தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பசுமை தாமிரம் உற்பத்தி செய்ய அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பசுமை தாமிர உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, நீர், நிலம், காற்று மாசு ஏற்படுத்துவதாகக் கூறி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட 2018ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில், பசுமை தாமிர உற்பத்தி தொழிற்சாலை அமைக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு வேதாந்தா நிறுவனம் கடந்த ஜனவரி 9ம் தேதி விண்ணப்பித்திருந்தது. பசுமை தாமிரம் குறித்த பல்வேறு ஆய்வு அறிக்கைகளை இணைத்து அளிக்கப்பட்ட இந்த விண்ணப்பத்தை நிராகரித்து கடந்த ஜனவரி 27ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து நீதிமன்ற கண்காணிப்பில் தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம், ஒன்றிய சுற்றுச்சூழல் துறை, ஒன்றிய மாசு கட்டுப்பாடு வாரியம், ஒன்றிய சுரங்க துறை அதிகாரிகள், நிபுணர்கள் அடங்கிய பன்னோக்கு நிபுணர் குழுவை அமைத்து பசுமை தாமிரம் உற்பத்தி ஆலை அமைப்பது குறித்து விரிவாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

மனுவில், பன்னோக்கு நிபுணர் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைப்பது தொடர்பாக அரசுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வேதாந்தா நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், விண்ணப்பத்தின் அடிப்படையில் ஆலையை ஆய்வு செய்யும் முன்பு வேதாந்தா நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்கவில்லை. விண்ணப்பத்தை நிராகரிக்கும் முன்பு விளக்கமளிக்க அவகாசம் வழங்கவில்லை. இது விதிகளுக்கு முரணானது.

அதனால் பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைப்பது குறித்து ஒன்றிய மாசு கட்டுப்பாடு வாரியம், ஒன்றிய சுற்றுச்சூழல் துறை, கனிம வளத்துறை நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். அதற்கு, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், ஏற்கனவே மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை புதுப்பிக்கும் வகையில் இத்திட்டத்தை முன்வைத்துள்ளனர். அந்த இடம் மாசடைந்துள்ளது. புதிய மொந்தையில் பழைய கள் என்பது போல இத்திட்டத்தை வேதாந்தா முன் வைத்துள்ளது, என்றார். இதையடுத்து, விதிகளின்படி விளக்கமளிக்க அவகாசம் வழங்கவில்லை என்று வேதாந்தா தரப்பில் கூறுவதால், தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து விளக்கமளிக்க அவகாசம் வழங்கலாமே என்று நீதிபதிகள் கூடுதல் அட்வகேட் ஜெனரலிடம் தெரிவித்தனர்.

இதுசம்பந்தமாக அரசின் கருத்தை அறிந்து தான் பதிலளிக்க முடியும் என்று கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார். இதையடுத்து, வேதாந்தா மனுவுக்கு பதில்மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், பசுமை தாமிர ஆலை அமைப்பது தொடர்பாக ஒன்றிய சுற்றுச்சூழல் துறை, கனிமவளத்துறை மற்றும் ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரிய நிபுணர்கள் குழுவை அமைப்பது குறித்தும் விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 26ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். ஏற்கனவே மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை புதுப்பிக்கும் வகையில் இத்திட்டத்தை முன்வைத்துள்ளனர். அந்த இடம் மாசடைந்துள்ளது. புதிய மொந்தையில் பழைய கள் என்பது போல இத்திட்டத்தை வேதாந்தா முன் வைத்துள்ளது, என தமிழக அரசு வாதிட்டது.

Related Stories: