சென்னையில் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணம் இல்லாத ரூ.5.60 கோடி பறிமுதல்: பறக்கும் படை நடவடிக்கை

சென்னை, மார்ச் 29: சென்னையில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணம் இல்லாத ரூ.5.60 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்து வரும் நிலையில், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வானகரம் – அம்பத்தூர் சர்வீஸ் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்த போது, அதில் ரூ.5 கோடி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணையில் வாகனத்தில் வைத்திருந்த பணம் டாஸ்மாக் கடைகளிலிருந்து கொண்டுவரப்பட்ட கலெக்ஷன் பணம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இது குறித்து வருமானவரி துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வருமானவரித்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து பணம் குறித்து விசாரித்து வருகின்றனர். உரிய ஆவணங்களை காண்பித்தால் பணத்தை திருப்பி கொடுக்கவும், இல்லையென்றால் பணத்தை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எம்.கே.பி நகர் கிழக்கு அவென்யூ சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கிருபானந்தன் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் மாலை வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி சோதனை செய்த போது, அதில் ரூ.2.26 லட்சம் இருந்தது. விசாரணையில், அண்ணா நகரை சேர்ந்த பத்மநாபன் (29) என்பவர், பிளாஸ்டிக் சம்பந்தமான பொருட்களை சிறிய கடைகளுக்கு விற்பனை செய்து, அந்தப் பணத்தை வசூல் செய்து எடுத்து வந்ததாக கூறினார். ஆனால், அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால், அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பெரம்பூர் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

 திருவொற்றியூர் மணலி சாலையில், உதவி பொறியாளர் துரைபாபு, காவல்துறை உதவி ஆய்வாளர் நரசிம்மன் தலைமையில் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, அவ்வழியே வந்த ஒரு காரை சோதனை செய்தனர். அதில், ரூ4.5 லட்சம் இருந்தது. விசாரணையில், தண்டையார்பேட்டை சாஸ்திரி நகரை சேர்ந்த ஆலின் ஈசாக் என்பவர், பெட்ரோல் பங்க் நடத்தி வருவதாகவும், கடனுக்கு பெட்ரோல் போட்ட வண்டி உரிமையாளர்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்து கொண்டு செல்வதாகவும் கூறினார். ஆனால், அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து வருவாய் உதவி ஆய்வாளர் அர்ஜூனனிடம் ஒப்படைத்தனர். அவர் அதை பொன்னேரியில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்தார்.

Related Stories: