கன்டெய்னர் லாரிகளை அப்புறப்படுத்தக்கோரி மணலி சாலையில் மறியல்: போலீசாருடன் வாக்குவாதம்

 

திருவொற்றியூர்: மணலி விரைவுச்சாலையில் வரிசையாக நிறுத்தப்படும் கன்டெய்னர் லாரிகளால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வாகன ஓட்டிகள் காயம் அடைகின்றனர் என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் நடத்தினர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தியபோது வாக்குவாதம் நிலவியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவொற்றியூர் அருகே மணலி விரைவு சாலையில் அதிகளவில் கன்டெய்னர் லாரிகள் இயக்கப்படுவதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது என்று மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் சிக்னல் அமைக்க வேண்டும் என்றும் எர்ணாவூர் முதல் சத்தியமூர்த்தி நகர் வரை சர்வீஸ் சாலை அமைக்கவேண்டும் என்றும் சாலையோரம் ஆக்கிரமித்துள்ள கன்டெய்னர் லாரிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தநிலையில் இன்று காலை மணலி விரைவு சாலையில் பைக்கில் சென்ற 2 பேர் மாநகர பஸ் மோதியதில் காயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்ததும் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் ஜெயராமன் தலைமையில் பொதுமக்கள் விரைந்தனர். சாலையோரம் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள கன்டெய்னர் லாரிகளை உடனடியாக அகற்றி சர்வீஸ் சாலையில் சிக்னல் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது. போக்குவரத்து போலீசார் வந்து போராட்டக்காரர்களை சமாதானம் செய்து அப்புறப்படுத்தினர். அப்போது போலீசார், ‘’சம்பந்தப்பட்ட துறைக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்தனர்.

 

Related Stories: