கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே சலவை தொழிலாளி வீட்டில் பிரிட்ஜ் வெடித்து தீப்பிடித்ததில், நகை, பணம், சலவை துணிகள் எரிந்து நாசமானது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஒன்றியம் கூடமலை ஊராட்சியில் பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீட்டில், வெள்ளையன் (80), அவரது மனைவி சுந்தரம்மாள் (74), ஆகியோர் வாடகைக்கு வசித்து வருகின்றனர். வெள்ளையன் சலவை தொழில் செய்து வருகிறார். இன்று காலை வீட்டில் பிரிட்ஜில் திடீரென்று மின் கசிவு ஏற்பட்டு வெடித்தது. இதில் வீடு முழுவதும் தீ குபுகுபுவென பரவியது. வீட்டில் தூங்கி கொண்டிருந்த தம்பதியினர் திடுக்கிட்டு விழித்து அலறியடித்துக்கொண்டு வீட்டுக்குள் இருந்து வெளியே வந்து அலறினர்.
இதுபற்றி அக்கம் பக்கத்தினர் உடனடியாக கெங்கவல்லி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சிறப்பு நிலைய அலுவலர் செல்லப்பண்டியன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். 2 மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. வெள்ளையனின் வீட்டில் அப்பகுதி பொதுமக்களிடம் சலவை செய்வதற்காக கொடுத்திருந்த துணிகள் வைக்கப்பட்டிருந்தது. ரூ.2 லட்சம் மதிப்பிலான சலவை துணிகள், பீரோவில் இருந்த தங்க நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம், நிலம், வீட்டு பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதுபற்றி தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல், வேட்டி, சேலை அரிசி, பருப்பு, தங்குவதற்கு இடவசதியை செய்து கொடுத்தார். இந்த தீ விபத்து குறித்து கெங்கவல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
