சென்னை: காசோலை மோசடி வழக்கில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமாருக்கு விதிக்கப்பட்ட ஆறு மாத சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மெல்லிசை, புரியாத புதிர், தரமணி உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த ஜெஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் நிறுவன உரிமையாளர் ஜெ.சதீஷ்குமார், சினிமா பைனான்சியரான ககன் போத்ராவிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் வகையில் கொடுத்த 47 லட்சம் ரூபாய்க்கான காசோலை வங்கியில் பணமின்றி திரும்பியது. இதையடுத்து, சதீஷ்குமார் மீது போத்ராவின் மகன் ககன்போத்ரா சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்றம், ஜெ.சதீஷ்குமாருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்ததோடு செக் தொகையை வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டுமென்று கடந்த 2024ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த தண்டனையை எதிர்த்து ஜெ.சதீஷ்குமார் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை 21வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஏ.பிரபாவதி, புகார்தாரரான ககன் போத்ரா, குற்றம் சாட்டப்பட்ட சதீஷ்குமாருக்கு எதிராக கூறிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்க உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. குற்றச்சாட்டுகள் மீது சந்தேகம் எழுகிறது. எனவே, சதீஷ்குமாருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.
