சென்னை: பாஜவின் டப்பா எஞ்சின் முன், திராவிட மாடல் சூப்பர் பாஸ்ட் இன்ஜின் என்றும் தலைகுனியாது. நாம் போராடுவது, திமுகவின் வெற்றிக்காக அல்ல, தமிழ்நாட்டின் வெற்றிக்காக என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்ற பெயரில் வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் சென்னை, விழுப்புரம் மண்டல வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி நடைபெற்றது.
இதில், கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சென்னையில் மொத்தம் 21 தொகுதிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் 6 தொகுதிகள், காஞ்சிபுரத்தில் 10 தொகுதிகள், கடலூர் கிழக்கில் 5 தொகுதிகள், விழுப்புரம் மாவட்டத்தில் 7 தொகுதிகள் என்று, மொத்தம் 49 தொகுதிகளின் வெற்றியை உறுதி செய்ய நாம் இங்கு கூடியிருக்கிறோம். சென்னையும் – வட தமிழ்நாடும் எப்போதுமே திமுகவின் கோட்டை என்று மீண்டும் நிரூபித்துக் காட்ட வேண்டும். தேர்தல் பணி என்று வந்துவிட்டால், திமுக உடன்பிறப்புகளை அடித்துக்கொள்ள ஆளே இல்லை, இதை நான் மட்டுமல்ல, கழகத்தின் எதிரிகளே பல நேரங்களில், பல சந்தர்ப்பங்களில் சொல்லியிருக்கிறார்கள்.
அதே வேகம், அதே ஆற்றல், அதே சுறுசுறுப்பு, அதே கவனத்துடன், இந்த முறையும் உழைக்க நீங்கள் தயாரா. தமிழ்நாடு முழுவதும் அனைத்து பூத்திலும் 100 வாக்காளர்களுக்கு ஒரு உறுப்பினர் வீதம், ஒவ்வொரு பூத்திலும் சராசரியாக 10 வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களை நியமித்திருக்கிறோம். மைக்ரோ மேனேஜ்மென்ட்-ஆக இருந்தாலும் சரி, மேக்ரோ மேனேஜ்மென்ட்-ஆக இருந்தாலும் சரி, தேர்தல் களத்தில் திமுகதான் ஹீரோ. இந்தியாவில் வேறு எந்த கட்சிக்கும் இல்லாத கட்டமைப்பு நம்மிடம் இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள மொத்த பூத்களின் எண்ணிக்கை 75 ஆயிரம்.
ஒவ்வொரு பூத்திற்கும் நாம் செட் பண்ணியிருக்கும் ‘மினிமம் டார்கெட்’ எவ்வளவு தெரியுமா, 350 வாக்குகள். இந்த டார்கெட்டை நாம் அச்சீவ் செய்தாலே, 2 கோடியே 60 லட்சம் வாக்குகளுக்கு மேல் நாம் வாங்கிவிடலாம். இந்த தேர்தலில் நாம் கட்டாயம் 2 கோடியே 50 லட்சம் வாக்குகளுக்கு குறையாமல் வாங்கியாக வேண்டும் என்று சொல்லிருந்தேன். இதை சாத்தியப்படுத்தி காட்டுவது உங்களின் பொறுப்பு, இதை எப்படி செய்வது, ரொம்ப சிம்ப்பிள், நீங்கள் ஒவ்வொருவரும் குறைந்தது 40-50 வாக்குகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். இதை வெற்றிகரமாக செய்தாலே, வெற்றி உறுதி.
ஏற்கனவே ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரை மூலமாக, 1 கோடியே 14 லட்சம் குடும்பங்கள் திமுகவில் இணைந்திருக்கிறார்கள். இதில், ஒரு வாக்குகூட மிஸ் ஆகாமல், உதயசூரியனுக்கும் – கூட்டணிக் கட்சி சின்னங்களுக்கும் விழ வேண்டும். ஓரணியில் தமிழ்நாடு மட்டுமல்லாமல், எஸ்.ஐ.ஆர். பட்டியல் திருத்தம் மூலமாகவும் ஏற்கனவே 2, 3 முறை, தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டையும் நாம் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி இருக்கிறோம். அடுத்ததாக, ‘ஸ்டாலின் மகளிர் படையில் இருக்கும் மகளிரணியினர் வீடு வீடாக பிரசாரத்தை தொடங்கப் போகிறார்கள். ஏன் இதையெல்லாம் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், நம்முடைய பிரசாரமே அடிமட்டத்தில் இருந்து ஒவ்வொரு குடும்பத்தையும், ஒவ்வொரு வாக்கையும் கவனத்தில் வைத்து தான் உருவாக்கியிருக்கிறோம்.
தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை, எங்குமே இல்லாத நிலைதான் இன்றைக்கு இருக்கிறது. இதை அப்படியே நமக்கு ஆதரவான வாக்குகளாக மாற்றி, வெற்றியை அறுவடை செய்வது உங்கள் கையில்தான் இருக்கிறது. 2021ல் இருந்ததைவிட, தமிழ்நாடு முழுவதும் நமக்கான வரவேற்பும், ஆதரவும் கூடி இருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் வாங்கிய வாக்குகளைச் சட்டமன்றத் தொகுதி வாரியாகப் பார்த்தால், தெளிவாகத் தெரியும். நிச்சயமாக 2026-லும் 200 தொகுதிகளுக்கு மேல் நம்மால் வெல்ல முடியும். அதற்கு, ஒவ்வொரு வாக்கும் முக்கியம். ஒவ்வொருவரும் தங்கள் மாவட்டத்திற்கு தொகுதிக்கு நகரத்திற்கு அரசு செய்து கொடுத்திருக்கும் திட்டங்களை மக்கள் மத்தியில் பரப்புரை செய்ய வேண்டும்.
நம்முடைய கூட்டணியைத் தவிர வேறு யாருக்கு வாக்களித்தாலும், இதுவரை நாம் செய்து கொண்டு வரும் நலத்திட்டங்கள் நின்றுவிடும், தமிழ்நாட்டின் தொகுதி அளவையே குறைத்து விடுவார்கள். இதுவரை நாம் சாதித்துக் காட்டியிருக்கும் வளர்ச்சியைப் பின்னோக்கிக் கொண்டு சென்றுவிடுவார்கள். வளர்ச்சி அரசியல் மாறி, கலவர அரசியல்தான் தமிழ்நாட்டில் நடக்கும். நடக்க இருக்கும் தேர்தல், 2 கூட்டணிகளுக்கு இடையில் நடக்கும் தேர்தல் அல்ல இது, தமிழ்நாடு வெர்சஸ் என்டிஏ பாமர மக்களுக்கும் புரிவது மாதிரி இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், வெல்லப் போவது, தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? இதை முடிவு செய்யப் போவதுதான் இந்தத் தேர்தல் அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, நம்முடைய தாய்த் தமிழ்நாட்டைக் காக்க, அனைவரும் திமுகவை ஆதரித்தாக வேண்டிய செயல் தேவையை விளக்க வேண்டும்.
ஒன்றிய பாஜ அரசு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, பட்ஜெட், பேரிடர் நிவாரணம், கல்வி நிதி என்று தொடர்ந்து தமிழ்நாட்டிற்குச் செய்யும் வஞ்சகத்தையும், அதை எதிர்த்து கேள்வி எழுப்பாத அடிமை அதிமுகவின் துரோகத்தையும் மக்கள் முன் தோலுரிக்க வேண்டும்.வெறுப்பை விதைத்து, வன்முறையைத் தூண்டி, மக்களைப் பிளவுபடுத்தி, அதன் மூலம் வெற்றி பெறலாம் என்று துடிக்கும் விஷ விதைகளைத் தமிழ்நாட்டிற்குள் விடவே கூடாது. நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நாம் போராடுவது, திமுகவின் வெற்றிக்காக அல்ல, தமிழ்நாட்டின் வெற்றிக்காக பாஜவின் டப்பா இன்ஜின் முன், தமிழ்நாட்டின் திராவிட மாடல் சூப்பர் பாஸ்ட் இன்ஜின் என்றும் தலைகுனியாது.
இந்த உறுதியைத் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும், ஒவ்வொரு வாக்காளருக்கும் கொண்டு செல்ல வேண்டியது உங்களின் வேலை, களப்பணி மட்டும்தான், இனி உங்களின் முழுப் பணி, உங்களின் ஒவ்வொரு நிமிட உழைப்பும், ஒரு வாக்கு கூட்டணி, தொகுதிப் பங்கீடு, எந்தத் தொகுதி யாருக்கு, வேட்பாளர் யார், இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாதீர்கள். நான் பார்த்துக் கொள்கிறேன். அதை என்னிடம் விட்டுவிடுங்கள். எங்கு – யார் நின்றாலும் 234 தொகுதிகளிலும் தலைவர்தான் இந்த ஸ்டாலின்தான் வேட்பாளர் என்று நினைத்து வேலை பாருங்கள் ஒற்றுமை இல்லாமல் இலக்கை அடைய முடியாது.
அதனால், தோழமைக் கட்சிகளுடன் ஒற்றுமை உணர்வுடன் நாம் பணியாற்ற வேண்டும். இதைச் செய்தாலே, 2024 போன்று முழு வெற்றி நம்முடைய வசமாகிவிடும். என்னை தினமும் நீங்கள் செய்திகளில் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். தினமும் எத்தனை நிகழ்ச்சிகள், எத்தனை கூட்டங்கள், எத்தனை சந்திப்புகள், எத்தனை ஆய்வுகள் ஓய்வே இல்லாமல் உழைத்துக் கொண்டு இருக்கிறேன். இந்த இயக்கத்தின் தலைவராக நான் பொறுப்பேற்றுக் கொள்ளும்போது, “என் சக்தியையும் மீறி நான் உழைப்பேன்” என்று சொன்னேன். சொன்னபடியே உழைத்துக் கொண்டு இருக்கிறேன்! நான் மட்டுமா உழைக்கிறேன்.
இங்கு மேடையில் இருக்கும் மாவட்டச் செயலாளர்களானாலும் சரி, நிர்வாகிகளானாலும் சரி, பூத் அளவில் இருக்கும் நீங்களும் சரி, ஓய்வில்லாமல்தான் உழைத்துக் கொண்டு இருக்கிறீர்கள், இந்தியாவில் வேறு எந்தக் கட்சியும் இவ்வாறு வேலை செய்யாது. இவ்வாறு நாம் உழைக்கும் காரணத்தினால்தான், தமிழ்நாடும் நம்பர் ஒன்-ஆக இருக்கிறது, திராவிட முன்னேற்றக் கழகமும் நம்பர் ஒன்-ஆக இருக்கிறது. தொடர்ந்து வெல்ல, உழைப்போம், மீண்டும் வெல்வோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தேர்தல் பணி என்று வந்துவிட்டால், திமுகவினரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை, இதை நான் மட்டுமல்ல, நமது எதிரிகளே பல நேரங்களில், பல சந்தர்ப்பங்களில் சொல்லியிருக்கிறார்கள். அதே வேகம், அதே ஆற்றல், அதே சுறுசுறுப்பு, அதே கவனத்துடன், இந்த முறையும் உழைக்க நீங்கள் தயாரா.
