விண்ணப்பத்தில் தவறுகளை தவிர்க்க கட்சிகளுக்கு ஆலோசனை ஆன்லைனில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது: மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி

சென்னை, மார்ச் 27: வேட்பு மனு தாக்கலின் போது, விண்ணப்பத்தில் தவறுகளை தவிர்க்க அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கப்படும் என்றும், ஆன்லைனில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது என்றும், ஆன்லைனில் தரவுகளை உள்ளீடு செய்து, அதைப் பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து, கையெழுத்திட்டு நேரில் தான் வழங்க வேண்டும், என மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளிலும் 100% வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ‘தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா’ எனும் தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி பேருந்து தொடக்க நிகழ்ச்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில், சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி பேருந்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். சென்னை மாவட்டத்தில் வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்காளர்கள் 100% வாக்களித்திடும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாநகராட்சி மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், பொதுமக்களை கவரும் வகையிலும், பொதுமக்கள் அதிகமாக கூடுமிடங்களிலும், வாக்குப்பதிவு நாள், தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம், வாக்காளர்களின் கடமைகளை உணர்த்தும் வகையில், ‘தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா’ எனும் வாசகங்கள் அடங்கிய 13 எல்.இ.டி. தொலைக்காட்சிகளுடன் கூடிய தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சிப் பேருந்து அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்து சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் நிறுத்தப்பட்டு, இவற்றில் பொருத்தப்பட்டுள்ள தொலைக்காட்சிகளில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு வீடியோக்கள் ஒளிபரப்பப்பட்டு வாக்காளர்கள் பார்வையிடும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்படும். அதேபோன்று, சென்னை மாநகராட்சியில் தினசரி மக்கள் பயன்பாட்டிற்காக பயன்படுத்தக்கூடிய திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக வீடுவீடாக சென்று குப்பை சேகரிக்கப் பயன்படுத்தப்படும் பேட்டரியால் இயங்கக்கூடிய 3 சக்கர வாகனங்கள் மற்றும் காம்பாக்டர் பெரிய வாகனங்களில் நம்ம தங்கா எனும் காகம் சின்னத்தை மையப்படுத்தி தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய வாகனங்களையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கு, ஏப்ரல் 23ம்தேதி வாக்குப்பதிவு தினத்தை முன்னிட்டு, 100% வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கையெழுத்து இயக்கம், பேருந்து நிறுத்த நிழற்குடைகளில் ‘என் வாக்கு என் உரிமை’ என்பதை வலியுறுத்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதில் 2ம் கட்டமாக மாநகர போக்குவரத்து கழகத்தின் பழைய விண்டேஜ் பேருந்து தேர்தல் விழிப்புணர்வு பணிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் தேர்தலின் பல்வேறு கூறுகள், தேர்தலில் என்னென்ன செய்கிறோம் என்பதை வலியுறுத்தி உள்ளே எல்.இ.டி. தொலைக்காட்சிகளில் வீடியோக்களும், வெளிப்பக்கத்தில் சுவவெராட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த வாகனம் 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் செல்லும் இடங்கள் விவரம் கொடுத்து, தினமும் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை வண்டி இயங்கிக் கொண்டிருக்கும். மிக முக்கியமான இடங்கள், போக்குவரத்து நெரிசல் இல்லாத இடங்களில் நிறுத்திவிட்டு, பொதுமக்கள் உள்ளே ஏறி அந்த வீடியோக்களைப் பார்க்கலாம். அதேபோல் மாற்றுத்திறனாளிகள் உள்ளே வசதியாகச் செல்வதற்காக சாய்தள வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனம் பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் மட்டும் தற்போது செல்லும். கூடுதலாக இன்னும் மூன்று வாகனங்கள் மாநகர போக்குவரத்து கழகத்திடம் கேட்கப்பட்டுள்ளது. அது வரும்போது 4 தொகுதிக்கு ஒரு வாகனம் என்ற வீதத்தில் விழிப்புணர்வு தீவிரப்படுத்தப்படும்.

அதுமட்டுமில்லாமல், நாள்தோறும் நம்முடைய குப்பை சேகரிக்கும் வாகனங்கள் சென்னை மாநகரில் 24 மணிநேரமும் இயங்கிக்கொண்டே இருக்கும். எல்லா போக்குவரத்து சந்திப்புகளிலும், எல்லா இடங்களிலும் நீங்கள் பார்க்கலாம். வாக்காளர்களை கவரும் வகையில் பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனங்கள், சிறிய வாகனங்கள், காம்பாக்டர் வாகனங்கள் ஆகியவற்றின் பக்கவாட்டில் காகம் சின்னம் மையப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23-ஐ வலியுறுத்தி, நினைவுப்படுத்தும் விதமாக எல்லா வாகனங்களிலும் ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டுள்ளது. பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் மட்டுமே 3300 வாகனங்கள் இருக்கின்றன. இன்னும் 2, 3 நாட்களில் எல்லா வாகனங்களிலும் ஸ்டிக்கர் ஒட்டும் பணி முடிந்துவிடும். பெரிய காம்பாக்டர் வாகனங்கள் 400 இருக்கின்றன. இன்று 100 வாகனங்களில் இந்தப் பணி முடிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 4 நாட்களில் மக்கள் பார்வையில் படும் வகையில் இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எங்கள் நோக்கம் வாக்காளர்களிடையே முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான். இந்த ஒரு மாதத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வேட்பாளர் மனுத்தாக்கல் நடைமுறைகள் அனைத்தும் ஒன்று தான். மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 வரை மனுத்தாக்கல் செய்யலாம். இடையில் 4 நாட்கள் விடுமுறை வருகிறது. அதனால் எந்தச் சிரமமும் இல்லாமல் இருக்க தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். வேட்பாளர்கள் கையெழுத்து போடாமல் விடுவது போன்ற சிறு தவறுகளைத் தவிர்க்க அரசியல் கட்சிகளுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. ஆன்லைனில் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய முடியாது. ஆன்லைனில் தரவுகளை உள்ளீடு செய்து, அதைப் பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து, கையெழுத்திட்டு நேரில் தான் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் கற்பகம், ரஷ்மி சித்தார்த் ஜகடே, கட்டா ரவி தேஜா, வடக்கு வட்டார துணை ஆணையாளர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: