விழுப்புரம்: பாமகவில் தந்தை, மகன் மோதலால் கட்சி 2ஆக உடைந்த நிலையில் அன்புமணி பாமக அதிமுக, பாஜவுடன் இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது. ராமதாஸ் பாமகவோ தன்னந்தனியாக இருந்தபோது சசிகலா ஆதரவு கொடுத்து இருகட்சிகளும் இணைந்து தேர்தலை சந்திக்க கூட்டணி உடன்படிக்கை போடப்பட்டது. அதன்படி இருகட்சிகளிலும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறார்கள். இதனிடையே அன்புமணி ஆதரவு வேட்பாளர்கள், அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் ராமதாஸ் தரப்பில் போட்டி வேட்பாளர்களை களமறிக்கி வருகிறார்.
‘வெற்றி’ கிடைக்குமா… என்ற நிலை மாறி ‘டெபாசிட்’ வாங்க முடியுமா… என்ற நிலையில் ராமதாஸ் தரப்பு வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும், தேர்தல் செலவுக்கு ஒருபைசா கூட கொடுக்காததால் எங்களுக்கு ‘சீட்’ வேண்டாம் என்று ஓட்டம் பிடிக்கவும் தொடங்கியிருக்கிறார்களாம். இதுகுறித்து தைலாபுரம் தோட்டத்து வட்டாரத்தில் விசாரித்த போது, தைலாபுரம் தோட்டத்திற்கு செல்லும் நிர்வாகிகளுக்கு ஏதாவது ஒருதொகுதியில் சீட் பரிசாக கொடுத்து நிற்க சொல்கிறார்கள். இதனால் தோட்டத்து பக்கம் நிர்வாகிகள் வருகை குறைந்துவிட்டது. வந்துபோறதுக்கே பணம் இல்ல… இதில் எங்க நாங்கள் தேர்தலில் போட்டியிடுவது… என்று நிர்வாகிகள் வெளிப்படையாகவே புலம்பி உள்ளனர். ராமதாசின் மகள் காந்தி கூட இந்த தேர்தலில் நிற்க ஆர்வம் காட்டவில்லையாம். கொஞ்சம் நாளாக அவரும் ஒதுங்கி தான் இருக்கிறார்.
விக்கிரவாண்டி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட புகழேந்தி இதனை முன்கூட்டியே அறிந்துதான் 20 நாட்களுக்கு மேலாக இந்த பக்கமே வரவில்லை. மேலும் போனையும் சுவிட்ச்ஆப் செய்துவிட்டார். அப்படி இருந்தும் அவரை வலுகட்டாயமாக பிடித்து விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட வைக்கிறார்கள். இப்படித்தான் தைலாபுரம் தோட்டத்திற்கு வரும் நிர்வாகிகளுக்கு எலக்ஷன் சீட் பரிசாக கொடுப்பதால் பலரும் இங்கு வருவதை தவிர்த்து ஓட்டம் பிடிக்கின்றனர். ஆனால் அய்யாவோ அவர்களை பிடித்துபோட்டு சீட் கொடுத்து வருகிறார். சசிகலா கட்சியில் சீட்டு கொடுத்தால்கூட அங்கு செலவுக்கு பணம் கொடுப்பாங்க. ஆனால் இங்கு வெறும் கையோடு அனுப்பி வைப்பதால் சீட்டே வேண்டாம் என்று ஒதுங்கி வருவதாக கூறுகின்றனர்.
