1.48 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ரூ.37 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு அடிக்கல்: ரூ.31,934 கோடியில் 52 திட்டங்கள் தொடக்கம், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

சென்னை: சென்னையில் நேற்று நடந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயலாக்க மாநாட்டில், 1.48 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் வகையில் ரூ.37 ஆயிரம் கோடி முதலீட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.31 ஆயிரத்து 934 கோடியில் 52 திட்டங்களையும் தொடங்கி வைத்தார். மேலும், 5,000 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் 5000 பேருக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு என்ற வகையில், 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.

முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டினை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக வளர்ச்சி அடையச் செய்யவேண்டும் என்றும், அவ்வளர்ச்சி, சீராக, பரவலாக மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டதோடு, தொழில் தொடங்கிட மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும், செயல்பாட்டு நிலைகளுக்கு வரவேண்டும் என்றும் இலக்கு நிர்ணயித்தார்.

அவ்வாறே, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட அனைத்து திட்டங்களும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு, அத்திட்டங்களுக்கு தேவையான ஆதரவுச் சேவைகளை மேற்கொண்டு வந்த காரணத்தால், பெரும்பாலான திட்டங்கள், தற்போது மேம்பட்ட செயல்பாட்டு நிலைகளை அடைந்துள்ளன. இந்நிலையை மேலும் மேம்படுத்தும் வகையில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், முதலீடுகள் செயலாக்க மாநாடு மேற்கொள்ளப்பட்டது.

தூத்துக்குடி, ஓசூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது போடப்பட்ட பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தற்போது மேம்பட்ட செயல்பாட்டு நிலைகளை அடைந்துள்ளன. அதுபோலவே, தமிழ்நாடு முதல்வர் பல்வேறு அயல்நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட போது மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் தற்போது மேம்பட்ட செயல்பாட்டு நிலைகளை அடைந்துள்ளன. இத்திட்டங்கள் நேற்று தமிழ்நாடு முதல்வரால், அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கப்பட்டன.

இந்த மாநாட்டின் போது, ரூ.36,968 கோடி முதலீட்டில் 60,823 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 71 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. அதுபோல, ரூ.31,934 கோடி முதலீட்டில் 82,664 பேருக்கு வேலை வழங்கிடும் வகையில் 52 முடிவுற்ற திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டது. அதில் சில முக்கிய திட்டங்களின் விவரங்கள்: தூத்துக்குடி முதலீட்டாளர் மாநாட்டில், கைநஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டுகள், எச்டிஐ பிசிபி, நெகிழ்வான பிசிபி உற்பத்தி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

நேற்றையதினம், இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. இதன்மூலம், தூத்துக்குடி ஒரு மிகப்பெரிய மின்னணு உற்பத்தி மையமாக உருவாகும். தமிழ்நாடு முதல்வர் இங்கிலாந்து அரசுப் பயணத்தின்போது, ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்தின் உலகளாவிய திறன் மைய விரிவாக்கம் அமைப்பதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது, நேற்றையதினம் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி அரசுப் பயணத்தின்போது, நார் பிரெம்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ரயில்வேத் துறையில், ஈர்க்கப்பட்டுள்ள மிகப்பெரிய திட்டமாகும் இது. ரயில்களுக்கான, கதவுகள் மற்றும் பிரேக்குகள் உற்பத்தி செய்வதற்கும், தொழில்நுட்ப உற்பத்தி மையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மையம் என்று பல்வேறு திட்டங்களில், இந்நிறுவனம் முதலீடு மேற்கொள்ள உள்ளது. சிப்காட் மாம்பாக்கம் தொழிற்பூங்காவில், இன்றையதினம் இந்த உற்பத்தி திட்டத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே நுகர்வோர் பொருட்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான, டாபர் நிறுவனம், தென்னிந்தியாவிலேயே முதல் உற்பத்தி நிலையமாக, தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்து திண்டிவனத்தில் நிறுவ உள்ளனர்.

டாபர் நிறுவனம் பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்ய உள்ள இத்திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. மேம்பட்ட மின்னணுவியல் துறையில், முன்னணி நிறுவனமான விவிடிஎன் நிறுவனம், பொள்ளாச்சியில் தன்னுடைய திட்டத்தை பெரிய அளவில் நிறுவியுள்ளது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த பெண்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, இந்நிறுவனத்தில் பெருமளவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா சால்ட் நிறுவனம், ராமநாதபுரம் மாவட்டத்தில், சிப்காட் வாலிநோக்கத்தில், தனது திட்டத்தை நிறுவ உள்ளது. இத்திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ன் போது மேற்கொள்ளப்பட்டது. உலகப் புகழ்பெற்ற நிறுவனமான ஜான்சன் எலக்ட்ரிக் நிறுவனம், மோட்டார்கள், மோட்டார் வாகன மின்னணு பொருட்கள், உயர்தர காந்தப் பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்திக்காக, ராணிப்பேட்டை சிப்காட் பனப்பாக்கம் வளாகத்தில், தனது திட்டத்தினை நிறுவ திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு நேற்று அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கோயம்புத்தூரில் நடந்த முதலீட்டு மாநாட்டின் போது மேற்கொள்ளப்பட்டது. நேற்றையதினம், அடிக்கல் நாட்டப்பட்ட மற்றும் தொடங்கப்பட்ட திட்டங்கள், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கோயம்புத்தூர், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: தமிழ்நாடு முதல்வர் முன்னிலையில் பாரத் பயோடெக் நிறுவனம், 5000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்க உள்ள உயிரியல் மற்றும் மருந்துகள் உற்பத்தி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் ஹுண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன் நிறுவனம், 7000 மாணவர்களுக்கு திறன்பயிற்சி மேற்கொள்ளும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகிய 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

மேற்கூறிய திட்டங்கள், பல்வேறு துறைகளில், மாநிலம் முழுவதும் நிறுவப்பட உள்ளது என்பதுதான் இன்றைய மாநாட்டின் சிறப்பம்சமாகும். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் அருண்ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தாரேஸ் அகமது,

ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டாகுடோ ஐவானகா, பிஐஜி டெக் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ராஜு பாண்டியன், நார் பிரெம்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மார்கஸ் பெர், பாரத் பயோ டெக் நிறுவனத்தின் செயல் தலைவர் கிருஷ்ணா எல்லா, டாபர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் மோகித் மல்கோத்ரா உள்ளிட்ட தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: