பெண்களுக்கு ரூ.5000 வரவு அதிகாலையில் முதல்வர் அதிரடி: பரபரப்பு பின்னணி தகவல்

சென்னை: அதிகாலையிலேயே பெண்களின் வங்கி கணக்கில் 5000 ரூபாய் வழங்கி அதிரடி காட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதற்கான பின்னணி நிலவரம் என்ன என்பது தொடர்பாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற்று வரும் 1 கோடி 31 லட்சம் பெண்களின் வங்கி கணக்கில் நேற்று காலையில் 5000 பணம் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான தொகை 3000 ரூபாய் முன்பணமாகவும், கோடைக்கால சிறப்பு தொகுப்பாக 2000 ரூபாயும் வழங்கப்பட்டிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

மேலும் அடுத்து அமைய இருக்கும் திமுக ஆட்சியில் தற்போது வழங்கப்பட்டு வரும் 1000 ரூபாய் 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த அதிரடி அறிவிப்பை பார்த்து தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் அதிர்ந்து போயினர். வாழ்த்து தெரிவிக்க வார்த்தைகள் தெரியாமல் திகைத்து போயினர். அந்த அளவுக்கு அவர்கள் ஒவ்வொருவர் மனதிலும் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது. எந்த சத்தமும் இல்லாமல் தமிழ்நாடு அரசு இந்த அதிரடியான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதற்கு காரணம் என்ன என்பதை விசாரித்த போது பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைக்கின்றன.

இந்த ஆண்டு தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டப் பேரவைத் தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் அசாம் மாநில தேர்தலை மனதில் வைத்து அங்கே ஏற்கனவே பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் ‘அருனோடோய்’ எனும் மாதாந்திர உதவித்தொகை திட்டத்தை முன்கூட்டியே வழங்கும் வகையில் 37 லட்சம் பெண் பயனாளிகளுக்கு பிப்ரவரி 20 அன்று 8,000 ரூபாய் ஒரே தவணையாக வழங்கப்படும் என ஆளும் பாஜ அரசு அறிவித்துள்ளது. அசாமில் நடைபெறும் கலாச்சார திருவிழாவான ‘பிஹு’ திருவிழாவிற்கான பரிசுத் தொகை என காரணம் கூறப்பட்டாலும் இந்த அறிவிப்பிற்கு பின்னணியில் பாஜவுக்கு வேறு திட்டங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

தேர்தலை காரணம் காட்டி தமிழ்நாடு, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித் தொகைத் திட்டம் நிறுத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் நடப்பதாகவும் தகவல்கள் கசிந்தது. அண்மையில் மகாராஷ்டிராவில் நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது பெண்களுக்கு அங்கு வழங்கப்படும் மகளிர் உதவித் தொகை திட்டத்தை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்தது. அதைப் பின்பற்றி வர இருக்கிற 5 மாநில சட்டப் பேரவை தேர்தல்களிலும் அரசு சார்பில் நிதியுதவி வழங்கும் திட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்கலாம் என எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அதேபோல தேர்தலில் மக்களை கவரும் விதத்தில் நிதி உதவி, இலவசங்களை அறிவிப்பதற்கு எதிராக கடந்த 2022ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பாஜவைச் சேர்ந்த அஸ்வினி உபாத்யாயா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். 5 மாநிலங்களில் தேர்தல் நடை பெற இருப்பதால் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார். இந்த வழக்கை மார்ச் மாத தொடக்கத்தில் விசாரிக்க இருக்கிறது உச்ச நீதிமன்றம். தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றை மனதில் வைத்துதான் பாஜ அசாமில் முன்கூட்டியே 8000 ரூபாய் வழங்க உள்ளது. மேலும் பாஜ ஆளாத மாநிலங்களான தமிழ்நாடு, மேற்குவங்கத்தில் பெண்களுக்கு நிதி கிடைப்பதில் நெருக்கடி ஏற்படுத்தலாம் என திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

அதற்காகவே பாஜவை சேர்ந்தவரை வைத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அப்படி நடந்தால் தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை பெறும் 1.31 கோடி மகளிர் பாதிக்கப்படுவார்கள், அதேபோல் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், ஆதரவற்றோர் நிதியுதவி போன்ற பல்வேறு திட்டங்களின் மூலம் நிதியுதவி பெறும் 2 கோடி பேர் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இவற்றை எல்லாம் முன்னுணர்ந்தே முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக திட்டமிட்டு அதிரடியாக மூன்று மாதங்களுக்கான நிதியை முன்கூட்டியே வழங்கியிருப்பதுடன் 2000 ரூபாய் கோடைக்கால சிறப்பு தொகுப்பாகவும் அறிவித்துள்ளார்.

அடுத்த ஆட்சியில் தற்போது வழங்கப்பட்டு வரும் 1000 ரூபாயை 2000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். குறுக்கு வழியில் நலத்திட்டங்களை முடக்க பாஜ போட்ட சதியை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த அறிவிப்பின் மூலம் பெண்கள் நலனின் மீது திராவிட மாடல் அரசிற்கு இருக்கும் அக்கறையை மீண்டும் நிரூபித்து விட்டார் என திமுகவினரும், பொதுமக்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். முதல்வரின் இந்த அதிரடி செயலுக்கு கூட்டணி கட்சியினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த அதிரடி அறிவிப்பை பார்த்து தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் அதிர்ந்து போயினர். வாழ்த்து தெரிவிக்க வார்த்தைகள் தெரியாமல் திகைத்து போயினர்.

Related Stories: