சென்னை: தமிழக அரசின் 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டுகளுக்கான சிறந்த நடிகர், நடிகைகள், திரைப்படம் மற்றும் சின்னத்திரை விருதுகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கினார். சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழாவில் 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான 7 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், 2014ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான 9 ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள், 2015-16ம் கல்வியாண்டு முதல் 2021-22ம் கல்வியாண்டு வரையிலான 6 கல்வியாண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் மாணவர் விருதுகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
சமுதாய சிந்தனைகளுடன் கூடிய மனித நல்லுணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்களை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில், சிறந்த தமிழ் திரைப்படங்கள், சிறந்த நடிகர், சிறந்த நடிகையர், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருக்கு திரைப்பட விருதுகளும், மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரும் பங்கு வகிக்கும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சிறந்த நெடுந்தொடர்கள், நெடுந்தொடர்களில் நடித்த சிறந்த கதாநாயகன், சிறந்த கதாநாயகி, ஆண்டின் சிறந்த சாதனையாளர், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருக்கு சின்னத்திரை விருதுகளும், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்கள் தயாரிக்கும் சிறந்த குறும்படங்களுக்கு மாணவர் விருதுகளும் தொடர்ந்து வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இடைப்பட்ட ஆண்டுகளில் வழங்கப்படாமல் இருந்த விருதுகள் அனைத்தையும் வழங்க ஆணையிட்டார். அதன்படி திரைப்படம் மற்றும் சின்னத்திரை விருதுகள் பெற்றவர்கள் விவரம்: தனுஷ், விஜய் சேதுபதி, கார்த்தி, ஆர்.பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு, விஷ்ணு விஷால் ஆகியோர் சிறந்த நடிகர்களாகவும், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சு வாரியர், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ், சாய் பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைகளாகவும் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.
‘மாநகரம்’, ‘அறம்’, ‘பரியேறும் பெருமாள்’, ‘அசுரன்’, ‘கூழாங்கல்’, ‘ஜெய் பீம்’, ‘கார்கி’ ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களாக தேர்வு செய்யப்பட்டு, விருதுகள் வழங்கப்பட்டது. ‘கனா’ படத்திற்காக சிறந்த தயரிப்பாளர் விருது சிவகர்த்திகேயனுக்கும், சின்னத்திரை விருதுகளுக்காக நடிகர்கள் எம்.ராஜ்குமரர், ஆர்.பாண்டியராஜன், கவுசிக், கிருஷ்ணா, தலைவாசல் விஜய், வ.சஞ்சீவ், ஜெய் ஆகாஷ், கார்த்திக் ராஜ், சஞ்சீவ் ஆகியோர் சின்னத்திரையின் சிறந்த கதாநாயகர்களாகவும், நடிகைகள் ஆர்.ராதிகா சரத்குமார், வாணி போஜன், நீலிமா ராணி, சங்கவி, ரேவதி, ரேஷ்மா, சபானா ஷாஜகான், கேபிரில்லா செல்லஸ், சைத்ரா ஆகியோர் சின்னத்திரையின் சிறந்த கதாநாயகிகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
‘அழகி’, ‘ரோமாபுரி பாண்டியன்’, ‘இராமனுஜர்’, ‘நந்தினி’, ‘பூவே பூச்சூடவா’, ‘செம்பருத்தி’, ‘ராசாத்தி’, ‘சுந்தரி’, ‘எதிர்நீச்சல்’ ஆகிய தொடர்கள் சிறந்த நெடுந்தொடர்களாகவும் தேர்வு செய்யப்பட்டு, விருதுகள் வழங்கப்பட்டது. சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சமும், 2ம் பரிசாக ரூ.1 லட்சமும், 3ம் பரிசாக ரூ.75 ஆயிரமும், சிறப்பு பரிசாக ரூ.75 ஆயிரமும், பெண்களை பற்றி உயர்வாக சித்தரிக்கும் படத்துக்கு சிறப்பு பரிசு ரூ.1.25 லட்சமும் வழங்கப்பட்டது. சிறந்த நடிகர், நடிகையர், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சின்னத்திரை சிறந்த நெடுந்தொடர்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சமும், 2ம் பரிசாக ரூ.1 லட்சமும், ஆண்டின் சிறந்த சாதனையாளர் பரிசாக ரூ.1 லட்சமும், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் பரிசாக ரூ.1 லட்சமும் வழங்கப்பட்டது. சிறந்த கதாநாயகன், கதாநாயகி, சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
