நீச யோகமும் நீச பலன்களும்…

ஒவ்வொரு கிரகமும் ஆட்சி, உச்சம், நீசம் போன்ற பலன்களை கொண்டது. இதன் பொருள் ஒளியின் தன்மையை பொறுத்து இந்த கிரகங்கள் வரையறை செய்யப்படுகிறது. இந்த வரையறைகளும் ஒவ்வொரு பலன்களை கட்டாயம் தருகிறது. இவ்வாறு ஒவ்வொரு கிரகமும் நீசம் பெற்றால் என்ன பலன்களை என்பதை அறியலாம். கிரகங்கள்தான் ஒவ்வொரு விஷயத்தின் காரகத்தன்ைமயாக உள்ளது. நீசம் பெறும் பொழுது அதன் காரகத்தன்மை பாதிக்கப்படுகிறது என்பது உண்மை…

நீசம் என்றால் என்ன?

நீச என்ற சொல்லானது சமஸ்கிருதத்தில் பல பொருளைக் கொடுக்கின்றன. இதற்கு, மதிப்பில்லா நிலை, கீழ்த்தரமான தன்மை, இழிவு, ஒழுங்கற்ற, தரமற்ற, தாழ்ந்த நிலை என அர்த்தங்களை பெறுகின்றன. ஒளித்தன்மையை இழந்த கிரகங்களை நீசம் என்று சொல்லலாம்.

நீசம் பெற்ற கிரகங்களின் விதிவிலக்குகள்

நீசம் என்பதிலிருந்து நீச பங்கம் உருவாகிறது. நீச கிரகங்கள் இருக்கும் ராசியில் ஒரு கிரகம் உச்சம் பெற்றாலோ; நீச கிரகத்தின் ராசியின் அதிபதி வேறு ஒரு ராசியில் ஆட்சி, உச்சம் பெற்றாலோ; நீசம் பெற்ற கிரகமும் நீசம் பெற்ற ராசியின் அதிபதியும் நீசம் பெற்று பரிவர்த்தனை பெற்றாலோ பாதிப்புகள் குறையும். ஆனால், ஏதோ ஒரு வகையில் நீசத்தின் பாதிப்புகளை ஜாதகர் அனுபவிப்பார் என்பதே நீசத்தின் தன்மையாகும்.

நீசம் பெற்ற கிரகங்களும் பலன்களும் பரிகாரங்களும்

*சூரியன் நீசம் பெற்றால்: தந்தை பாதிக்கப்பட்டு, தந்தையினால் கிடைக்கக்கூடிய பாக்கியங்களை ஜாதகர் பெறாமலும், பெறுவதற்கான சூழ்நிலை இல்லாமல் போகும். நிர்வாகத்திறன் இவரிடம் குறையும். சுயதொழில் செய்து முதலாளியாக அமர்வது மிகவும் கடினமான அமைப்பாகும். இவர் முதலாளியாக இருந்தாலும் தொழிலாளி போல அனைத்தையும் இவரே செய்ய வேண்டிய அமைப்பை உருவாக்கும்.
பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமை சிவபெருமானுக்கு / நவகிரகங்களில் உள்ள சூரியனுக்கு அபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்து கொள்வது நலம் பயக்கும்.

* சந்திரன் நீசம் பெற்றால்: தாய் ஏதாவது ஒரு காரணத்தினால் பாதிப்பிற்கு ஆளாவார்கள். தாயின் காரணத்தால் ஜாதகர் சரியான உணவை உட்கொள்ள முடியாத நிலையும் அல்லது அதீதமாக உணவை எடுத்துக் கொள்ளக் கூடிய அமைப்பையும் உடையவராக இருப்பார். சிலருக்கு மன பாதிப்புகள் உண்டாகும். சந்திரன் சனியோடு பயணிக்கும் பொழுது நீர் நிலை களில் தனியாக குளிப்பது கூடாது.
பரிகாரம்: திங்கட்கிழமை தோறும் மாலை வேளையில் அம்பாளுக்கோ அல்லது நவகிரகங்களில் உள்ள சந்திரனுக்கோ அர்ச்சனை செய்து கொள்வது சிறப்பான அமைப்பாகும். பௌர்ணமி அன்று வீட்டின் மாடியில் சந்திரனை பால் வைத்து வழிபடுவது சிறப்பு தரும்.

*செவ்வாய் நீசம் பெற்றால்: பெண்களுக்கு கணவனாலோ / சகோதரனாலோ பாதிப்புகள் உண்டாகும். ஆண்களுக்கு ரத்தம், நிலம், சகோதரன், மருத்துவம், மலையேறுதல் மற்றும் சுறுசுறுப்பு தொடர்பான விஷயங்களில் சிறப்பான அமைப்பு உண்டாகாது.
பரிகாரம்: செவ்வாய்க் கிழமை தோறும் முருகனுக்கு அல்லது நவகிரகங்களில் உள்ள செவ்வாய்க்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து கொள்வது நலம் பயக்கும். நீர் நிலைக்கு அருகில் உள்ள முருகன் கோயில்களில் வழிபடுவது மிகவும் நன்மை தரும். செவ்வாய்க்குரிய பொருட்களை நெய்வேத்தியமாக வைத்து அதனைப் பெற்றுக் கொள்வது நலம். நீர் அருந்தும் பொழுது காப்பர் பாத்திரங்களில் அருந்துவது நல்லது.

* புதன் நீசம் பெற்றால்: உறவுமுறையில் மாமன் தொடர்பான விஷயங்களில் பாதிப்புகளை கொடுக்கும். மேலும், நண்பர்கள் விஷயத்தில் இவர்கள் நண்பர்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள் அல்லது நண்பர்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள். எழுதுவது அல்லது எழுத்து விஷயங்களில் இவர்களுக்கு அச்சம் உருவாகும். சில நேரங்களில் அதிகமாக செலவு கணக்கு பார்ப்பார்கள். சில நேரங்களில் செலவைப் பற்றி கவலைப்படமாட்டார்கள்.
பரிகாரம்: பெருமாளை புதன் கிழமையில் வழிபடுவது நன்மை தரும். நீரில் உள்ள பெருமாளுக்கு பச்சை பயிரால் நெய்வேத்தியம் செய்து அதனை பெற்றுக்ெகாள்வதும். இரட்டை என்ற பெயரில் வரும் பெருமாளை வழிபடுவதும் சிறப்பை தரும்.

* வியாழன் நீசம் பெற்றால்: குருமார்கள் என்று சொல்லக்கூடிய ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளால் பாதிக்கப் படுவார்கள் அல்லது இவர்கள் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவார்கள். பொருள் ஈட்டுவதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார்கள். நகைகள் இவர்களிடம் இருந்தால் விற்பனை செய்து விடுவார்கள் அல்லது அடகு கடையில் வைத்துவிடுவார்கள்.
பரிகாரம்: வியாழன் தோறும் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை வைத்து வழிபாடு செய்யலாம். குழந்தைகள் / ஆசிரியர் / யானை ஆகியோருக்கு வியாழன் தோறும் உணவளித்தல் நலம். ஆசிரியரிடமும் / யானையிடமும் ஆசீர்வாதம் வாங்குதல் நற்பலன்களைத் தரும்.

*சுக்கிரன் நீசம் பெற்றால்: பெண்கள் உறவின் முறையில் அத்தை ஆகியோர்கள் வழியே எந்தவித நன்மைகளும் பெற இயலாது அல்லது பெண்கள் மற்றும் அத்தை வழியில் பாதிப்பில் இருப்பார்கள். சிலருக்கு பொருளாதாரத் தடை, திருமணத் தடைகள் உண்டாகும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் நவகிரகங்களில் உள்ள சுக்கிரனுக்கு அல்லது மாரியம்மனுக்கு வெள்ளை மொச்சையை நெய்வேத்தியமாக படைத்து அதனை உட்கொள்வது. பெண் குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கிக் கொடுப்பது நன்மை அளிக்கும்.

* சனி நீசம் பெற்றால்: வேலையாட்களால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் அல்லது இவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் / வேலை கிடைக்காமல் பாதிப்புகள் ஏற்படும். சரியானபடி வேலை செய்ய இயலாத நிலைமைகள் உருவாகும்.
பரிகாரம்: ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்தல் / எள் சாதத்தை காகங்களுக்கு கொடுத்தல். ஏழை எளியோருக்கு தர வேண்டிய பணத்தை கொடுத்தல் அல்லது உதவி செய்தல் நலம் பயக்கும்.

*ராகு – கேது நீசம் பெற்றால்: சர்ப்ப சாந்தி செய்து கொள்வது அவசியம்.

Related Stories: