மலையின் நிழல் விழும் அதிசயம்!

சென்ற இதழில், வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன், நாகர்கள் நிறைந்த கரைப்பூண்டி, சம்பத்கிரி மலையின் நிழல், சங்கர்ஷண ஒடையரின் பிருந்தாவனம் மேலே சிற்பம் ஆகிய தகவல்களை பார்த்தோம். இந்த இதழில், சங்கர்ஷண ஒடையர் திருப்பதிக்கு சென்றது, அவர் வாழ்ந்த வீடு என பல அறிய தகவல்களை காண்போம்.

உடுப்பிக்கு செல்லுதல்

1810-ஆம் ஆண்டு முதல் 1862-ஆம் ஆண்டு வரை வாழ்ந்த மிக பெரிய மகான்தான் ஸ்ரீ சங்கர்ஷண ஒடையார். இவரின் பூர்வாஸ்ரம பெயர் “தம்மண்ண நாயக்’’ ஆகும். தம்மண்ண நாயகருக்கு திருமண வயது வந்தவுடன் பெரியோர்கள் இவருக்கு திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார்கள். இல்லற வாழ்வை செவ்வனே நடத்தி வந்த தம்மண்ணருக்கு, இரண்டு குழந்தைகள் பிறந்தது. சிறிது காலத்தில் அதாவது இருபத்திரெண்டாம் வயதில், தம்மண்ண நாயகரின் மனைவி மரணிக்க, அதன் பின் இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ளாமல், அவரின் கவனம் முழுவதும் ஆன்மிகத்தில் பயணித்தது.ஸ்ரீ மத் மத்வாச்சாரியாரின் கிரந்தங்களை மெல்ல மெல்ல கற்றுக்கொள்ள முயன்றார். அதன் விளைவாக, ரஜதபீடபுரம் என்று சொல்லக்கூடிய உடுப்பி க்ஷேத்திரத்திற்கு சென்று அப்போதைய சோதே மடத்து பீடாதிபதியான “ஸ்ரீ விஸ்வப்ரிய தீர்த்தரிடத்தில் “ஸ்ரீ பாஷ்யம்’’ முதலான 37 கிரந்தங்களையும் கற்றுத்தேர்ந்தார். இத்தகைய சீடரான தம்மண்ண நாயகரை, விஸ்வப்ரிய தீர்த்தர் கொண்டாடி மகிழ்ந்தார்.இப்படி இருக்க, இன்னொரு மத்வ மகான் மூலமாக சந்நியாச தீட்சையை பெறுகிறார். (நம் அருள் தரும் ஆன்மிக இதழில், மத்வ மகானை பற்றிய தொடர் வருகின்றது. அதில் பிப்ரவரி 1 – 15 இதழில் இவரை பற்றிய இன்னும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது) தம்மண்ண நாயக், ஸ்ரீ சங்கர்ஷண ஒடையராக மாறுகிறார். இடைவிடாது பகவானின் பூஜைகளை செய்து வந்த சங்கர்ஷண ஒடையருக்கு, திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.ஆகவே, ஹொளே நரசிம்மபுரம் வழியாக திருமலைக்கு செல்ல ஆயத்தமானார். போகும் வழியில், சூர் என்னும் நதிக்கரையில் ஸ்ரீ சங்கர்ஷண ஒடையர் தவம் செய்துக் கொண்டிருந்தார்.

கனவில் வந்த ஏழுமலையான்

“தனக்கு இனி லௌகிகமான எந்த ஒரு பொருளும் வேண்டாம் என முடிவு செய்து, தன்னிடம் பூஜைக்காக மிச்சமிருந்த தங்கம், வெள்ளி மற்றும் இதர பொருட்கள் அனைத்தையும் ஏழைகளுக்கு தானமாக கொடுத்துவிட்டு, தனக்கு தேவையான புலித்தோல் மற்றும்பூஜைக்கு தேவையான சில பாத்திரங்களை மட்டும் எடுத்துக்கொண்டு திருமலைக்கு சென்றார். அங்கு, ஸ்ரீ வராகமூர்த்தி சந்நதியில், இரண்டு மாதகாலம் கடும் தவம் மேற்கொண்டார். அதன் பயனாக ஒருநாள், ஸ்ரீநிவாசப் பெருமாள், சங்கர்ஷண ஒடையரின் கனவில் தோன்றி;“கடிகாசலம் (சோளிங்கபுரம்) என்ற க்ஷேத்திரத்திற்கு சென்று, அங்குள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும், ஸ்ரீ யோகாஞ்சநேயரையும் தரிசிக்குமாறு’’ கூறினார். பெருமாள் கூறியதை போல், தரிசித்தார். அதன்பின், பலதேச சஞ்சாரங்களை மேற்கொண்ட சங்கர்ஷண ஒடையர், கடைசியாக கரைப்பூண்டியின் மகிமைகளை உணர்ந்து, அங்கேயே தங்கி வந்தார்.

விளக்கவுரை

ஸ்ரீ ஜெகந்நாததாசர் என்னும் மத்வ மகான் இயற்றிய “ஹரிகதாம்ருத சாரம்’’ என்னும் உயரிய மத்வ நூலிற்கு வியாக்கியானம் அதாவது விளக்கவுரையினை சங்கர்ஷண ஒடையர் எழுதியிருக்கிறார். ஆகையாலேயே இவருக்கு இன்னும் கூடுதல் சிறப்பு. 1862-ஆம் ஆண்டு, துந்துபி வருடம், மார்கழி சுத்த பஞ்சமி அன்று பிருந்தாவனமானார். அன்று முதல் இன்று வரை இடைவிடாது பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பிரதி ஆண்டு வருகின்ற இவரது ஆராதனையில், சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்று கூறினார், நிர்வாகி ராகவேந்திரராவ்.சங்கர்ஷண ஒடையரை தரிசித்துவிட்டு, அவர் வாழ்ந்த வீட்டிற்கு சென்றோம். சுமார் 165 ஆண்டுகளை கடந்தேறிய இடம். வீட்டின் நுழைவு பகுதி இரு புறத்திலும், சுமார் பத்து நபர்கள் உறங்கும் அளவிற்கு திண்ணைகள். அதனை கடந்து உள்ளே சென்றதும், இரண்டு அறைகள் இருக்கின்றன. அதன் பின் இடதுபுறத்தில் ஸ்ரீ சங்கர்ஷண ஒடையர் தினமும் தவம் மேற்கொள்ளும் அறை இருக்கிறது.

நாகமாக காட்சிக்கொடுத்தார்

முன்னொரு காலத்தில், இந்த அறையில் சங்கர்ஷண ஒடையர் தவம் செய்துக்கொண்டிருக்கும் போது, ஒருவர் அறையின் ஜன்னல் வழியே எட்டி பார்த்துவிடுகிறார். பார்த்தவர் அதிர்ந்து போனார். காரணம், சங்கர்ஷண ஒடையர், ஐந்து தலை நாகம் வடிவமாக காட்சியளித்திருக்கிறார். அன்றிலிருந்து, சங்கர்ஷண ஒடையரை ருத்ராம்சம் (சிவனின் அம்சம்), மற்றும் சேஷாம்சமாக (நாகர் அம்சம்) பார்க்கப்படுகிறார். இப்போது தெரிகிறதா… கோயில் முழுவதிலும் ஏன் நாகர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது என்று! அதுமட்டுமா.. ஸ்ரீ சங்கர்ஷண ஒடையரின் பூர்வாஸ்ரமத்தில், கர்நாடக மாநிலம் தார்வாட் என்னும் இடத்தில் வாழ்ந்த போது, மகாவிஷ்ணு, அனுமன், நாகர் ஆகிய மூன்று சிலா விக்ரகத்திற்கும் தினமும் பூஜை செய்து வந்திருக்கிறார்.

நாளடைவில், இந்த சிலா விக்ரகங்கள் சிதலமடையவே, சங்கர்ஷண ஒடையரின் வாரிசுகள் தார்வாடில் இருந்து அந்த மூன்று சிலைகளையும் கொண்டுவந்து, இக்கோயிலின் நிர்வாகிகளிடத்தில் ஒப்படைக்க, கோயில் நிர்வாகிகள், சங்கர்ஷண ஒடையர் தவம் செய்த இடத்தில், அவரின் நினைவாக மூன்று தெய்வ சிலைகளையும் பிரதிஷ்டை செய்தார்கள்.இன்றும் அவைகள் அப்படியே காணப்படுகின்றன. அங்கு சென்றால், மூன்று தெய்வ சிலைகளை தரிசிக்க முடியும்.

பெருமைகொள்ளும் பக்தர்கள்

தற்போது, சங்கர்ஷண ஒடையர் வாழ்ந்த இடத்தை அங்குள்ள பக்தர்கள் `ஒடையர் மடம்’’ என்றே அழைக்கிறார்கள். ஆக, மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த “முக்ய பிராணர்’’ என்னும் பெயரில் அனுமன், நாகாம்சம் கொண்ட மகான் ஸ்ரீ சங்கர்ஷண ஒடையரின் மூலபிருந்தாவனம், அவர் வாழ்ந்த வீடு, தவம் செய்த அறை, அந்த இடத்தில் சங்கர்ஷண ஒடையர் பூஜைகள் செய்த மகாவிஷ்ணு, அனுமன், நாகர் ஆகிய மூன்று சிலா விக்ரகம் பிரதிஷ்டை ஆகியிருப்பது ஆகியவை கரைப்பூண்டி பக்தர்கள் பெருமையாக கருதுகிறார்கள்.

பக்தர் அனுபவம்

வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமனின் கோயில் அருகில் சுமதி என்னும் பக்தை அனுமனை பற்றியும், சங்கர்ஷண ஒடையரை பற்றியும் பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில்,“நான் கல்யாணம் ஆன பிறகுதான் இந்த கரைப்பூண்டி ஊருக்கு வந்தேன். இங்குள்ள அனைவரும் அனுமனை பற்றியும், மகான் சங்கர்ஷண ஒடையரை பற்றியும் சொன்னார்கள். அன்று முதல் இன்று வரை காலையில் தினமும் எழுந்தவுடன் முதல் வேலையாக குளித்து முடித்துவிட்டு, அனுமனை பார்க்க சென்றுவிடுவேன். அதே போல், விசேஷ நாட்களில் மகான் சங்கர்ஷண ஒடையரின் மூலபிருந்தாவனத்தையும் தரிசிப்பேன். நான் வேண்டுவதை உடனே நிறைவேற்றித்தருவார், அனுமன். எங்கள் குடும்பத்திற்கு ஆண் குழந்தை பாக்கியம் வேண்டும் என்று சங்கர்ஷண ஒடையரிடம் வேண்டிக்கொண்டோம். அதுபோலவே, எங்களுக்கு பாக்கியத்தை கொடுத்து அருளினார். என் மகன், போளூரில் வீடு கட்டியுள்ளான். அங்கே குடியேறிவிடலாம் என்று கூறுவான். நீங்கள் செல்லுங்கள். நான் அனுமனையும் சங்கர்ஷண ஒடையரையும் விட்டு எங்கேயும் வரமாட்டேன் என்று கூறிவிட்டேன். எப்படி செல்ல முடியும். எனக்கு வேண்டியதை எல்லாம் அனுமனும், மகானும் கொடுக்கும் போது, நான் ஏன் கரைப்பூண்டியை விட்டுச் செல்ல வேண்டும்! என்று பூரிப்போடு கூறினார்.

கோயிலுக்கென்று எந்த நேர கட்டுப்பாடும் இல்லை. வருவதை முன்பே தெரிவித்தால் அதற்கான ஏற்பாடுகளை செய்வார்கள். கோயில் தொடர்புக்கு: 9043458932

எப்படி செல்வது: வேலூரில் இருந்து போளூருக்கு பேருந்து வசதிகள் இருக்கின்றன. போளூரை அடைந்தவுடன் அங்கிருந்து ஆட்டோவில், கரைப்பூண்டி ஆஞ்சநேயர் கோயில் என்று சொன்னால் இறக்கிவிடுவார்கள்.

Related Stories: