தீரன் சின்னமலை வெண்கலச் சிலை மற்றும் சி. முத்துசாமி திருவுருவச் சிலைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13.2.2026) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில், நாமக்கல் மாவட்டம், நவணி தோட்டக்கூர்பட்டி கிராமத்தில் 2 கோடியே 66 இலட்சம் ரூபாய் செலவில் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப. சுப்பராயனுக்கு மார்பளவு சிலையுடன் கூடிய அரங்கம், அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் கிராமத்தில் 3 கோடி ரூபாய் செலவில் இந்தி திணிப்பினை எதிர்த்துப் போராடி முதன் முதலில் உயிர்த் தியாகம் செய்த கீழப்பழுவூர் சின்னச்சாமிக்கு அரங்கம், ஈரோடு மாவட்டம், அரச்சலூர் ஓடாநிலையில் அமைந்துள்ள தீரன் சின்னமலை மணிமண்டப வளாகத்தில் 1 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள குதிரையின் மேல் அமர்ந்தபடி உள்ள தீரன் சின்னமலை அவர்களின் வெண்கலச் சிலை, கரூர் மாவட்டம், எல்லைகாட்டு ராமச்சந்திரபுரம் கிராமத்தில் 50 இலட்சம் ரூபாய் செலவில் கரூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி. முத்துசாமிக்கு திருவுருவச் சிலை ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டின் புகழ்சால் பெருந்தகையாளர்கள், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு தமிழ்நாட்டிற்குப் பெருமைத் தேடித்தந்த அறிஞர் பெருமக்கள், சமூகநீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையிலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நினைவகங்கள், திருவுருவச் சிலைகள், அரங்கங்கள், நினைவுத் தூண்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப. சுப்பராயன் அவர்களுக்கு அரங்கம் திறப்பு; செய்தி மக்கள் தொடர்புத் துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், தமிழுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் அயராது உழைத்தவரும், சமூகநீதிக் கோட்பாடுகளுக்காகச் சட்டவடிவம் கொடுத்தவருமான, சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப. சுப்பராயனுக்கு சேவைகளை நினைவுகூறும் வகையில் நாமக்கல் நகரில் அன்னாரின் பெயரில் ஓர் அரங்கம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நாமக்கல் மாவட்டம், நவணி தோட்டக்கூர்பட்டி கிராமத்தில் 2 கோடியே 66 இலட்சம் ரூபாய் செலவில் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப. சுப்பராயனுக்கு மார்பளவு சிலையுடன் கூடிய அரங்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்தித் திணிப்பினை எதிர்த்துப் போராடி முதன் முதலில் உயிர்த் தியாகம் செய்த கீழப்பழுவூர் சின்னச்சாமி அவர்களுக்கு அரங்கம் திறப்பு; செய்தி மக்கள் தொடர்புத் துறையின் 2023-24 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், தமிழ் மொழி மீது தீராத பற்றுக் கொண்டு, இந்தி திணிப்பினை எதிர்த்துப் போராடி முதன் முதலில் உயிர்த் தியாகம் செய்த கீழப்பழுவூர் சின்னச்சாமி அவர்களுக்கு அரியலூர் மாவட்டத்தில் அரங்கம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் கிராமத்தில், இந்தி திணிப்பினை எதிர்த்து உயிர்தியாகம் செய்த மொழிப்போராட்ட தியாகி கீழப்பழுவூர் சின்னச்சாமி அவர்களுக்கு 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரங்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

தீரன் சின்னமலை மணிமண்டப வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள குதிரையின் மேல் அமர்ந்தப்படி உள்ள தீரன் சின்னமலை வெண்கலச் சிலை; தீரன் சின்னமலை இளம் வயதிலேயே போர்க்கலைகளான வாள்பயிற்சி, வில் பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம், தடிவரிசை போன்ற பல்வேறு துணிச்சலான போர்க்கலைகளை கற்றுத் தேர்ந்து, சிறந்த வீரராக திகழ்ந்ததோடு, போர் யுக்திகளைத் தனது படைகளுக்கு கற்றுத்தந்து இந்திய விடுதலைப் போரில் பங்கேற்று ஆங்கிலேயர்களுக்கு சவால்விட்டு அவர்களின் கிழக்கிந்திய கம்பெனியை அடியோடு அழிக்க எண்ணினார். ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவை மீட்க மைசூர் மன்னன் திப்பு சுல்தான் உடன் இணைந்து செயல்பட்டார்.

கொங்கு மண்ணில், அன்றைய மைசூர் அரசு வசூலித்த வரியைத் தடுத்து சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே ஒரு சின்னமலை” என்று பெயர் பெற்றார். மைசூரில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடைபெற்ற மூன்று போர்களிலும் திப்பு சுல்தான், தீரன் சின்னமலை கூட்டணி வெற்றியடைந்ததைக் கண்டு வெகுண்டெழுந்த ஆங்கிலேயர்கள் பல புதிய போர் யுக்திகளைக் கையாண்டனர். மைசூர் மன்னர் திப்பு சுல்தான் நான்காம் மைசூர் போரில் போர்களத்திலே வீரமரணமடைந்தார். தொடர்ச்சியாக நடைபெற்ற பல போர்களில் தோல்வியடைந்த ஆங்கிலேயர்கள் கோபமடைந்து தீரன் சின்னமலையை சூழ்ச்சி செய்து அவரையும், அவரது சகோதரர்களையும் கைது செய்து சங்ககிரிக் கோட்டையில் தூக்கிலிட்டனர்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் சென்னை, கிண்டியில் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டு, 4.10.1998 அன்று முத்தமிழறிஞர் கலைஞரால் திறந்து வைக்கப்பட்டது. தீரன் சின்னமலை அவர்களுக்கு சிறப்பு செய்கின்ற வகையில், ஈரோடு மாவட்டம், அரச்சலூர் ஓடாநிலையில் அமைந்துள்ள தீரன் சின்னமலை மணிமண்டப வளாகத்தில் 1 கோடி ரூபாய் செலவில் சென்னை, கிண்டியில் குதிரையின் மேல் அமர்ந்தபடி உள்ள தீரன் சின்னமலை அவர்களின் வெண்கல சிலையைப் போன்று நிறுவப்பட்டுள்ள தீரன் சின்னமலை அவர்களின் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

கரூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி. முத்துசாமி அவர்களுக்கு திருவுருவச் சிலை; செய்தி மக்கள் தொடர்புத் துறையின் 2024-25 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், காவேரி மீட்புக் குழுவில் இணைந்து போராடியவரும், விவசாயிகளின் நலன்களுக்காகப் பாடுபட்டவரும், கரூர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்ட சி. முத்துசாமி அவர்களுக்கு கரூரில் திருவுருவச் சிலை நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பின்படி, கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், எல்லைகாட்டு ராமச்சந்திரபுரம் கிராமத்தில் கரூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி. முத்துசாமிக்கு 50 இலட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள திருவுருவச்சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.இரா.வைத்திநாதன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: