சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்ரவரி 23ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாதம் இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரம் அறிவிக்கப்பட உள்ளது.இந்நிலையில், வருகிற 17ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது. அன்றைய தினம் தமிழக அரசின் 2025-26ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அன்றைய தினமே வேளாண்மை இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது. இந்த கூட்டத்தொடர் பிப்ரவரி 20ம் தேதி வரை நடைபெற வாய்ப்புள்ளது. இதை தொடர்ந்து வருகிற 23ம் தேதி (திங்கள்) மாலை 6 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் பங்கேற்க அனைத்து அமைச்சர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அமைச்சரவை கூட்டத்தில், தமிழகத்தில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ள சில நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
