வேட்பு மனுவில் சொத்து விவரம் மறைப்பு; எடப்பாடி 4 வாரத்தில் பதில் அளிக்க கெடு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

 

புதுடெல்லி: கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்கள் தொடர்பான தகவல்களை தவறாக தெரிவித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், சேலம் நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது என்று கூறி, கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி உயர் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்ததுடன், போலீசார் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவும் உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி நான்கு வாரத்தில் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று கூறினர். இதையடுத்து வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை மே மாதம் 19ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனர்.

Related Stories: