சென்னை: தமிழக அரசின் 2026-27ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளது. தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் பேரவையை விட்டு வெளியேறினார். தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் மு.அப்பாவு வாசித்தார். உரையை ஆளுநர் வாசித்ததாக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் ஜனவரி 22ம் தேதி தொடங்கியது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் 24ம் தேதி பதில் அளித்தார். இதையடுத்து, மறுதேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்தி வைக்கப்பட்டது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரலில் நடைபெறவுள்ளதால், தமிழக பட்ஜெட் தாக்கல் குறித்த கேள்விகள் எழுந்த நிலையில், கடந்த 8ம் தேதி சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு கூறும்போது, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 17ம் தேதி (நாளை) காலை 9.30 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் கூடுகிறது. அன்று 2026-27ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். 20ம் தேதி 2026-27ம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கையும், 2025-26ம் ஆண்டுக்கான கூடுதல் செலவின மானிய கோரிக்கையும் தாக்கல் செய்யப்படுகின்றன.
சட்டப்பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்று 17ம் தேதி நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். பேரவை நிகழ்வுகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. உலகெங்கிலும் இருந்து யார் வேண்டுமானாலும் இணையதளம் மூலம் பார்க்க முடியும். அமைச்சரின் பதில் உரைகள், மானியக் கோரிக்கைகள், சிறப்பு தீர்மானங்கள் போன்றவை நேரலை செய்யப்படுகின்றன. விவாதங்களை முழுமையாக நேரலை செய்வது குறித்து அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்யும் என்று கூறினார். இதையடுத்து நாளை (17ம் தேதி) காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தொடங்குகிறது.
கூட்டம் தொடங்கியதும், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2026-27ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வாசிப்பார்கள். நாளை தொடங்கும் கூட்டம் பிப்ரவரி 20ம் தேதி வரை நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழக சட்டப்பேரவைக்கு வருகிற ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால், நாளை தமிழக அரசால் தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில் வழக்கமான நிதி ஒதுக்கீடுகள் மட்டுமின்றி, மக்களை கவரும் பல முக்கிய அறிவிப்புகளும் இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளது. அதேபோன்று, வேளாண் இடைக்கால பட்ஜெட்டும் நாளை தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
தமிழக அரசின் அடுத்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்வது வழக்கமாகும். கடந்த 2021ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் ஆகியவை அடுத்தடுத்த நாட்களில் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டது. தற்போது, தமிழகத்தில் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், இடைக்கால பட்ஜெட்டை மட்டும் நாளை தாக்கல் செய்ய முடியும். பின்னர், வருகிற மே மாதம் புதிய ஆட்சி அமைக்கும் கட்சி, 2026-2027ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
