இந்தியாவில் 2030ம் ஆண்டில் தண்ணீர் பற்றாக்குறை அபாயம்: சர்வதேச நீர் மேலாண்மை நிறுவனம் அதிர்ச்சி தகவல்

 

தமிழகத்தில் கோடைகாலம் அடுத்தடுத்த மாதங்களில் ெதாடங்குகிறது. சுட்ெடரிக்கும் கோடை ெவயிலில் பல்வேறு பாதிப்புகளை மக்கள் சந்திக்க நேரிடுகிறது. இதில் தலையாய பிரச்னையாக இருப்பது தண்ணீர். ஆம் தண்ணீருக்காக மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் போராட்டம் நடத்துவதும் தொடரும் வாடிக்கையாக உள்ளது. அது சரி தண்ணீர் பிரச்னை என்பது தமிழகத்திற்கு மட்டுமான பிரச்னையா? என்றால் அது தான் தவறு.

தண்ணீர் பற்றாக்குறை என்பது உலகளாவிய பிரச்னை. அதிலும் குறிப்பாக இந்தியாவில் 2030ம் ஆண்டில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்று சர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனத்தின் ஆய்வுகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உலக தட்பவெட்ப மாற்றம், உள்நாட்டு மக்கள் தொகை பெருக்கம் போன்ற காரணங்களால் இந்தியா தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்கும். இது அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய மற்றும் எதிர்பாராத அளவிற்கு உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையை ஏற்படுத்தும்.

இந்தியாவிற்கு 700 மில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில் 85சதவீதம் உணவு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த தேவை, 2030ம் ஆண்டில் மக்கள் தொகை அதிகரிப்பால் இரண்டு மடங்காக அதிகரிக்கும். அதாவது 2030ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 160 கோடியில் இருந்து 170 கோடி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்ேபாது தண்ணீர் தேவையும் இரு மடங்கு (அதாவது 1,498பில்லியன் கியூபிக் மீட்டர்) அதிகரிக்கும். ஆனால், தண்ணீர் அளிப்பு 744 மில்லியன் கியூபிக் லிட்டராக இருக்கும். தேவையில் பாதியளவே கிடைக்கும் என்பதால் நிச்சயமாக தண்ணீர் பற்றாக்குறை என்பது தலையாய பிரச்னையாக உருவெடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும் அந்த ஆய்வுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது குறித்து நீர்வள ஆதார மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ள வல்லுநர்கள் கூறியதாவது: நீரின்றி அமையாது உலகு என்பது ஒரு பொன்மொழி. நிச்சயமாக தண்ணீர் இல்லாமல் இந்த உலகத்தில் எதுவுமே இல்லை என்பதே உண்மை. மத்திய கிழக்கு நாடுகள், தற்போது தண்ணீர் நெருக்கடி நாடுகளாக உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இந்தியாவிலும் இந்த நிலை உருவாகி விடக் கூடாது என்ற எச்சரிக்கை மணியாகவே சர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனத்தின் ஆய்வுகள் உள்ளது.

இந்தியாவின் நிலத்தடி நீர்மட்டம், பெரும்பாலான பகுதிகளில் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. வடக்கில் உள்ள விவசாயிகள் நிலத்தடி நீரை ஏற்கனவே அதிகளவில் பயன்படுத்தி விட்டதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது. அதிகளவில் விவசாயத்தை நம்பியுள்ள நாடுகளில், இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இதற்கு பெரும் ஆதாரமாக இருப்பது தண்ணீர். இந்தியாவின் தண்ணீர் தேவை தற்போது 634 மில்லியன் கியூபிக் லிட்டராக உள்ளது. 2030ம் ஆண்டுக்குள் இது 1,123 மில்லியன் கியூபிக் லிட்டராக அதிகரிக்கும் என்று ஒன்றிய நீர்வள கமிஷன் கணித்துள்ளது. தண்ணீருக்கு பற்றாக்குறை ஏற்படும் போது, விவசாயம் பெருமளவில் பாதிக்கும். விவசாயம் பாதிக்கும் போது, உணவுப்பொருட்கள் தட்டுப்பாடும் ஏற்படும் என்பது இயல்பான ஒன்று.

இப்படி உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் தருணத்தில், நாம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் ஏற்படும். இதில் சர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனம் மற்றும் ஒன்றிய நீர்வளக்கமிஷன் ஆகியவற்றின் மதிப்பீடுகளில் தண்ணீர் பயன்பாட்டு அளவுகளில் சற்று வித்தியாசம் உள்ளது.

அதே நேரத்தில், தண்ணீர் பற்றாக்குறை என்பது எதிர்காலத்தில் நாட்டையே அச்சுறுத்தும் ஒரு பூதாகர பிரச்னையாக இருக்கும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, மழைநீர் சேமிப்பிற்கு இந்தியா அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும். குளம், ஏரிகள் போன்ற நீர்நிலைகளை அதிகளவில் உருவாக்க வேண்டும்.

வாய்ப்புள்ள இடங்களில் அணைகளையும் அதிகளவில் கட்ட வேண்டும். நீர்வள ஆதாரத்தை பெருக்குவதற்கான பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதே போல், விவசாய நிலங்களை ஒட்டி புதிய குளங்கள், ஏரிகளை உருவாக்குவதும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு நீர்வள ஆதார மேம்பாட்டு வல்லுநர்கள் கூறினர்.

* 3% மட்டுமே நன்னீராகும்

நாம் வாழும் பூமியின் 70 சதவீதம் நீரால் நிறைந்துள்ளது. அதில் மூன்றில் இரண்டு பங்கு நீரானது உறைந்த பனிப்பாறைகள் மற்றும் நம் பயன்பாட்டிற்கு கிடைக்காத இடங்களில் உள்ளது. மொத்த நீரில் 3 சதவீதம் மட்டுமே நன்னீராக உள்ளது. இதன் காரணமாகவே, உலகளவில் சுமார் 1.1 பில்லியன் மக்கள் தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர்.

ஆண்டு தோறும் 2.7 பில்லியன் மக்கள், ஆண்டுக்கு ஒரு மாதமாவது போதிய தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர். இதனால் சுகாதாரம் சார்ந்த பிரச்னைகளையும் அவர்கள் எதிர்கொள்கின்றனர். சுற்றுச்சூழலை செழிப்பாகவும், மக்களுக்கு உணவளிக்கவும் பயன்பட்டு வந்த 50 சதவீதம் நீர்நிலைகள், இப்போது தண்ணீரின்றி வெறிச்சோடி கிடக்கின்றன என்பது போன்ற பல்வேறு தகவல்களையும் ஆய்வுகள் வெளியிட்டுள்ளது.

* அலட்சியமாக இருக்கக் கூடாது

‘‘இந்தியா நீர்வளம் குறைந்த நாடு அல்ல. ஆனால் தீவிர அலட்சியம், நீர்வளங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்களை சரியாக கண்காணிக்காத காரணத்தால், தண்ணீர் பஞ்சம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இங்கு தண்ணீர் பிரச்னை அதிகமுள்ள பல பகுதிகள், முரண்பாடுள்ள மண்டலங்களில் அமைந்துள்ளது.

இதனால் வன்முறை ரீதியிலான பெரும் அசம்பாவிதங்கள் உருவாக தண்ணீர் பிரச்னையும் ஒரு காரணமாக அமைவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, இனியும் அலட்சியம் காட்டாமல் நீர்வள மேம்பாட்டு பணிகளை முழுவீச்சில் தனிக்கவனம் செலுத்தி அரசு செய்யவேண்டும்,’’ என்பதும் உலக தண்ணீர் மேலாண்மை நிறுவனத்தின் அறிவுரை.

* குழாய் நீரும் ஒரு காரணம்

‘‘கிராமங்களில் கூட தற்ேபாது வீடுகளின் கழிவுநீரை, மக்கள் குளங்களில் தான் விடுகின்றனர். மரங்கள் வெட்டப்படும் போதும், வீடுகளின் கூரைகள் மாற்றப்படும் போதும், ஓடுகளும் கீற்றுகளும் குளங்களில் வீசப்படுகின்றன. ஊர்கூடி நீர்நிலைகளை தூர்வாரிய காலம் எல்லாம், இப்போது மலையேறி விட்டது. ரசாயன கலப்புகளும் அதிகரித்து வருகிறது.

கிணறுகளும், ஏரிகளும், ஆறுகளும் மட்டுமே குடிநீருக்கான ஆதாரங்கள் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. அப்போது நீர்நிலைகள் அனைத்தும் தூய்மையாக இருந்தது. எப்போது வீட்டுக்குழாய்களில் தண்ணீர் வர ஆரம்பித்ததோ, அப்ேபாதே அதன் மீதான தூய்மை நாட்டமும் குறைந்து விட்டது,’’ என்பது நீர்நிலை மேம்பாட்டு சங்கங்கள் வெளிப்படுத்தும் வேதனை.

Related Stories: