காவல்துறை சார்பில் ரூ.122.19 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்து கட்டப்படவுள்ள அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மற்றும் தடய அறிவியல் துறை சார்பில் ரூ.122.19 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்து, ரூ.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டி, சிறந்த அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு கலைஞர் காவல் கோப்பையை வழங்கி, காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் மோப்ப நாய் பிரிவின் பயன்பாட்டிற்காக மொத்தம் 360 புதிய வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (13.02.2026) தலைமைச் செயலகத்தில், காவல் துறை சார்பில் 82 கோடியே 9 இலட்சத்து 82 ஆயிரம் ரூபாய் செலவிலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 35 கோடியே 02 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் தடய அறிவியல் துறை சார்பில் 5 கோடியே 06 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மரபணு பிரிவுக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்து, 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும், 2025-ஆம் ஆண்டிற்கான மூன்று சிறந்த அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு கலைஞர் காவல் கோப்பைகளை வழங்கி, காவல் நிலைய அதிகாரிகளின் பயன்பாட்டிற்கென 27 கோடி ரூபாய் செலவில் 300 புதிய நான்கு சக்கர வாகனங்களையும், மோப்ப நாய் பிரிவின் பயன்பாட்டிற்காக 10 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் 60 புதிய வாகனங்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றிவரும் காவல் துறையின் பணிகள் சிறக்க, புதிய காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள் கட்டுதல், “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் காவலர்களுக்கு குடியிருப்புகள், பாதுகாப்பு பணிகளுக்காக ரோந்து வாகனங்களை கொள்முதல் செய்தல், காவல்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை காவல்துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்திடும் வகையில் 573.05 கோடி ரூபாய் செலவில் 3418 காவலர் குடியிருப்புகள், 73.65 கோடி ரூபாய் செலவில் 56 காவல் நிலையக் கட்டடங்கள், 180.16 கோடி ரூபாய் செலவில் 31 காவல்துறை இதர கட்டடங்கள் மற்றும் “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் 55.19 கோடி ரூபாய் செலவில் 253 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளன.

* காவல்துறை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களின் விவரங்கள்

கடலூர் மாவட்டம் – கடலூர் ஆயுதப்படை வளாகத்தில் 49 கோடியே 10 இலட்சத்து 7 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 179 காவலர், தலைமைக் காவலர் குடியிருப்புகள்;

சென்னை மாவட்டம் – துறைமுகத்தில் 1 கோடியே 77 இலட்சத்து 87 ஆயிரம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட காவல் நிலையம்; இராமநாதபுரம் மாவட்டம் – பரமக்குடியில் 2 கோடியே 12 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நகர் காவல் நிலையம் மற்றும் தென்காசி மாவட்டம் – புளியரையில் 1 கோடியே 61 இலட்சத்து 59 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம்;

சென்னை மாவட்டம் – கீழ்பாக்கம் காவலர் குடியிருப்பில் 14 கோடியே 31 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவலர்கள் தங்கும் பாளையம் மற்றும் ஆலந்தூரில் 3 கோடியே 31 இலட்சத்து 81 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவலர்களின் குழந்தைகளை கல்வி மற்றும் விளையாட்டில் வழிநடத்த உடற்பயிற்சிகூடம், நூலகம் மற்றும் கல்வி மையம்;

மதுரை மாவட்டம் – மதுரை தல்லாகுளத்தில் 7 கோடியே 12 இலட்சத்து 47 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பெண்காவலர்களுக்கு தங்கும் விடுதி; கரூரில் 82 இலட்சத்து 01 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சிறப்புப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை கட்டடம் மற்றும் 90 இலட்சத்து 72 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை கட்டடம்; தேனி மாவட்டம் – தேனி ஆயுதப்படை வளாகத்தில் 1 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவலர் பல்பொருள் அங்காடி; என மொத்தம் 82 கோடியே 9 இலட்சத்து 82 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவல்துறை கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

* தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களின் விவரங்கள்

செங்கல்பட்டு மாவட்டம் – பெரும்பாக்கத்தில் 15 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான 40 குடியிருப்புகள் மற்றும் விருதுநகர் மாவட்டம் – சிவகாசியில் 6 கோடியே 15 இலட்சத்து 14 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான 33 குடியிருப்புகள்;

சென்னை மாவட்டம் – கிண்டி மற்றும் திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் 8 கோடியே 86 இலட்சத்து 29 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் மற்றும் திருச்சி மாவட்டம் – ஸ்ரீரங்கத்தில் 4 கோடியே 81 இலட்சத்து 12 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம்; என மொத்தம் 35 கோடியே 2 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

* தடய அறிவியல் துறை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தின் விவரம்

திருநெல்வேலி மாவட்டம் – பாளையங்கோட்டையில் 5 கோடியே 6 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மரபணு ஆய்வு பிரிவுக் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மற்றும் தடய அறிவியல் துறை சார்பில் மொத்தம் 122 கோடியே 19 இலட்சத்து 27 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

* தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டுதல்

செங்கல்பட்டு மாவட்டம், மேற்கு தாம்பரம், காந்தி சாலையில் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்.

சிறந்த அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு கலைஞர் காவல் கோப்பை
தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு கலைஞர் காவல் கோப்பை வழங்கப்படுகிறது.

அதன்படி, 2025-ஆம் ஆண்டிற்கான கலைஞர் காவல் கோப்பை மாநில அளவில் முதலிடம் பெற்ற விழுப்புரம் காவல் நிலையத்திற்கும், இரண்டாம் இடம் பெற்ற திண்டுக்கல் நகர காவல் நிலையத்திற்கும், மூன்றாம் இடம் பெற்ற பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.

* காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் மோப்ப நாய் பிரிவுகளுக்கான புதிய காவல் வாகனங்கள்

காவல்துறை கட்டமைப்பை வலுப்படுத்தவும், அதன் செயல்திறனை மேம்படுத்தவும், மாநிலம் முழுவதும் உள்ள மாநகரங்கள், மாவட்டங்கள் மற்றும் பல்வேறு சிறப்பு பிரிவுகளின் பயன்பாட்டிற்கென 27 கோடி ரூபாய் செலவிலான 300 புதிய நான்கு சக்கர வாகனங்களையும், காவல் படை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், மோப்பநாய் பிரிவின் பயன்பாட்டிற்காக 10 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் 60 புதிய வாகனங்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், காவல்துறை தலைமை இயக்குநர் (பொறுப்பு) ஜி.வெங்கடராமன், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் சீமா அகர்வால், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வினித் தேவ் வான்கேடே, சென்னை மாநகர காவல் ஆணையர் ஆ. அருண், தடய அறிவியல் துறை இயக்குநர் அ. விசாலாட்சி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: