ணத் தொடங்கினான். பார்த்துக் கொண்டிருந்த தீர்த்தர், ‘‘குழந்தை எவ்…வளவு ஆசையாக உண்ணுகிறது!’’ என்று சந்தோஷப்பட்டார். சிறுவனும் அவர் பார்ப்பதைப் புரிந்து கொண்டான்.
‘‘என்ன பாக்கற? என்னத்தெரிலியா? நாந்தான் உங்கூட ஒன்னாப் படிச்ச கோபாலன். மறந்து போச்சா உனக்கு?’’ எனக் கேட்டான். அது மட்டுமல்ல, கல்விக்கூடத்தில் நடந்த சில நிகழ்வுகளையும் அப்படியே விவரித்தான். தீர்த்தரின் முகம் மெள்ளமெள்ள மலர்ந்து, வியப்பில் ஆழ்ந்தது.‘‘நீ சொல்வதெல்லாம் உண்மைதான். ஆனால், கோபாலன் தற்போது வளர்ந்து பெரியவனாக இருப்பான். நீ சிறுவனாக இருக்கிறாயே!’’ எனக் கேட்டார். சிறுவனும் சளைக்க வில்லை; ‘‘ஆமாம்! நான் வளரல. அப்பிடியேதான் இருக்கேன்’’ என்றான்.
பேசிக் கொண்டிருந்தானே தவிர, சிறுவனின் கை பட்சணத்தை எடுத்து, உள்ளே தள்ளுவதை நிறுத்தவில்லை. அது பாட்டுக்கு அந்த வேலை நடந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த தீர்த்தரின் மனம் இப்போது, வேறு விதமாக எண்ணியது.‘‘இப்படிச் சாப்பிடுவதால், இதற்கு வயிற்றுவலி வந்துவிடுமே!’’ என்று நினைத்தார். நினைத்ததைச் சொல்லவும் செய்தார்;
‘‘வயிறு வலிக்குமே…’’ என்று இவர்
சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
‘‘ஒனக்கு வயத்த வலிக்கறதா என்ன?’’ என்று கேட்டான் சிறுவன். அதே விநாடியில், தீர்த்தரைக் கடுமையான வயிற்றுவலி தாக்கியது; துடியாய்த்துடித்தார்; உடல் துடித்தாலும் உள்ளம் தெளிவு பெற்றுவிட்டார். தனக்கு அருள் புரிவதற்காகவே பகவான் அவ்வாறு செய்கிறார் என்பதை உணர்ந்து கொண்டார். அந்தநேரம் பார்த்து, ‘‘உன் வயத்துல என் கைய வெக்கட்டுமா? வயத்துவலி தீந்துடும்’’ என்று கேட்டபடியே நெருங்கினான் சிறுவன். தீர்த்தர், தான் வந்திருப்பது யாரென்று தெரிந்து கொண்டு விட்டாரே! ஆகையால்,
‘‘கண்ணா! வயிற்றுவலி இருந்தால் இருந்து விட்டுப் போகட்டும். உன் அனுக்கிரகம் வேண்டி, ஏங்கிக்கொண்டிருக்கும் அடியேன் தலைமேல் உன் திருக்கரத்தை வை!’’ என வேண்டினார். கண்ணனும் அவ்வாறே செய்து, அங்கிருந்து மறைந்தார். வயிற்றுவலி மறையவில்லை தீர்த்தருக்கு. அவர் வேண்டியதும் அதைத்தானே! மேலும், ஒருசில நாட்கள் அங்கு தங்கி சுவாமி தரிசனம் செய்த தீர்த்தர், அதன்பின் அங்கிருந்து புறப்பட்டு கோவிந்தபுரம் வந்தார். ஸ்ரீ போதேந்திராள் முக்தியடைந்து, காலங்கள் கடந்து விட்டன என்பதை அறிந்தார், தீர்த்தர். அதற்காக விட்டுவிட முடியுமா? ‘‘போதேந்திராளிடம் போ!’’ என்று தானே, குருநாதர் ஏவினார்? அதைச்செயல் படுத்தினார் தீர்த்தர். ஸ்ரீபோதேந்திராளின் அதிஷ்டானத்திலேயே தங்கிய தீர்த்தர், இரவு நேரங்களில் அதிஷ்டானத்திலிருந்து மென்மையாக எழுந்த ஸ்ரீராமநாம ஓசையைக் கேட்டார்.
அதிஷ்டானத்தில் தியானமும் ஸ்ரீராமநாம ஒலியுமாய் சில மாதங்களைக்கழித்த தீர்த்தர், அதன் பிறகு கோவிந்தபுரம் விட்டுப் புறப்பட்டார். புறப்பட்ட தீர்த்தர், பலப்பலத் திருத்தலங்களைத் தரிசித்தபடி, திருவையாறு எனும் திருத்தலத்தை அடைந்தார். அங்கு சில காலம் இருந்து அதன்பின், நடுக்காவேரி என்னும் தலத்திற்கு வந்தார். அதுவரை அவர் வயிற்றுவலியை லட்சியம் செய்யவில்லை. அதேசமயம், வயிற்று வலியும் இவருக்கு அதிகமாகத் தொல்லை கொடுக்கவில்லை என்றே சொல்லலாம்.தீர்த்தர் பொறுமையாக இருக்கலாம்; வயிற்றுவலி பொறுமையாக இருக்குமா? நடுக்காவேரியை அடைந்ததும் அங்கே உள்ள விநாயகர் கோயிலில் அமர்ந்தார் தீர்த்தர்.
வயிற்றுவலி உக்கிரமாக எழுந்துவிட்டது; துடியாய்த் துடித்தார். அந்த நிலையில், பகவானிடம் முறையிட்டுத் துதிக்கத் தொடங்கிய தீர்த்தர், பகவான் அருளால் சில விநாடிகளிலே நித்திரையில் ஆழ்ந்தார். நித்திரையைத் தந்த பகவான், கனவில் காட்சி தந்தார்; ‘‘பக்தனே! காலையில் கண் விழித்தவுடன், நீ எதை முதலில் பார்க்கிறாயோ, அதன்பின்னால் தொடர்ந்து வா! உன் கவலை தீரும்’’ என்றுகூறி மறைந்தார். மறுநாள் அதிகாலையில் கண்விழித்த தீர்த்தரின் கண்களில் ஒரு `ச்வேத வராகம்’ (வெண் பன்றி) தெரிந்தது. அவருக்கு சந்தேகம் வந்துவிட்டது.
‘‘பகவான் சொன்னது இதுவா?’’ என்று அவர் ஆலோசனையில் ஆழ்ந்தபோது, அங்கே ஆலயத்தில் இருந்த விநாயகர், ‘‘இதன்பின்னால் போ!’’ எனச்சுட்டிக் காட்டினார். தொடர்ந்தார் தீர்த்தர். ச்வேத வராகமோ, மெள்….ள ஓட ஆரம்பித்தது. தீர்த்தரும் தொடர்ந்தார். அங்குமிங்குமாக ஓடி, தீர்த்தரை அலைக்கழித்தது.
கடைசியில் அதற்கு என்ன தோன்றியதோ, தெரியவில்லை, ஒரு கிராமத்தில் இருந்த வெங்கடாசலபதி ஆலயத்தில் நுழைந்தது. தீர்த்தரும் பின் தொடர்ந்தார்; பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அவர் பார்வையில் இருந்து ச்வேத வராகம் மறைந்தது. திகைத்தார் தீர்த்தர்; ‘‘பகவானே! ச்வேத வராக வடிவம் கொண்டு பூமியை இரண்யாட்சனிடம் இருந்து மீட்ட நீ, இந்தப் பூமியில் அடியேனுக்கு உண்டாகும் துயரக் கடலில் இருந்து மீட்க, மறுபடியும் அதே வடிவுடன் வந்தாயா அப்பா! அழைத்துவந்த நீ, இப்போது எங்கு போய் விட்டாய்?’’ என்று கதறினார்.
‘‘அன்பனே! அழைத்து வந்தது யாம்தான். தேடாதே எம்மை! இங்கேயே இரு!’’ என்று அசரீரியாகப் பகவான் அருள் புரிந்தார். இவ்வாறு வராகமாய் வந்து பகவான் அருள்புரிந்த காரணத்தால்,
“பூபதிராஜபுரம்’’ எனப்பெயர் கொண்ட அத்தலம் ‘`வராகபுரி’’ (வரகூர்) என அழைக்கப்படுகிறது. திருப்பதியிலேயே கண்ணனின் தரிசனமும் அருளும்பெற்ற காரணத்தால், தீர்த்தருக்குக் கண்ணனைப்பாட வேண்டும் என்ற ஆவல் அதிகமானது. பகவான் உத்தரவுப்படி, வரகூரிலேயே தங்கிய தீர்த்தருக்கு பகவான், கண்ணனாகவே காட்டியளித்தார். காட்சியளித்த கண்ணனை அப்படியே பாடிப்பாடி ஆனந்தப்பட்டார், தீர்த்தர். அற்புதமான அப்பாடல்கள் ‘கிருஷ்ண லீலா தரங்கிணி’ என அழைக்கப்படுகிறது. வாட்டிய வயிற்றுலி மறைந்து போனது. அது மட்டுமல்ல, அன்றாடம் பகவானைப் பூஜை செய்யும்போது, பூஜை முடிந்ததும் பூஜா மண்டபத்தைத் திரை போட்டு மறைத்து விடுவார் தீர்த்தர்.
வெளியில் இருந்து இவர் பாடப்பாட, உள்ளே பகவான் தன் கால் சதங்கை ஒலிக்க, தீர்த்தர் பாடுவதற்கேற்றவாறு நடனம் ஆடித்தான் அங்கீகாரத்தைத் தெரிவிப்பார். கண்ணன் அருள்பெற்று கண்ணனைப் பாடிய தீர்த்தரின் பாடல்கள் பாடப்பட்டு, கண்ணையும் கருத்தையும் பெருமளவில் கவரும்படியாக, வரகூரில் இப்போதும் ‘உறியடி உற்சவம்’ என்ற பெயரில் மாபெரும் திருவிழா நடக்கிறது. வராகப் பெருமானால் தடுத்தாட்கொள்ளப்பட்டு, வராகபுரி எனும் வரகூரிலேயே இறைவனுடன் இரண்டறக் கலந்த ஸ்ரீ நாராயண தீர்த்தரின் பாடல்கள் அனுபவ பூர்வமான தெய்வத் தன்மை வாய்ந்தவை.
(ஸ்ரீ நாராயண தீர்த்தரின் வரலாறு என மற்றொரு விரிவான வரலாறும் உண்டு. ஸ்ரீ நாராயண தீர்த்தரைப் பற்றித் தெளிவான தகவல்கள் கிடையாது. அறுபது ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட ஒரு நூல், ஸ்ரீநாராயண தீர்த்தர் வரலாறு எனத் துவங்கி, நடுநடுவே தீர்த்த நாராயணர் எனச் சொல்லி, கடைசியில் ஒரு வழியாக ஸ்ரீநாராயண தீர்த்தர் என நிறைவு பெறுகிறது. நாராயண தீர்த்தர் வேறு; தீர்த்த நாராயணர் வேறு. இதைத் தெளிவாகச் சொல்லியிருப்பவர், ஸ்ரீ மகாசுவாமிகளின் பூர்வாசிரம சகோதரரான ஸ்ரீ சிவன் அவர்கள்)
– பி.என்.பரசுராமன்
