சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திருவிக நகர் எம்எல்ஏ தாயகம் கவி (திமுக) பேசியதாவது: திருவிக நகர் சட்டமன்றத் தொகுதியில் பனந்தோப்பு ரயில்வே காலனிக்குரிய அந்த ரேஷன் கடையில் ஏகாங்கிபுரம் பகுதியில் வசிக்கின்ற 896 குடும்ப அட்டைதாரர்கள் அந்த கடையில் இணைக்கப்பட்டு பொருட்களைப் பெற்று பயனடைந்து வருகின்றனர். இருப்பினும், அந்த ரேஷன் கடை குறுகிய அளவில் இருப்பதால் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை ஒரே நேரத்தில் இறக்கி இருப்பு வைத்து, விநியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது.
மேலும், அந்தப் பொருட்களைப் பெற பொதுமக்கள் வரிசையில் நிற்பதால் அந்த வரிசை சாலை வரை செல்கிறது. அப்படி சாலை வரை செல்கின்றபோது அந்தச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, அந்த ரேஷன் கடைக்கு எதிரில் இருக்கிற நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில் இருக்கின்ற காலி இடத்திலோ அல்லது அம்மா உணவகம் அருகில் இருக்கின்ற மாநாகராட்சிக்கு சொந்தமான காலி இடத்திலோ புதிய கட்டிடம் ஒன்றை கட்ட வேண்டும்.
அமைச்சர் சக்கரபாணி: உறுப்பினர் குறிப்பிட்ட அந்த காலி இடத்தில் அவருடைய தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி தர முன்வருவாரானால் அங்கே ஒரு புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டப்படும். தாயகம் கவி: ஏற்கனவே, கூட்டுறவு துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன் பேரிலும், அமைச்சர் துறை சார்ந்த அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன்பேரிலும், 71, 72, 75, 76வது வார்டுகளில் ஏற்கனவே தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு அங்கு ரேஷன் கடைகள் அமைப்பதற்கான வழிவகை செய்யப்பட்டுவிட்டது.
இதுபோன்ற, மக்கள் நலப் பணிகளுக்கு என்னுடைய சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி பயன்படுத்தப்பட்டு, மீதம் நிதி ஏதும் இல்லாத நிலை இருக்கிறது. எனவே, அமைச்சர் அரசின் சார்பிலேயே அங்கு புதிய கட்டிடம் ஒன்றை கட்டி தர வேண்டும். அமைச்சர் சக்கரபாணி: உறுப்பினர் பல்வேறு கடைகளுக்கு அவருடைய சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கி கட்டிடம் கட்டிக்கொடுத்திருக்கிறார். அவருக்கு துறையின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது அவர் கேட்டிருக்கின்ற கடையை வேறு வாடகை கட்டிடத்திற்கு மாற்ற வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கிறார். கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். வருகின்ற காலத்திலே உறுப்பினர் குறிப்பிட்ட இடத்தில் புதிய கட்டிடம் கட்ட இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு விவாதம் நடந்தது.
