அரியலூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விசிக தலைவர் திருமாவளவன் நேற்று காலை திருச்சி வந்தார். பின்னர் அங்கு நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற திருமாவளவன் சென்னை செல்வதற்காக இரவு 7 மணியளவில் திருச்சி விமான நிலையம் வந்தார். அப்போது, சென்னை செல்வதற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பாஜ மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரும் விமான நிலையம் வந்தனர். இதில் 3 பேரும் எதிர்பாரத விதமாக சந்தித்து கொண்டனர். அப்போது அந்த நேரத்தில் சென்னையில் இருந்து சிவா எம்பியும் விமானத்தில் வந்து இறங்கினார். பின்னர் 4 பேரும் ஒன்றாக நிற்க திருச்சி சிவா எம்பி செல்பி எடுத்தார். இதுதொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் எக்ஸ் தளத்தில்,‘‘முறுவலிக்கும் முரண்கள்’’ அண்ணன் திருச்சி சிவா எடுத்த செல்பி என பதிவிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
* பாஜ நிர்வாகிகள் மோதல் மாநில நிர்வாகியை முற்றுகை
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் பாஜ பட்டியல் அணியினர், வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பாஜ, பாமக தவிர மற்ற முக்கிய கூட்டணி கட்சியான அதிமுக, அமமுக, புதியநீதிக்கட்சி உட்பட யாரும் கலந்து கொள்ளவில்லை. இதனால் மாலை 3 மணிக்கு தொடங்க வேண்டிய ஆர்ப்பாட்டம் 4.30 மணிக்கு தொடங்கியது. ஆர்ப்பாட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் பாஜ மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டம் முடித்து கொண்டு காரில் புறப்பட்டு செல்ல முயன்றபோது அவரது காரை, பாஜ மாநில இளைஞர் அணி நிர்வாகிகள் திடீரென முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரே மாவட்டத்தில் எப்படி இரண்டு பேருக்கு இளைஞர் அணி நிர்வாகிகள் பதவி தரலாம்? இதற்கு காரணம் நீங்கள் தான் என்று கூறியும், இதனால் நாங்கள் எப்படி கட்சி பணியாற்ற முடியும் என்று கூறி காரில் இருந்த கார்த்தியாயினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சத்துவாச்சாரி போலீசார் இளைஞர் அணி நிர்வாகிகளிடம் இருந்து மீட்டு கார்த்தியாயினியை அனுப்பி வைத்தனர். அப்போது அங்கிருந்த இளைஞர் அணி நிர்வாகிகள் கிளி சதீஷ்குமார் அங்கிருந்த பாக்சர் சுரேஷ் ஆதரவாளர்களை பார்த்து மிரட்டல் விடுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
