திருவண்ணாமலை: நம்பிக்கை துரோகம் செய்த எடப்பாடி, மே 4ம்தேதி ரிசல்ட் அறிவிக்கும்போது ஐசியூவில்தான் இருக்கப்போகிறார் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி கண்ணியத்துடன் பேசவேண்டும். 3ம் தர, 4ம் தர பேச்சாளர் போல் பேசுவது கண்டிக்கத்தக்கது. இப்படி பேசுவதன் பலனை மே 4ம்தேதி நிச்சயம் எடப்பாடி பழனிசாமி அடைவார். தொகுதிக்கு என்ன செய்வோம் என நாங்கள் சொல்லி ஓட்டு கேட்டு வருகிறோம். கூட்டணி தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள திட்டங்களை கூறி மக்களிடம் வாக்குகேட்டு வருகிறோம்.
அரை பர்சன்ட் ஓட்டு என்று எடப்பாடி பேசுகிறார். அவருக்கு ஏன் வயிறு எரிகிறது. ஏன் வயிற்றெரிச்சல்படுகிறார். அதிமுகவுடன்தானே 2011 முதல் 2026 வரை இருந்தோம். கடந்த 2024ல் தேர்தல் கூட்டணிக்கு கையெழுத்திட்டபோது, 5 எம்பி தொகுதியும், ஒரு ராஜ்யசபாவும் தருவதாக கையெழுத்து போட்டு கொடுத்தார். இதுவரை நான் அந்த ஆவணத்தை காட்டியதில்லை. இப்போது முதன்முதலாக அண்ணாமலையார் கோயிலில் இருந்து காட்டுகிறேன்.(கையெத்தான படிவத்தை காண்பித்தார்). ஆனால் 2025ல் ராஜ்யசபா சீட் கொடுக்கவில்லை. ஒப்பந்தத்தில் ராஜ்யசபா சீட்டு எந்த ஆண்டு என குறிப்பிடவில்லை.
அதுகுறித்து கேட்டபோது, எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் நாங்கள் இப்படிதான் ஆண்டு குறிப்பிட்டதில்லை. எனது வார்த்தைதான் முக்கியம், நம்புங்கள் எனக்கூறினார். ஆனால் நம்பிக்கைக்கு புறம்பாக பேசுகிறார். எங்களுக்கும் கீழ்த்தரமாக பேச தெரியும். ஆனால் அரசியல் மரியாதையுடன் நடந்து கொண்டு இருக்கிறோம். ஐசியூவில் இருந்த கட்சி என எடப்பாடி பேசுகிறார். அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் முதல் கடைகோடி தொண்டர்கள் வரை எடப்பாடியின் செயல்பாட்டை ஏற்கவில்லை. கூட்டணியில் நாங்கள் வெளியேறியது எடப்பாடி செய்த தவறு என சுட்டிக்காட்டுகின்றனர். மே 4ம்தேதி ரிசல்ட் அறிவிக்கும்போது, எடப்பாடி பழனிசாமி ஐசியூவில்தான் இருக்கப்போகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
