சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அருள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக, எட்டு வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 27 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 14 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அருள், மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அருள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 500 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் அருள் கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றார் முறையாக சிகிச்சை பெற அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரினார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த அரசு சிறப்பு வழக்கறிஞர், மருத்துவக்குழுவை நியமித்து, அருளை பரிசோதித்து, குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் மேல் சிகிச்சை வழங்கலாம் என தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சட்டம் ஒழுங்கு பராமரிக்கவும், பாதுகாப்புக்கும், அதிக எண்ணிக்கையில் காவலர்கள் தேவைப்படுவதால் கைதிகளை காவல் நீட்டிப்புக்கு நேரில் ஆஜர்படுத்த இயலவில்லை என்று சென்னை காவல் ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பணிக்கு அதிக காவல் துறையினர் ஈடுபடுத்த வேண்டியுள்ளதால் சிகிச்சைக்கு மருத்துவமனை அழைத்து செல்லப்படும் கைதிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு சாத்தியமில்லை என்பது நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. மனுதாரரை மருத்துவக்குழு மூலம் பரிசோதித்து, சிகிச்சை அளிக்கலாம் என்ற அரசு சிறப்பு வழக்கறிஞர் யோசனையை ஏற்க முடியாது.எனவே, ஸ்டான்லி மருத்துவமனை அறிக்கையையின்படி வழக்கறிஞர் அருள் சிகிச்சை பெறுவதற்காக எட்டு வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படாவிட்டால், தினமும் காலை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். ஏப்ரல் 10ம் தேதி சரணடைய வேண்டும் என்று நிபந்தனை விதித்து உந்தவிட்டார்.
