எரியாத இருள் சூழ்ந்த திருக்கோயில்களிலும் ஒளி தீபம் ஏற்றியது திராவிட மாடல் ஆட்சி: சட்டசபையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

சென்னை: சட்டமன்றப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது விராலிமலை எம்எல்ஏ டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசுகையில், புதுக்கோட்டை தேவஸ்தானம் 235 கோயிலை கொண்ட பெரிய தேவஸ்தானம். இன்று வரை செயல் அலுவலர் நிர்வகித்து வருகிறார். ஜே.சி. அளவிலான இணை ஆணையர், துணை ஆணையர் நிலை உயர்வு தருவதற்கு அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். விராலிமலை சுப்பிரமணிய சுவாமி முருகன் கோயிலுக்கு ஒரு முழு நேர செயல் அலுவலர் நியமிக்க அரசாணை வழங்க வேண்டும் என்றார்.

அமைச்சர் பி.கே.சேகர்பாபு: புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோயில்களை பொறுத்தளவில் 235 கோயில்கள் அல்ல. 223 திருக்கோயில்களும், இரண்டு கட்டளை திருக்கோயிலிலும் என்று 225 திருக்கோயில்கள் அந்த தேவஸ்தானத்திற்கு உட்பட்டிருக்கிறது. 2021ம் ஆண்டு இந்த ஆட்சி பொறுப்பேற்ற போது ஒரு கோடி ரூபாய் அரசு மானியமாக இருந்தது. அதில் ஒருவேளை தீபம் ஏற்றுவதற்கு கூட சிரமமான சூழலை அறிந்து தற்போது அந்த தேவஸ்தானத்திற்கு ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் அரசு மானியமாக வழங்கிக் கொண்டிருக்கின்றோம். இதுவரையில் புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோயிலுக்கு மட்டும் அரசு மானியமாக வழங்கி இருக்கின்ற தொகை 29 கோடி ரூபாய். அவர் விராலிமலைக்கு என்று தனியாக செயல் அலுவலரை போட வேண்டும் என்றார்.

2021ம் ஆண்டு வரையில் புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோயில்களுக்கு செயல் அலுவலர் ஒன்று என்றுதான் இருந்தது. இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2022ம் ஆண்டு செயல் அலுவலர்கள் (நிலை -3) நான்கு அலுவலரை நியமித்திருக்கின்றோம். அவர்கள் அனைவரும் புதுக்கோட்டையிலுள்ள தேவஸ்தான தலைமையிட அலுவலகத்தில் அமர்ந்து பணியாற்றுகிறார்கள். நீங்கள் கோரிய இந்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றப்படும். எரியாத இருள் சூழ்ந்த திருக்கோயில்களிலும் ஒளி தீபம் ஏற்றியது திராவிட மாடல் ஆட்சி என்றார்.

Related Stories: