அரசு திட்டங்களால் எவ்வளவோ உதவியாக இருக்கு… என் பொண்ணுக்கு லேப்டாப் வந்துருச்சு… எனக்கு மாசம் 1000 ரூபாய் வருது… இப்போ ரூ.5000ம் வந்துச்சு… வீடு தேடி வந்த முதல்வரிடம் பெண் நெகிழ்ச்சி

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி மாநாடு நேற்று நடந்தது. இதில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். முன்னதாக ரோடு ஷோவாக சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலையோரம் இருபுறமும் திரண்டிருந்த மக்களை சந்தித்து ைககொடுத்து உற்சாகப்படுத்தினார். வழியில் ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு திடீரென சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்த குடும்ப தலைவி மேகலாவிடம் நலம் விசாரித்தார். பின்னர் மகளிர் உரிமை தொகை வருகிறதா? என்று கேட்டார். மேலும் அரசின் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.
மு.க.ஸ்டாலின்: மகளிர் உரிமை தொகை இப்ப வந்ததா? இல்ல முதலில் இருந்து வருகிறதா?
குடும்ப தலைவி மேகலா: முதல்ல இருந்து வருது. என் பசங்க படிப்பு செலவுக்கு ஆகிறது.
மு.க.ஸ்டாலின்: இது யாரு?
மேகலா: என் மகள்.
மு.க.ஸ்டாலின்: பெயர் என்னம்மா?
இளம்பெண்: ராஜலட்சுமி
மு.க.ஸ்டாலின்: என்ன படிக்கிறாய்?
இளம்பெண்: காமர்ஸ் படிக்கிறேன்.
மு.க.ஸ்டாலின்: நல்ல படிக்கணும். மத்த திட்டங்கள் என்ன வந்து கொண்டிருக்கிறது?
மேகலா: மாசம், மாசம் ஆயிரம் ரூபாய் வந்து கொண்டிருக்கிறது. மகளுக்கு லேப்டாப் கொடுத்திருக்கிறாங்க.
மு.க.ஸ்டாலின்: ஓ அப்படியா..
குடும்ப தலைவர்: கடந்த வாரம் தான் லேப்டாப் கொடுத்தாங்க.
மு.க.ஸ்டாலின்: அரசிடம் இருந்து இவ்வளவு சலுகை வருதா உங்களுக்கு.
மேகலா: வருகிறதால் தான் எங்களுக்கு எவ்வளவோ உதவியா இருக்கு என மகிழ்ச்சியுடன் கூறினார்.
பின்னர், குடும்ப தலைவி தண்ணீர் கொடுக்க, அதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வாங்கி பருகினார். தொடர்ந்து அங்கிருந்தவர்கள், பொதுமக்களுடன் முதல்வர் செல்பி எடுத்தார்.
பின்னர், ஜோலார்பேட்டையிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில், முதல்வர் மு.க.ஸ்டாலினை, ஏராளமான பெண்கள் சந்தித்து, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறும் மகளிருக்கு ரூ.5 ஆயிரம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதற்காகவும், திராவிட மாடல் 2.0 ஆட்சிக் காலத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தமைக்காகவும் இனிப்புகளை வழங்கி நன்றி தெரிவித்தனர்.
இந்த நிகழ்வின்போது அமைச்சர்கள் எ.வ.வேலு, ஆர்.காந்தி, சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, எம்பி எஸ்.ஜெகத்ரட்சகன், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சி தலைவர் சிவசவுந்தரவல்லி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

* மகனுடன் திமுகவில் இணைந்த அதிமுக மாஜி பெண் அமைச்சர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர் டாக்டர் நீலோபர் கபில். ஒன்றிணைந்த வேலூர் மேற்கு மாவட்ட அதிமுக துணை செயலாளராகவும் செயற்குழு உறுப்பினராகவும், மாவட்ட மருத்துவர் அணி செயலாளராகவும் பொறுப்புகளை வகித்தார். கடந்த 2001-2006, 2011-2016 ல் வாணியம்பாடி நகராட்சி தலைவராக இருந்தார். 2016ம் ஆண்டு வாணியம்பாடி எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டு தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். இவர் அமைச்சராக இருந்தபோது அப்போதைய அமைச்சர் கே.சி.வீரமணியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. கட்சிக் கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் கே.சி.வீரமணி, நீலோபர் கபிலை தொடர்ந்து புறக்கணித்து வந்தார். ஒரு கட்டத்தில் பகிரங்கமாகவே நீலோபர் கபில், கே.சி.வீரமணி மீது குற்றம்சாட்டினார். மேலும், ஜெயலலிதா இருந்தவரை தன் மீதான வெறுப்பை காட்டாமல் இருந்தவர் அவரது மறைவுக்கு பிறகு கே.சி.வீரமணி வெறுப்பு காட்டி வருகிறார் என்றும் தொடர்ந்து கூறி வந்தார்.

இந்நிலையில் அதிமுக ஆட்சிக்கு பின்னர், கே.சி.வீரமணி திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒன்மேன் ஆர்மியாக கோலோச்சுவதுடன், நீலோபர் கபிலை கட்சியில் இருந்து ஓரங்கட்டி வைத்தார். இதனால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தவர், தற்போது ஜோலார்பேட்டை மண்டலவாடியில் நடந்த திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டில் தனது மகன் இத்ரிஸூடன் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னையும், மகனையும் திமுகவில் இணைத்துக் கொண்டார். மேலும் அவருடன் வாணியம்பாடியை சேர்ந்த அவரது ஆதரவாளர்களும் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

Related Stories: