நியூயார்க்: அமெரிக்காவில் காலிஸ்தான் தீவிரவாதியை கொலை செய்ய முயன்ற வழக்கில் கைதான இந்தியர் தனது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். அமெரிக்க குடியுரிமை பெற்ற காலிஸ்தான் தீவிரவாத இயக்கத் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூனை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டதாக கடந்த 2023ம் ஆண்டில் பரபரப்பு புகார் எழுந்தது. இந்த திட்டத்தின் பின்னணியில் இந்தியாவைச் சேர்ந்த நிகில் குப்தா (54) மற்றும் இந்திய உளவு அமைப்பான ‘ரா’வின் முன்னாள் அதிகாரி விகாஸ் யாதவ் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க உளவு அமைப்புகள் குற்றம் சாட்டின.
இதற்கிடையில் செக் குடியரசு நாட்டில் பிடிபட்ட நிகில் குப்தா, கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆரம்பத்தில் தான் நிரபராதி என்று கூறிவந்த நிகில் குப்தா மீது கொலைக்கு ஆள் சேர்த்தது மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் நியூயார்க்கில் உள்ள மேன்ஹாட்டன் பெடரல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட நிகில் குப்தா, தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார். பன்னூனை கொலை செய்வதற்காக கூலிப்படையினர் என்று நினைத்து அமெரிக்க உளவு அதிகாரிகளிடம் 1 லட்சம் டாலர் பேரம் பேசியதையும், அதில் முன்பணமாக 15 ஆயிரம் டாலர் வழங்கியதையும் அவர் நீதிமன்றத்தில் உறுதி செய்தார்.
இந்த வழக்கில் அவருக்கு 40 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், வரும் மே மாதம் 29ம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த சதித் திட்டத்தில் தொடர்புடையதாக கருதப்படும் விகாஸ் யாதவ் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ‘சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உரிய விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ஒன்றிய அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது.
