என்எல்சி பள்ளியில் காப்பர் கம்பிகள் திருடிய 3 பேர் கைது

நெய்வேலி, பிப். 20: சென்னை கோடம்பாக்கம் சுப்புராய நகர் 2வது தெருவை சேர்ந்தவர் பரமசிவம் மகன் சதீஷ்குமார். இவர் தனியார் சோலார் மின் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு சொந்தமான வட்டம் 10, 11 என்எல்சி பள்ளியில் உள்ள மேற்கூரையில் புதிதாக சோலார் சிஸ்டம் கடந்த சில மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்டது. இதன் மூலம் பள்ளிகளுக்கு தேவையான மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன், என்எல்சி பள்ளியில் அடையாளம் தெரியாத நபர்கள் ரூ.3 லட்சம் மதிப்புள்ள காப்பர் கம்பிகளை வெட்டி எடுத்து சென்றுள்ளனர்.

இது குறித்து சதீஷ்குமார், நெய்வேலி நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் காவல் உதவி ஆய்வாளர் மாதேஸ்வரன் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், நெய்வேலி வட்டம் 30, புது ஜோதி தெருவை சேர்ந்த தனவேல் மகன் கோடீஸ்வரன்(36), வட்டம் 21 பகுதியில் இரும்பு கடை நடத்தி வரும் தங்கராஜ் மகன் சுதாகர்(35), வட்டம் 3, புது ஜோதி நகரைச் சேர்ந்த கொளஞ்சி மகன் மணிகண்டன்(26) ஆகியோர் காப்பர் கம்பிகளை வெட்டி எடுத்துச் சென்றது தெரியவந்தது.தொடர்ந்து 3 பேரையும் நெய்வேலி போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விரைந்து கைது செய்த போலீசாரை, எஸ்பி ஜெயகுமார் பாராட்டினார்.

Related Stories: