சென்னை: தெருக்களுக்கு குறிப்பிட்ட பெயரை தான் சூட்ட வேண்டும் என்று உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள செட்டி தெரு என்ற பெயர் சாதியை முன்னிலைப்படுத்தும் வகையில் உள்ளதால் அதை தாய்-தந்தை கோயில் தெரு என்று மாற்ற உத்தரவிடக்கோரி அதே பகுதியைச் சேர்ந்த ஆர்.கே.வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, சாதியை ஒழிக்க வேண்டும் என்ற மனுதாரரின் முயற்சி பாராட்டத்தக்கது என்ற போதும் அவர் விருப்பப்படி தெருவுக்கு பெயர் வைக்க வேண்டும் என்று கோருவதை ஏற்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து, வெங்கடேஷ் மேல் முறையீடு செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தெருவுக்கு குறிப்பிட்ட பெயரை சூட்ட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட முடியாது. மனுதாரரின் ஆலோசனையை சட்டப்பூர்வ கடமையாக கருத முடியாது என்பதால் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் எந்த தவறும் இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
