மக்களோடு, மக்களாக ரயிலில் முதல்வர் பயணம்: வீடியோ வைரல்

சென்னை: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் நேற்று நடந்த திமுக வாக்குச்சாவடி முகவர் மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்திற்கு வந்தடைந்தார். அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து பிருந்தாவனம் எக்ஸ்பிரஸ் ரயிலில் வழியனுப்பி வைத்தனர். அப்போது ரயில் பயணம் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ரயில் பயணம் செய்த பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக அவருடன் அமர்ந்து புகைப்படம் எடுத்து அவருக்கு வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர். மேலும் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மக்களோடு மக்களாக ரயிலில் பயணித்து சுமார் 11 மணியளவில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் சென்றடைந்தார். அங்கும் அவருக்கு திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் உற்சாகமாக வரவேற்றனர். அதைத் தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பிறகு ரயிலில் பயணம் செய்த வீடியோவை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது.

Related Stories: