சென்னை: நில அளவை மற்றும் நிலவரி திட்டத் துறையால் இணையவழி ஆவணங்களான ‘அ’ – பதிவேடு, சிட்டா மற்றும் புலப்படம் ஆகியவை இணையவழி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களின் விவரங்களை ஒருங்கிணைத்து, நில உரிமைதாரர்களுக்கு ‘ஒருங்கிணைந்த நில ஆவணம்’ என்ற சேவையையும், இணையவழியில் ஒரு புல எண்ணில் நடைபெறும் பட்டா மாறுதல் விவரங்களை பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ‘பட்டா மாறுதல் விவரங்களின் அறிக்கை’ என்ற சேவையையும் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சென்னை, சேப்பாக்கம் நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநரகத்தில் தொடங்கி வைத்தார்.
அதன்படி, நில உரிமையாளர்கள் தங்களது நிலம் தொடர்பான ஆவணங்களை வங்கிகள் மற்றும் இதர அலுவலகங்களில் சமர்பிக்கும் பொருட்டு, https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணையதளத்தில் அவற்றை தனித்தனியாக பதிவிறக்கம் செய்து வழங்கும் நிலை இருந்து வந்தது. இந்நிலையில் இந்த மூன்று ஆவணங்களையும் ஒருங்கிணைத்து ஒரே ஆவணமாக வழங்கும் பொருட்டு, கடந்த 2021-2022ம் ஆண்டு சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி நில உரிமைதாரர்களுக்கு ஒருங்கிணைந்த நில ஆவணம் என்ற புதிய ஆவணம் வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டு, தேசிய தகவலியல் மையத்தால் இந்த ஆவணம் வடிவமைக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்படுகிறது.
