ஓட்டுப்பதிவில் பல இடங்களில் வன்முறை வங்கதேச புதிய பிரதமர் யார்? பிஎன்பி- ஜமாத் இ இஸ்லாமி கட்சிகளுக்கு இடையே இழுபறி

டாக்கா: வங்கதேச நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடந்தது. இதில் பிஎன்பி மற்றும் ஜமாத் இ இஸ்லாமி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதால் புதிய பிரதமர் யார் என்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. வங்க தேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. 18 மாதங்களுக்கு பிறகு நேற்று அங்கு தேர்தல் நடத்தப்பட்டது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவரது அவாமி லீக் கட்சிக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) மற்றும் அதன் முன்னாள் கூட்டாளியான ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நடந்தது. வங்கதேச நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 300 தொகுதியில், ஒரு தொகுதியில் வேட்பாளரின் மறைவால் மீதமுள்ள 299 தொகுதிகளில் நேற்று தேர்தல் நடந்தது. இதில் 50 அரசியல் கட்சிகளை சேர்ந்த 1,755 வேட்பாளர்கள் மற்றும் 273 சுயேட்சைகள் போட்டியிட்டனர். நாடு முழுவதும் உள்ள 42,779 வாக்குச்சாவடிகளில் நேற்று காலை 7.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 8 லட்சம் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். 9 லட்சம் பாதுகாப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டனர்.

இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், பி.என்.பி தலைவர் தாரிக் ரஹ்மான் ஆகியோர் முன்கூட்டியே வாக்குப்பதிவு செய்தனர். வங்கதேச தேசியவாதக் கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான், டாக்காவின் உயர்மட்ட குல்ஷன் பகுதியில் உள்ள குல்ஷன் மாதிரி பள்ளி மற்றும் கல்லூரி மையத்தில் வாக்களித்தார். ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவரான ஷபிகுர் ரஹ்மான், மோனிபூர் உச்சா வித்யாலயா மற்றும் கல்லூரியில் வாக்களித்தார். வாக்குப்பதிவின் போது ஆங்காங்கே வன்முறை வெடித்தது. ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் பி.என்.பி ஆதரவாளர்களிடையே மிர்பூரில் மோதல் ஏற்பட்டது. சைத்பூர் விமான நிலையத்தில் ஜமாத் தலைவர் ஒருவரிடமிருந்து பெரும் தொகை பறிமுதல் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோபால்கஞ்சில், ஒரு வாக்குச் சாவடியில் நடந்ததாகக் கூறப்படும் கைக்குண்டுத் தாக்குதலில் 13 வயது சிறுமி உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். நிச்சுபாராவில் உள்ள ரேஷ்மா சர்வதேச பள்ளி மையத்தில் நேற்று காலை 9 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. முன்ஷிகஞ்ச்-3 தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு வெளியே தொடர்ச்சியாக கையெறி குண்டுகள் வீசப்பட்டதால் வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. மகாதி குருசரண் உயர்நிலைப் பள்ளி மையத்திலும் குண்டுகள் வெடித்தன. குல்னாவில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு வெளியே ஜமாத்-இ-இஸ்லாமி ஆர்வலர்களுடன் ஏற்பட்ட மோதலில் ஒரு பிஎன்பி தலைவர் பலியானார். இதனால் சில இடங்களில் பதற்றமான சூழல் நிலவியது. நேற்று மாலை 4.30 வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 47 சதவீதம் பதிவானது. அதை தொடர்ந்து உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் பிஎன்பி மற்றும் ஜமாத் இ இஸ்லாமி கட்சிகளுக்கு இடையே இழுபறி ஏற்பட்டுள்ளது.

* தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: ஷேக் ஹசீனா
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா விடுத்துள்ள அறிக்கையில்,’ அவாமி லீக்கின் பங்கேற்பு இல்லாமல் நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பு ஜனநாயக விதிமுறைகள், வாக்களிக்கும் உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு கொள்கைகளை நிலைநிறுத்தத் தவறிவிட்டது. இந்த தேர்தலை நிராகரித்ததற்காக மக்களுக்கு நன்றி. குறைந்த அளவு வாக்குப்பதிவான இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும். இந்த தேர்தல் ஜனநாயக விதிமுறைகள் மற்றும் அரசியலமைப்பு கொள்கைகளை நிலைநிறுத்தத் தவறிவிட்டது’ என்று தெரிவித்துள்ளார்

* 30 ஆண்டுகளில் முதன்முறை
வங்கதேசத் தேர்தலில் 30 ஆண்டுகளில் முதல் முறையாக வாக்குச்சீட்டில் ‘படகு’ சின்னம் இல்லை. பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக்கின் தேர்தல் சின்னமான படகு, முதன்முறையாக வங்கதேச பொதுத் தேர்தலில் வாக்குச் சீட்டில் இடம்பெறவில்லை. இருப்பினும், இது முதல் முறை அல்ல. அவாமி லீக் 1988 ஆம் ஆண்டு மற்றும் மீண்டும் 1996 ஆம் ஆண்டு தேர்தல்களைப் புறக்கணித்தது. 13 முறை நடந்த வங்கதேச தேர்தல்களில் மொத்தம் 3 முறை படகு சின்னம் இல்லாமல் தேர்தல் நடந்துள்ளது.

* 2 ஓட்டு பதிவு
வங்கதேச நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு வாக்கும் (வெள்ளை நிறம்), அரசியலமைப்பு சட்ட மாற்றங்களுக்கான வாக்கெடுப்பிற்கு மற்றொரு வாக்கும் (இளஞ்சிவப்பு நிறம்) என வாக்காளர்கள் 2 வாக்குகளை பதிவு செய்தனர். முதல்முறையாக சிசிடிவி கண்காணிப்பு, டிரோன் பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டது.

* இந்து தொழிலாளி கொலை
வங்கதேசத்தில் நேற்று பொதுதேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் அங்கு இந்து வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார். வங்கதேச இஸ்லாம்பூர் யூனியனிக்கீழுள்ள சம்பாரா தேயிலை தோட்டத்தில் ரத்தன் ஷூவோகர்(28) என்பவர் வேலை செய்து வந்தார். கடந்த செவ்வாய்கிழமை(பிப்.10) தேயிலை தோட்டத்துக்கு சென்ற ரத்தன் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் அவரை தேடி வந்துள்ளனர். இந்நிலையில், தலைநகர் டாக்காவில் இருந்து வடகிழக்கே 200கிமீ தொலைவில் உள்ள மவுல்விபஜாரின் கமல்கஞ்ச் உபாசிலாவில் உள்ள தேயிலை தோட்டத்தில் ரத்தன் ஷூவோகரின் உடல் கிடந்துள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: