வர்க்கோத்தம கிரக பலன்கள்

வர்க்கோத்தமம் என்றால் என்ன?

வர்க்கோத்தமம் என்பது ஒரு கிரகம், ராசி சக்கரத்திலும் நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில் இருப்பது ஆகும். அதுபோல் லக்னம் ராசி நவாம்சத்தில் ஒரே இடத்தில் இருந்தால் அது “வர்க்கோத்தம லக்னம்’’ எனப்படும். அதாவது, ராசி கட்டத்தில் கிரகங்கள் சில நட்சத்திர பாதங்களில் சஞ்சரிக்கும் போது நவாம்சத்திலும் அதே ராசியை சென்றடைகின்றன. சுருங்கக் கூறின், ராசி நவாம்சத்தில் ஒரே ராசியில் இருக்கும் கிரகங்கள் வர்கோத்தமம் எனும் அசைக்க முடியாத நிலையைப் பெற்று வலிமை அடைகின்றன. வர்க்கோத்தமம் பெறும் கிரகங்கள் சுபத்தன்மை பெற்றால் சுப பலனையும், பாவத்தன்மை பெற்றால் பாவ பலனையும் செய்யும்.

வர்க்கோத்தமம் பெறும் ராசி மற்றும் நட்சத்திர பாதங்கள்

1. மேஷம் -அஸ்வினி 1.
2. ரிஷபம் – ரோகிணி 2.
3. மிதுனம் – புனர்பூசம் 3.
4. கடகம் – புனர்பூசம் 4.
5. சிம்மம் – பூரம் 1.
6. கன்னி – சித்திரை 2.
7. துலாம் – சித்திரை 3.
8. விருச்சிகம் – அனுஷம் 4.
9. தனுசு – உத்திராடம் 1.
10. மகரம் – உத்திராடம் 2.
11. கும்பம் – சதயம் 3.
12. மீனம் – ரேவதி 4.

மேற்கண்ட ராசி நட்சத்திர பாதங் களில் ஒரு கிரகம் சஞ்சரிக்கும் போது வர்க்கோத்தமம் பெறுகின்றன. வர்க்க உத்தமம் என்பதே வர்க்கோத்தமம் என அழைக்கப்படுகிறது.உதாரணத்திற்கு, ஒரு ஜனன ஜாதகத்தில் செவ்வாய் ராசிக்கட்டத்தில் விருச்சிகத்தில் அனுஷம் 4 ஆம் பாதத்தில் நிற்கிறார் என்றால், அம்சத்தில் அதே விருச்சிக ராசியில்தான் இருப்பார். ஆக, ராசியிலும் நவாம்சத்திலும் செவ்வாய் ஒரே ராசியில் அமர்ந்து வர்க்கோத்தமம் எனும் வலிமையான நிலையை அடைகிறார்.

“யத்ர யத்ர கிரஹ வர்க்கோத்தமம்
தத்ர தத்ர கிரஹ பரிபூரணம்’’
– என்கிறது ஒரு சமஸ்கிருத ஸ்லோகம்.

கிரகங்கள் வர்க்கோத்தமம் பெற்றிருந்தால், அவருக்கு அதிக அளவிலான ராஜயோகம் கிடைக்கும். ஒருவரின் ஜெனன ஜாதகத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் வர்க்கோத்தமம் அடைந்து காணப்பட்டால், அந்த ஜாதகர் தனவந்தரராகவும், செல்வாக்கு மிக்கவராகவும் இருப்பார். வர்க்கோத்தமம் பெற்ற கிரகத்தின் தசாபுத்தி காலங்களில் ஜாதகருக்கு மிகவும் யோகமான பலன்களையே தரும். 4, 9, 10 ஆம் அதிபதிகள் வர்க்கோத்தமம் பெற்றால், நல்ல யோகமான பலன்களை ஜாதகருக்கு அது நிச்சயம் வழங்கும்.லக்னத்திற்கு சுபராக நட்பு ஆட்சி மற்றும் உச்சம் பெற்று வர்க்கோத்தமம் பெற்றால், அது முழு வலிமை பெற்ற கிரகமாக கருதப்படும். இத்தகைய அமைப்பு ஜாதகருக்கு மிகவும் யோகமான பலன்களை வழங்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

லக்னம் வர்க்கோத்தமும் அடைந்திருந்தால்

நீண்ட ஆயுள் செல்வம் செல்வாக்கு உண்டாகும் பிடிவாதம் காணப்படும்.

சூரியன் வர்க்கோத்தமம்

அரசியலில் பெரும்பதவி, அரசாங்க உத்தியோகம், நிர்வாக திறன் உண்டு.தந்தைக்கு யோகம். பூர்வீக சொத்து பெறும் பாக்கியம் ஏற்படும்.

சந்திரன் வர்க்கோத்தமம்

அதிக மனோ வலிமை உண்டு. தாயாருக்கு சிறப்பு ஞாபக சக்தி அதிகம் உண்டு. கற்பனை வளம் காணப்படும்.

செவ்வாய் வர்க்கோத்தமம்

ராணுவம், காவல்துறை போன்ற சீருடை பணியில் உயர்பதவி கிட்டும். தைரியம் அதிகம் ஏற்படும் பூமி, வீடு யோகம் உண்டு. சகோதர சகோதரி வழியில் ஆதாயம் ஏற்படும்.

புதன் வர்க்கோத்தமம்

பேச்சாற்றல் மிகுந்து காணப்படும். மதிநுட்பம் உண்டு. படிப்பில் சிறந்து விளங்குவர். கணிதத்தில் புலி. பத்திரிக்கை, ஜோதிடம், வியாபாரத்துறைகளில் பிரகாசிப்பர். தாய்மாமன்வகையில் அனுகூலம் உண்டு.

குரு வர்க்கோத்தமம்

தர்ம சிந்தனை அதிகம் காணப்படும். மந்திர உபதேசங்கள் உண்டு. புத்திரர் களின் வழியில் நன்மைகள் உண்டாகும். ஆன்மிக ஈடுபாடு ஏற்படும். ஆசான் ஆகும் தகுதி உண்டு. தெய்வீகஅனுக்கிரகம் உண்டாகும்.

சுக்கிரன் வர்க்கோத்தமம்

களத்திர வகையில் ஆதாயம் கலைத்துறையில் சிறந்து விளங்குவர். ஆடை ஆபரண யோகம் ஏற்படும். கவர்ச்சியான தோற்றம், வாகனங்கள் உண்டு. தாம்பத்யம் சிறக்கும்.

சனி வர்க்கோத்தமம்

தீர்க்காயுள் உண்டு. நல்ல வேலையாட்கள் அமைவர். தொழில் சிறப்பாக ஓடும்.

ராகு வர்க்கோத்தமம்

தந்தை வழி பாட்டன், பாட்டிக்கு யோகம் ஏற்படும். வெளிநாட்டு தொடர்புடைய வேலை வாய்ப்புகள் அமையும். நிழல் உலகம் எனும் சினிமா துறையில் ஜெயிக்கலாம். டிரான்ஸ்போர்ட், எலக்ட்ரானிக்ஸ் தொழில் நன்றாக அமையும். மதுபான தொழிலில் சிறக்கலாம். அதிக துணிச்சல் ஏற்படும்.

கேது வர்க்கோத்தமம்

தாய் வழிபாட்டன் பாட்டிக்கு யோகம், இறையருள் உண்டு. சித்தர்கள் ஞானிகளின் தரிசனம் உண்டு. ஜோதிடத் துறையில் பிரபலமாகலாம். ஞானம் அதிகம் உண்டு ஆன்மிக சிந்தனை அதிகம் ஏற்படும். இது தவிர, வர்க்கோத்தமம் பெறும் கிரகம் ஜனன ஜாதகத்தில், அது எந்த பாவத்திற்கு உரியதோ அந்த பாவத்திற்கான பலன்களை உரிய நேரத்தில் வாரி வழங்கும். இவை எல்லாமே பொது பலன்கள். தனிப்பட்ட முறையில் அவரவர் ஜனன ஜாதகங்களுக்கு இந்த பலன்கள் மற்ற கிரகங்களின் பார்வை சேர்க்கை வக்கிர நிலை அஸ்தமனம் போன்ற இதர விஷயங்களை வைத்து கூடலாம் அல்லது குறையலாம்.=7ம் வீட்டு அதிபதி வர்க்கோத்தமம் பெற்றிருந்தால், ஆண் ஜாதகம் எனில் அசத்தலான மனைவி கிடைப்பாள். பெண் ஜாதகம் எனில் அசத்தலான கணவன் கிடைப்பான். 10 ஆம் வீட்டு அதிபதி வர்க்கோத்தமம் பெற்றிருந்தால், ஜாதகனுக்கு நல்ல உத்தியோகம் அல்லது தொழில் அமையும்.

Related Stories: