இந்த வார விசேஷங்கள்

7.2.2026 – சனி – சஷ்டி

தை மாதத்தின் தேய்பிறை சஷ்டி விரதம், ஸ்திரவாரமான சனிக்கிழமையில் அமைகிறது. அதுவும் முருகனுக்குரிய சித்திரை நட்சத்திரத்தில் இன்றைய சஷ்டி விரதம் அமைவது மிகவும் சிறப்பு. தொடர்ந்து சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு அறிவுக்கூர்மையும், ஆற்றலும், செயல் திறனும் கூடும். குடும்ப உறவுகள் மகிழ்ச்சியாக இருக்கும். பெண்களுக்கு திருமாங்கல்ய பலம் கூடும். சஷ்டி விரதம் இருப்பவர்கள் முதல் நாளான பஞ்சமி மதியம் முதலே விரதம் இருப்பது நல்லது. அன்று இரவு பால், பழம் மட்டும் சாப்பிட்டு, அடுத்த நாள் காலை நீராடி, சங்கல்பம் செய்து கொண்டு முருகப் பெருமானுடைய ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்ய வேண்டும். மாலை பூஜை அறையில் விளக்கேற்றி, முருகப்பெருமானுக்கு மலர் மாலைகள் சாற்றி ஏதேனும் ஒரு நிவேதனத்தை வைத்துப் படைக்க வேண்டும். தூப தீபங்கள் காட்டி வணங்கி உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இயன்றால் அருகாமையில் உள்ள முருகன்கோயிலுக்கும் சென்று வருவது விசேஷம். இன்று சனிபகவானுக்கு உரிய நாள் என்பதால், குச்சனூர் போன்ற திருத்தலங்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மாலை நேரத்தில் அருகாமையில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று நவகிரக சந்நதிகளை வணங்கி நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது நல்லது.

8.2.2026 – ஞாயிறு பானு சப்தமி

பானு என்றால் சூரியன் என்று பொருள் சஷ்டி திதி எப்படி முருகனுக்கு உரியதோ, அதேபோல சப்தமி திதி சூரியனுக்கு உரியது. சூரியனுடைய கிழமையான ஞாயிற்றுக்கிழமை சப்தமி திதி வந்தால் அந்தநாள் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும். பொதுவாகவே காலை சூரிய உதயத்தின் போது சூரிய நமஸ்காரம் செய்வதும், சூரிய காயத்ரி சொல்வதும் மிகச் சிறப்பான ஆத்ம பலத்தைத் தரும். ஆரோக்கியத்தை வளர்க்கும். யோகாசன பயிற்சிகளிலே மிகவும் சிறந்த பயிற்சி சூரிய நமஸ்கார பயிற்சி என்று சொல்லுவார்கள். அதிலும் பானு சப்தமி தினத்தன்று சூரிய வழிபாடு செய்வது மிகச் சிறப்பானது. அன்று மாலை சிவன் கோயிலுக்கோ, பெருமாள் கோயிலுக்குச் சென்று வலம் வரவேண்டும். இன்று சுவாதி நட்சத்திரமாக இருப்பதால் நரசிம்மரை வணங்க வேண்டும். ஸ்ரீ வில்லிபுத்தூரில் மாதாந்திர சுவாதி தின பெரியாழ்வார் புறப்பாடு இன்று நடைபெறும் சில ஆலயங்களில் பெரியாழ்வாருக்கோ அல்லது கருடனுக்கோ அபிஷேகங்கள் நடை பெறுவதும் உண்டு. அதில் கலந்து கொள்வது நல்லது.

இன்று காலையில் சூரியனை நோக்கி சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்

ஓம் பாஸ்கராய வித்மஹே திவாகராய தீமஹி

தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

இதை இன்று மட்டும் அல்லாது தினமும் காலையில் நீராடிவிட்டு கிழக்கு திசை நின்று சூரிய பகவானை பார்த்து 27 முறை சொல்லவும். அனைத்து நோய்களும் தீர்ந்து உடல் மற்றும் மனோபலம் பெறலாம்.

9.2.2026 – திங்கள் திருநீலகண்டர் குருபூஜை

திருநீலகண்ட நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் .இவர் தாம் வனையும் ஓடுகளிற் சிறந்தனவற்றை அடியவர் அமுது செய்வதற்காக இலவசமாக அளிப்பது வழக்கம். எப்பொழுதும் நாவால் திருநீலகண்டம் என்பதைப் பெருமந்திரமாகக் கொண்டு ஒழுகினார். இதனால் அவருக்கு திருநீலகண்டக்குயனவார் என்னும் பெயர் வழங்கலாயிற்று. அவரிடம் ஒரு பலவீனம் இருந்தது; இளமை தூர்ந்த அவர், இன்பத்துறையில் எளியவரானார். அவர் தம் புற ஒழுக்கத்தை அறிந்த மனைவியார் மனத்தால் வேதனை அடைத்தார். ஒரு நாள் நாயனார் அவரை தீண்டுவதற்குச் சென்றார். உடனே ‘‘எம்மைத் தீண்டுவாராயின் திருநீலகண்டம்” என அம்மாதரசி ஆணையிட்டார். அவ்வாணைக்கு நாயனார் கட்டுண்டார். மனைவியாரை அயலவர் போல் நோக்கி, எம்மை எனச் சொன்னமையால் ‘‘எம் மாதரையும் தீண்டேன்” உறுதி கொண்டார். இந்த ஒழுக்கம் முதுமை வரை நீண்டது. இவர் பெருமை உலகறியச் செய்ய எண்ணிய சிவபெருமான் சிவயோகியார் வடிவில் வந்து தீர்த்து வைத்தார். நாயனாரும் துணைவியாரும் இவ்வுலகிலே இறை பணியாற்றிச் சிவலோகமடைந்தனர். அவர் குருபூஜை இன்று.

இளமையாக்கினார் திருக்கோயில் சிதம்பரத்திலுள்ள சிவன் கோயில் இக்கோயில் நடராஜர் கோயிலுக்கு மேற்கு திசையில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு எதிர்ப்புறத்தில் இளமை தீர்த்தம் உள்ளது. திருநீலகண்டருக்கு சிவன் அருள்செய்த தலமிது. நீலகண்டருக்கும் அவர் மனைவிக்கும் இளமையை மீண்டுமளித்ததால் இறைவன் இத்தலத்தில் இளமையாக்கினார் எனப் பெயர் பெற்றார். தை மாதம் விசாகம் நட்சத்திரத்தில் திருநீலகண்டருக்கு திருவோடளிக்கும் விழா சிறப்பாக நடைபெறும்.

9.2.2026 – திங்கள் தாயுமானவர் குருபூஜை

தாயுமான சுவாமிகள். திருமறைக் காட்டிலே சைவ வேளாளர் குலத்திலே கேடிலியப்பப் பிள்ளையின் இரண்டாவது மகனாய்ப் பிறந்தார். திரிசிரபுரத்தில் விசயரகுநாத சொக்கலிங்க நாயக்கரின் கணக்கராகத் தந்தை பணிபுரிய, வட மொழி, தென்மொழி இரண்டுங்கற்ற இவர் மௌன குரு என்பாரிடம் அறிவுரை பெற்றார். இராமநாதபுரத்தில் தன் தமையனோடு இருந்தார். அவர் கட்டாயப் படுத்தியதால் மட்டுவார்குழலி என்ற பெண்ணை மணந்தார். கனகசபாபதி எனும் ஆண்குழந்தை ஈன்ற மனைவி மறையவே யோக ஞானங்களில் சிறக்கத் துறவு பூண்டார்.

திருத்தலங்கள் தோறும் சென்று இறை வழிபாடு செய்த இவர் தவ வாழ்வைச் சிறப்பாக வாழ்ந்தார். தவத்தின் மூலமாக சிவத்தைக் கண்ட தாயுமானவர் ராமநாதபுரம் சென்றபோது அங்கேயே தை மாதம் விசாக நட்சத்திரத்தன்று மகா சமாதி கூடினார். இவரது சமாதிக்கோயில் இராமநாதபுரம் நகர் எல்லையில் உள்ள இலட்சுமிபுரத்தில் உள்ளது. இவரது குருபூஜை விழா திருச்சியிலும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. தாயுமானவர் குருபூஜை தினம் இன்று.

9.2.2026 – திங்கள் மகேஸ்வராஷ்டமி

இன்று மாசி மாத தேய்பிறை அஷ்டமி. பைரவருக்கு சிறந்த நாள். பைரவ வழிபாடு ஆயுள் தோஷத்தை நீக்கக் கூடியது .சனி பகவானுக்கு பரிகாரமாக பைரவரை வணங்கலாம். பொதுவாக சிவாலயங்களில் முதலில் விநாயகரை வழிபட்டு விட்டு நிறைவாக பைரவருக்கு வழிபாடு செய்ய வேண்டும் அவர் காவல் தெய்வம் அவர் உடலில் சகல கிரகங்களும் ராசிகளும் இருக்கின்றன இவருக்கு அஷ்டமியில் வடை மாலை அணிவிக்கலாம் ஒரு துணியில் மிளகை கட்டி நல்லெண்ணெயை ஊற்றி விளக்கு ஏற்றினால் கடன், வியாதி எதிரி போன்ற துன்பங்கள் அகலும். சூர்யாஸ்தமனம் ஆன பிறகு பைரவர் சந்நதிக்குச் சென்று வழிபட வேண்டும்.

11.2.2026 – புதன் புதானுராதா

புதானுராதா என்பது புதன்கிழமையும் அனுஷ நட்சத்திரமும் ஒன்றாக வரும் ஒரு விசேஷமான நாள் (புண்ணிய காலம்) ஆகும், இது அட்சய திருதியை தினத்திற்கு சமமாகக் கருதப்படுகிறது, இந்த நாளில் செய்யப்படும் நல்ல காரியங்கள் பன்மடங்கு பலனைத் தரும்; பெருமாள் வழிபாடு செய்வது மிகவும் உத்தமமானது.

13.2.2026 – வெள்ளி மாசி மாத பிறப்பு, விஷ்ணுபதி புண்ணிய காலம்

பன்னிரெண்டு ராசிகளில் சூரியன் எந்த ராசியில் நுழைகிறதோ அந்த ராசிதான் அந்த மாதத்தின் பெயராக வழங்கப்படுகிறது. இதுவரை உத்திராயணத்தின் முதல் ராசியான மகர ராசியில் இருந்த சூரியன் இன்று கும்ப ராசியில் நுழைகின்றார். கும்ப ராசியில் நுழைந்து சப்தம பார்வையாக தன்னுடைய சொந்த ராசியான சிம்மத்தைப் பார்வையிடுவது என்பது சிறப்பு. அதே சிம்மத்தை குருவும் ஐந்தாம் பார்வையாகப் பார்வையிடுகின்றார்.இப்படி மாசியில் சூரியன் நுழையும் காலம். விஷ்ணுபதி புண்ணிய காலம். அதாவது விஷ்ணு வழிபாட்டுக்கு உரிய மிக முக்கியமான தினம் ஆகும்.

வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி ஆகிய மாதங்களின் முதல்நாள் விஷ்ணுபதி புண்ணியகாலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தவை. அன்று முன்னோர்கள் வழிபாடு ,திதி கொடுப்பது ,குல தெய்வ வழிபாடு மற்றும் தானம் தர்மம் செய்வது மிகுந்த புண்ணிய பலன் அளிக்கும் வல்லமை கொண்டது. விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் பெருமாள் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். குறிப்பாக சங்கு சக்ரதாரியாகப் பெருமாள் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று பெருமாளை வழிபட வேண்டும். பெருமாள் சந்நதியை 27 முறை பிரதட்சிணம் வருவது விசேஷம். ஆலயங்களில் இந்த நாளில் நடக்கும் அபிஷேக ஆராதனைகளைக் கண்டு வழிபாடு செய்ய மனம் அமைதி பெறும்.இந்த நாளில் மகாலட்சுமி பூஜை, கோபூஜை ஆகியன செய்வது மிகவும் பலன் தரும். வீடுகளில் விளக்கேற்றி விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் ஆழ்வார்கள் பாசுரங்கள் பாடுவதும் மிகுதியான பலன்களைக் கொடுக்கும்.

13.2.2026 – வெள்ளி ஷட்தில ஏகாதசி

தானத்தில் சிறந்தது அன்னதானம்.அதுதான் ஒருவரை போதும் போதும் என்று சொல்ல வைக்கும்.அப்படிப்பட்ட அன்னதானம் செய்து அற்புதமான பலன்களை அடைவதற்கான ஏகாதசி விரதத்தில் ஒன்று ஷட்தில ஏகாதசி. ஆனால் இந்த அன்ன தானத்தை ஏகாதசி அன்று செய்யக்கூடாது. துவாதசி அன்று செய்ய வேண்டும்.இதற்கு சுவையான கதை உண்டு. மனித உடலோடு தன்னுடைய தவ வலிமையால் மோட்சலோகத்துக்குச் சென்றாள் ஒரு பெண். அங்கே அவளுக்குப் பல வசதிகள் இருந்தாலும், சாப்பிடுவதற்கு ஏதும் கிடைக்கவில்லை.மிக ஆடம்பரமான மாளிகை கிடைத்தும் ,வயிற்றுக்கு சோறு இல்லாமல் அவள் மிகவும் துன்பப்பட்டாள் . இதற்கு என்ன காரணம் என்று நினைத்துப் பார்த்தாள்.

அவள் பூமியில் மிகவும் செல்வத்தோடு வாழ்ந்த பொழுது பற்பல தான தர்மங்களைச் செய்தாள். ஆனால், வயிறார யாருக்கும் உணவு கொடுத்ததாக அவள் நினைவுக்கு வரவில்லை. அன்னதானம் செய்யாத குறைதான், இப்பொழுது பசியாக வந்து வாட்டுகிறது என்பதை உணர்ந்தாள். அது மட்டுமில்லை. தன்னிடம் சாப்பாடு கேட்டு வந்த ஒரு துறவிக்கு அவள் அன்னம் தராதது மட்டுமல்ல ஆத்திரத்தில் அன்னத்திற்கு பதிலாக மண்ணையிட்ட பாவமும் இப்பொழுது சேர்ந்து கொண்டது.

அவள் துடிப்பது உணர்ந்த ஒரு ரிஷி அவளுக்கு பிராயசித்தம் சொன்னார்.அவள் மாசி மாதத்தில் வரும் ஷட் திலா ஏகாதசி விரதத்தை முறையாக கடைபிடித்தால் பிராயசித்தம் கிடைக்கும் என்றார். அந்தப் பெண்ணும் ஏகாதசி விரதத்தை மனப்பூர்வமாக இருந்து பெருமாளை வணங்கி அதற்கு அடுத்த நாள் துவாதசி பாரணையின் போது அதிதிகளுக்கு அன்னமிட்டாள் பாவம் தீர்ந்தது. பசி தீர்த்தது மட்டுமல்ல நற்கதியும் அடைந்தாள் என்பது ஏகாதசி மகாத்மிய வரலாறு.  ஷட் என்றால் ஆறு என்ற பொருள். தில என்றால் எள் என்று பொருள். ஆறு வகையான எள் தானத்தை முன்னிலைப்படுத்தி இருப்பது ஷட்தில ஏகாதசி. இந்த ஏகாதசி நிறைவின் போது (துவாதசியில்) அன்னத்தை அளிப்பதன் மூலமாக பெரும் பலனை அடைய முடியும்..

Related Stories: