நீலகிரியில் மீண்டும் உறைபனியின் தாக்கம்: கடும் குளிரால் மக்கள் அவதி

 

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இறுதி வாரம் முதல் நீர்பனி விழும். தொடர்ந்து நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்திற்கு மேல் உறைபனி விழத்துவங்கும். இந்நிலையில், இம்முறை கடந்த டிசம்பர் மாதம் வரை நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வந்தது. இதனால், உறைப்பனி விழுவதில் சற்று தாமதம் ஏற்பட்டது. அதே சமயம் டிசம்பர் மாதம் இறுதி வாரத்திற்கு மேல் உறைபனி விழ துவங்கியது. இதனால் மாலை நேரங்களில் குளிர் அதிகமாக காணப்பட்டது. கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் நீர்பனி மட்டுமே காணப்பட்டது. உறைப்பனியின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உறைபனியின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இன்றும் (வெள்ளி) மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உறைபனி கொட்டியது.

ஊட்டியில் காந்தல், தலைக்குந்தா, எச்பிஎப், பைக்காரா, ஷூட்டிங் மட்டம், அவலாஞ்சி மற்றும் கிளன்மார்க்கென் போன்ற பகுதிகளில் மீண்டும் உறைப்பனி கொட்டியது. இதனால், புல்வெளிகள், வாகனங்களில் உறைபனி படர்ந்து காணப்பட்டது. தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானத்தில் வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே பனி படர்ந்து காணப்பட்டது. இதன் கரணமாக வெப்பநிலை மிகவும் குறைந்தது. இன்று ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியசாக பதிவாகியிருந்தது. அவலாஞ்சியில் 1 டிகிரி செல்சியசாக வெப்பநிலை இருந்தது. தேயிலைத் தோட்டம், மலை காய்கறி தோட்டங்களுக்கு பணிக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் குளிரால் பாதிக்கப்பட்டனர். ஊட்டி வந்துள்ள சுற்றுலா பயணிகள் கடும் குளிரின் காரணமாக காலை நேரங்களில் அறைகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கினர்.

Related Stories: