பாஜவின் அரசியலில் கலந்து தனித்துவத்தை இழந்து விட்டது: சிஏஏவுக்கு ஆதரவு கொடுத்ததால்தான் அதிமுகவுக்கு அழிவு தொடங்கியது

* அரசியலுக்கு வந்ததுமே விஜய் முதல்வர் கனவு காண்பது வேடிக்கை
* மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி

1. சிறுபான்மையினர் வாக்குகளை விஜய் பிரிப்பார் என்று பேசப்படுவது உண்மையா?
சிறுபான்மை சமூக மக்கள் முன்பை விட இப்போது அதிக அரசியல் விழிப்புணர்ச்சியை பெற்றிருக்கிறார்கள். திரையில் யாரை கொண்டாட வேண்டும், அரசியல் களத்தில் யாரை கொண்டாட வேண்டும் என்ற தெளிவான புரிதல் அவர்களிடம் உள்ளது. எனவே, விஜய்யின் அரசியலுக்கு அவர்கள் பூஜ்ய மதிப்பெண்களை மட்டுமே அளித்துள்ளனர். தற்போதைய பாசிச நெருக்கடிகளில், பாஜ, ஆர்எஸ்எஸ் ஆகியவற்றின் நடவடிக்கைகளை தடுத்திடும் வலிமை மிக்க ஆற்றல் திமுக தலைமையிலான அணிக்கு மட்டுமே உள்ளது என்பதே அவர்களுடைய பார்வை. இதில் விஜய்க்கு இடமில்லை. விஜய்யை ரசிப்பது என்பது வேறு, அரசியலில் ஆதரிப்பது என்பது வேறு. இதில் சிறுபான்மை மக்களிடம் இருக்கக்கூடிய தெளிவு எங்களுக்கே ஆச்சரியமளிக்கிறது.

2. பாஜ எப்போதுமே முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்துவது கிடையாது, இப்போது அதே நிலைப்பாட்டை அதிமுகவும் பின்பற்ற தொடங்கியிருப்பதாக சொல்லபடுகிறதே?
கடந்த அதிமுக ஆட்சியின் போது, சிஏஏவுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் அதிமுக செய்த வரலாற்று தவறு, அந்த கட்சியை தொடர்ந்து அழிவுப்பாதைக்கு அழைத்து செல்கிறது. தவறான அரசியல் முடிவை எடுத்த பின்பு சிறுபான்மை மக்கள் எப்படி அவர்களை ஆதரிப்பார்கள். அவர்கள் நம்பிக்கை இழந்த பின்பு மீண்டும் அவர்களிடம் இப்போது நம்பிக்கையை பெற முடியாத நிலையில் உள்ளனர். அவர்களின் தலைமை கூட்டாளியாக இருக்கும் பாஜவின் அரசியலில் கலந்து தங்களின் தனித்துவத்தை இழந்து வருகிறார்கள். தங்களுக்கு ஏன் முன்பு போன்று சிறுபான்மை மக்கள் ஆதரவளிக்கவில்லை என்பதை அவர்கள் மனசாட்சியோடு ஆய்வு செய்ய வேண்டும். அவர்கள் செய்த அரசியல் தவறுக்கு இப்போது தான் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.

3. சிறுபான்மையினர் விஷயத்தில் தமிழக அரசு எப்படி செயல்படுகிறது என்ற நினைக்கிறீர்கள்?
சிறுபான்மை மக்களின் நெருக்கடிகள், அவர்களின் ஏக்கங்கள், கவலைகள் உள்ளிட்டவைகளை புரிந்து அவர்கள் மீது பரிவு காட்டக்கூடிய அரசாக திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசு இருக்கிறது. இந்துக்களும், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என நினைக்கும் அனைவருக்கும் இந்த ஆட்சி நீடிப்பது தான் நல்லது என்ற கருத்து இருக்கிறது. அந்த அடிப்படையில் திமுக அரசு பல நல்ல விஷயங்களை சிறுபான்மையினருக்கு செய்து வருகிறது. அவற்றை எல்லாம் தாண்டி அவர்களின் வாழ்வுரிமைகளையும், பாதுகாப்பான சூழலையும் கட்டி காக்க வேண்டும் என்ற உணர்வு அவர்களிடம் இருக்கிறது. அதை சிறுபான்மை சமூக மக்கள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள்.

4. தேர்தலில் புதிதாக களம் காண காத்து கொண்டிருக்கும் விஜய்யின் வருகையை எப்படி பார்க்கிறீர்கள்?
ஜனநாயக நாட்டில் யாரும் கட்சி தொடங்கலாம், பிரச்சாரம் செய்யலாம், மக்களை சந்திக்கலாம். விஜய் இப்போது தான் களத்துக்கு வந்துள்ளார். அரசியலுக்கு வந்ததுமே முதல்வர் கனவு காண்பது தான் வேடிக்கையாக உள்ளது. கரூர் சம்பவத்தில் அவர் நடந்து கொண்ட விதமும், தனது ஜனநாயகன் படத்துக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை கூட சமாளிக்க முடியாமல் பவ்யமாக மவுனம் காத்து வரும் அவரது போக்கும், தமிழக மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. சினிமாவில் வசனங்களை மனப்பாடம் செய்து விட்டு பேசுவது போன்று, அரசியல் மேடைகளில் பேசுவதை எல்லாம் மக்கள் ஒரு பொருட்டாக கருதமாட்டார்கள்.

Related Stories: