பெரம்பூர்: தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்டம் திருவிக.நகர் தெற்கு பகுதி 76வட்ட செயலாளர் சசிகுமார் தலைமையில், ‘’ஒரு போதும் மக்களை விலகாதவர், உரிமை போரிலே முதலானவர்’’ என்னும் தலைப்பில் ஓட்டேரியில் நேற்றிரவு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். விழாவில், அமைச்சர் பி.கே.சேகர் பாபு, துணை அமைப்புச் செயலாளர் தாயகம் கவி எம்எல்எ, கலாநிதி வீராசாமி எம்பி, சென்னை மேயர் பிரியா, திருவிக.நகர் பகுதி செயலாளர்கள் சாமிக்கண்ணு, தமிழ்வேந்தன் கலந்துகொண்டனர்.
இதில், மு.வீரபாண்டியன் பேசும்போது, ‘’பெரியார் என்பது சொல் அல்ல, அது திசை, பகுத்தறிவின் திசை, சுயமரியாதையின் திசை. பெரியார் முன்பை விட இப்போது தான் அதிகம் தேவைப்படுகிறார். இந்தியா என்பது பன்முகம் கொண்ட நாடு, பல கலாச்சாரம், பண்பாட்டு, மொழி என முகங்களை கொண்ட நாடாகும். உலகில் எந்த நாடும் இந்த பன்முகத்தை கொண்டதாக இல்லை. அதற்கு பாதிப்பு இப்போது உருவாகியுள்ளது, அப்போரில் நாம் உள்ளோம்’ என்றார். பீட்டர் அல்போன்ஸ் பேசியதாவது: ஒன்றிய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை கொண்டுவரப் பார்க்கிறது, சிறுபான்மையினர் யாரின் வாக்கும் எங்களுக்கு தேவையில்லை என்று கூறுகிறது. தமிழ்நாடு மக்களின் வாக்கு வேண்டாம் என்கிறது பாஜக. உத்தரபிரதேசத்தில் 21 சதவீதம் மக்கள் இஸ்லாமியர்கள் வாழும் மாநிலம். ஆனால் ஒரு அமைச்சர் கூட இஸ்லாமியர் இல்லை, ஏன் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் 3வது பெரிய நாடு இந்தியா. அதில் ஒரு இஸ்லாமிய ஒன்றிய அமைச்சர் கூட கிடையாது.
நம் மாநிலத்தின் உரிமையை காக்க, தமிழரின் அடையாளத்தை பாதுகாக்க நடைபெறும் யுத்தத்தின் தளபதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். இடி விழுந்த மண் போல உள்ள எடப்பாடி, தமிழ்நாடு முதலமைச்சர் கூறியது போல பாஜகவை கண்டித்து பேச திராணி உள்ளதா? இவ்வாறு பேசினார். சுப.வீரபாண்டியன் பேசும்போது, ‘’நாம் அதிமுக இருக்கவேண்டும் என்று நினைக்கிறோம், ஆனால் அதன் தலைவர் எடப்பாடி அப்படி நினைக்கவில்லை. கோயம்புத்தூரில் நடைபெற்ற சிவராத்திரி நிகழ்ச்சியில் முப்படை தளபதியை ராணுவ உடையில் நிறுத்தியுள்ளது என்றால் ஒன்றிய அரசு மதவாதத்தை எந்த அளவிற்கு கொண்டு வந்துள்ளது என்று பார்க்க வேண்டும்.
மகளிருக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கியதை அரசு தேர்தலுக்காக வழங்கியதாக கூறுகின்றனர் எதிர்க்கட்சியினர்.
திமுக என்பது அடுத்த தேர்தலுக்கு என்று செயல்படும் கட்சி கிடையாது. அடுத்த தலைமுறைக்கு என்று செயல்படும் கட்சி’’ என்றார்.
