தண்ணீர் வழிபாடும் சடங்குகளும்

ஆதிகாலம் தொட்டு மனித வரலாற்றில் தண்ணீர் என்பது தூய்மையின் அடையாளமாக சமயச் சடங்கு களில் பயன்பட்டுள்ளது. வரலாற்று காலத்துக்கு முந்தைய மனிதன் மழை வேண்டி சில போன்மைச் சடங்குகளைச் (Imitative rituals) செய்த போது வானத்தில் இருந்து தண்ணீர் கொட்டு வதுபோல மரத்தின் மீதேறி தண்ணீரைப் பொழிந்தான். தண்ணீரில் வாழும் மீன், தவளை, நண்டு போன்ற உயிரினங்களை ஒரு பாத்திரத்தில் போட்டு ஊர் சுற்றி வந்து அந்தப் பாத்திரத்தைக் கொண்டுபோய் நீர் நிலையில் கொட்டினான். இவன் நீர்நிலையில் விட்ட தண்ணீரில் வாழும் உயிரினங்களைப் போல இனிவரும் காலத்தில் தண்ணீரில் உயிரினங்கள் பெருகும் என்று நம்பினான். அப்படி என்றால் தண்ணீரும் அளவு கூடும் என்ற ஒரு கணிப்பில் அவன் இதுபோன்ற தண்ணீர் சடங்குகளை செய்ததாக சர் ஜேம்ஸ் பிரேசர் தனது The Golden Bough என்ற நூலில் தெரிவிக்கின்றார்.

தண்ணீர் கடவுள்

மனிதன் காலப்போக்கில் தண்ணீருக்காக தனிக் கடவுளையே ஏற்படுத்தினான். ஆப்பிரிக்காவில் கடலுக்கான தெய்வத்தின் பெயர் மாஞ்சா. இந்தியாவிலும் கடலைத் தெய்வமாக வணங்கும் மரபு உள்ளது. மலையாளத்தில் எழுதப்பட்ட செம்மீன் நாவலில் கடலை கடலம்மே என்ற விளிக்கும் வழக்கு இருப்பதைக் காண்கின்றோம். தமிழக மீனவர்களும் கடலைக் கடல் தாய் என்றுதான் அழைக்கின்றனர் இந்தியாவில் நதியை கங்கா, யமுனா, காவிரி, வைகை என்று பெரும்பாலும் பெண்கள் பெயரிட்டுப் பெண் தெய்வங்களாகக் கருதுகின்ற மரபைக் காண்கின்றோம்.

ஆனால், இடி மின்னல் மழையை மட்டும் ஆண் கடவுளாகப் பெயரிட்டு வணங்கினான். உலகப் பழஞ் சமயங்களில் ஆண் பெயரில் இடியும் மழையும் அழைக்கப்படுகின்றது. இந்தியாவின் வட பகுதியில் வருணன் மழைக் கடவுளாகப் போற்றப்பட்டான். இந்திரன் இடியின் கடவுளாக விளங்கினான். தென்பகுதியில் இவ்விரு கடவுளருடன் மாரியம்மனும் (சீதளா தேவி) மழைத் தெய்வமாக வணங்கப்பட்டாள்.

கிரேக்க நாட்டில் கடல் தேவதையை வெற்றித் தேவதை என்று அழைக்கின்றனர். கிரேக்கத்தில் ஆறு, கடல், ஏரி, குளம், குட்டை என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனி தெய்வங்கள் உள்ளன.
ஆப்பிரிக்காவில் அலை தேவதை என்று தனியான ஒரு தேவதை வணங்கப்படுகிறாள். அங்கு மணி வாடா என்ற பெயரில் தண்ணீர்த் தெய்வம் தனிப் பெரும் தெய்வமாக வழங்கப்படுகிறது. செனகல் முதல் ஜாம்பியா வரை இவ்வழிபாடு பெரும் செல்வாக்குப் பெற்றுள்ளது. ஆப்பிரிக்காவின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் தண்ணீர்த் தெய்வ வழிபாடு பெருவழக்காக இருக்கின்றது.

ஆப்பிரிக்க மக்கள் அமெரிக்கா முதலான நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த போதும் கூட அவர்களின் தெய்வ வழிபாட்டைக் கைவிடுவதில்லை. இத்தெய்வம் பெரும்பாலும் பெண்ணாகவே வணங்கப்படுகிறது. சில இடங்களில் மட்டும் ஆணாக வழங்கப் படுகிறது. தண்ணீர் தெய்வ வழிபாட்டுக்கு போகும்போது அல்லது வழிபாடு நடத்தும் போது அதற்கான பீடத்தின் மீது பூக்கள் பழம், கண்ணாடி, கடல் சங்கு போன்றவற்றை வைத்தும் சீப்பு போன்றவற்றை வைத்தும் அலங்காரம் செய்கின்றனர். அங்கு பக்தர்களும் குளித்து சுத்தமாகச் செல்வதுடன் தாங்கள் எவ்விதத் தடையும் இல்லாமல் நறுமணத்துடன் திகழவேண்டும் என்பதற்காக வாசனைப் பொருட்களை அதிகமாக தடவிக்கொண்டும் வாய்க்குள் போட்டுக் கொண்டும் செல்கின்றனர். ஆப்பிரிக்காவின் அலை தேவதையை எத்தியோப்பியாவின் முதல் ராணி என்று வணங்குகின்றனர்.

திருமுழுக்கு – அபிஷேகம்

தொடக்க காலம் தொட்டு தூய்மைச் சடங்கும் தண்ணீரையே மனிதன் பயன்படுத்தினான். நடுகல் நட்டு வழிபட்டு வந்த காலத்திலும் நீர்ப்படை செய்தல் என்ற சடங்கு நடைமுறையில் இருந்ததை தொல்காப்பியம் வழியாக அறிகிறோம். தெய்வ உருவச் சிலைகளையும் தண்ணீரால் கழுவி தூய்மைப் படுத்தினான் அல்லது தெய்வச் சிலைகளை ஆற்றில் அல்லது வேறு நீர்நிலைகளில் கொண்டு வந்து அங்கு அதற்கு நீராட்டு/ ஆராட்டு நடத்தினான். இதுவே பிற்காலத்தில் திருமஞ்சனம் திருமுழுக்கு / அபிஷேகம் நீராட்டு / தீர்த்தவாரி என்று பல பெயர்களில் வளர்ந்தது.

காலை – மாலை வேளைகளில் அந்தணர் நடத்தும் வழிபாடுகளில் தண்ணீர் முக்கியப் பங்கு வகிக்கின்றது. சந்தியா வந்தனத்தில், பூஜைகள் முடிந்து நீர் விளாவுதலில் என நிறுவனச் சமயத்திலும் நாட்டார் சமயத்திலும் தண்ணீர் வழிபாட்டுச் சடங்கில் இன்றியமையா இடம் பிடித்துள்ளது.

தண்ணீரின் புனிதம் வள்ளுவர் தமது திருக்குறளில்…

‘புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை- வாய்மையால் காணப்படும்’ என்று குறிப்பிட்டது தூய்மைக்கான தண்ணீர்க் சடங்குகள் புழக்கத்தில் இருந்ததனைக்
குறிப்பிட்டதாகக் கொள்ளலாம். எல்லா மதங்களிலும் தண்ணீர் ஒரு புனிதப் பொருளாகக் கருதப்படுவதை காண்கிறோம். இந்து சமயத்தில் கங்கை நதியில் நடக்கும் கும்பமேளா காவிரியில் கும்பகோணத்தில் நடக்கும் மகாமகம் புகழ்பெற்ற தண்ணீர் திருவிழாக்கள் ஆகும்.

பௌத்த சமயத்தில் புத்தர் சிலையை தண்ணீரால் கழுவுதல் அல்லது புத்தர் சிலையின் மீது தண்ணீர் பாய்ச்சுதல் போன்ற சடங்குகள் மனத் தூய்மையை குறிக்கும் வகையில் நிகழ்த்தப்படுகின்றன. தாய்லாந்தில் புத்தர் சிலைகளை ஆங்காங்கே வைத்து அவற்றின் மீதும் தெருக்களிலும் தண்ணீர் பீய்ச்சும் விழா மதுரை கள்ளழகர் திருவிழா நிகழ்ச்சியை போல் நடக்கிறது. இந்து, கிறிஸ்துவ சமயங்களை போலவே பௌத்தத்திலும் சமயச் சடங்குகளில். தண்ணீர் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

தண்ணீரின் புது வரவும் வழிபாடும்

சங்க இலக்கியத்தில் வையை பரிபாடலில் ஏழு பாடல்கள் வைகையில் வரும் புதுவரவு பற்றி விளக்குகின்றன. அவ்வாறு தண்ணீர் புதிதாக வரும் போது அதனை பூத்தூவி வரவேற்றனர் என்றும், அந்த மண் கலந்த தண்ணீரில் குளித்து மகிழ்ந்து கண்கள் சிவக்க வெளியே வந்தனர் என்றும், பல தகவல்கள் வாசிக்கக் கிடைக்கின்றன. ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாள் அன்று பதினெட்டாம் பெருக்கு என்ற பெயரில் கொண்டாடப்படும் விழா காவிரியில் வரும் புது வெள்ளத்தில் மலர் தூவி தீபம் ஏற்றி வரவேற்கிறது. அன்று பெண்கள் தாலி பெருக்கி அணிகின்றனர். இதற்குப் புராணக் கதை ஒன்று உள்ளது.

தண்ணீர் பெருக்கும் தாலி பெருக்கும்

இந்திரனின் மகள் மந்திரமாலை என்பவள் வன்னிய மகாராசாவை மணந்தாள். அவன் இலங்கைமீது படையெடுத்துச் சென்றபோது இறந்து விட்டான் என்ற தகவலறிந்து கைம்மைக் கோலம் பூண்டாள். தனது தாலியை அகற்றி விட்டாள். ஆனால், அவன் ஒருநாள் உயிரோடு திரும்ப ஊருக்கு வந்து விட்டான். அவன் வந்ததும் அவள் ஆடிப் பெருக்கு நன்னாளில் புதிதாக தாலி அணிந்து கொண்டாள். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கன்று பெண்கள் தாலி பெருக்கி போடுவது இப்பகுதியில் வழக்கமாக இருக்கின்றது. இதனை வன்னிய புராணம் என்ற நூல் தெரிவிக்கின்றது.

தண்ணீர் வழிபாடு

ஆடிப் பெருக்கு அன்று தண்ணீர் புழங்கக்கூடிய அனைத்து இடங்களிலும் வீட்டில் இருக்கும் கிணற்றடி முதல்கொண்டு குழாய், குழாயடி, ஆறு, குளம், கடல் என்று அனைத்து இடங்களிலும் தண்ணீருக்கான வழிபாடு நன்றி தெரிவிப்புச் சடங்காக நடத்தப்படுகிறது.

சிவப்பாக நிறம் மாறும் ஆறு

அஸ்ஸாமில் பிரம்மபுத்திரா நதி காமாக்கியா கோயிலுக்கு அருகில் பாயும் இடத்தில் ஆண்டுக்கு மூன்று நாள் சிவப்பாக நிறம் மாறி விடும். தேவி தீட்டுப் பட்டு இருப்பதால் ஆற்று நீரும் சிவந்த நிறத்தில் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். தட்சன் யாகம் தோல்வியுற்றதைத் தொடர்ந்து சிவபெருமான் பார்வதியை சுழற்றி எறிந்தபோது அவளது உடல் 64 துண்டுகளாய்ப் பல்வேறு இடங்களில் விழுந்தது. அவற்றில் இங்கு தேவியின் பெண்ணுறுப்பு விழுந்ததாக நம்பப்படுவதால் அவள் பூப்படையும் நிகழ்வும் சமய நிகழ்வாக ஏற்கப்படுகிறது.

தண்ணீரும் வெண்ணிலவும்

முழுநிலவு இரவு உலகெங்கும் கொண்டாட்ட இரவாகத் திகழ்ந்தது. தமிழகத்தில் தை முதல் வைகாசி வரையிலான அனைத்து பௌர்ணமிகளும் கொண்டாட்ட தினங்கள் ஆகும். குறிப்பாக பங்குனி, சித்திரை மாதங்களில் பௌர்ணமியன்று எல்லா நீர்நிலைகளிலும் பெருமாளை இறக்குகின்ற வழிபாட்டுச் சடங்கு நடைபெறுகின்றது. அன்றிரவு நீர்நிலைகளில் மக்கள் கூடி இரவுப் பொழுதை கழிக்கின்றனர். பங்குனி முழு நிலா நாளன்று ஆற்றங்கரைகளில் காமன் பண்டிகை கொண்டாடப்படும். அது கலவித் திருநாள். அன்று திருக்கோயில்களில் தெய்வத்திருமணங்கள் நடைபெறும்.

தண்ணீருக்கு நன்றி – இந்திரவிழா

சிலப்பதிகாரத்தில் புகார் நகரில் இந்திரவிழா பங்குனி முழு நிலா நாள் அன்று தொடங்கி சித்திரை முழு நிலா நாள் வரை 28 நாட்கள் கடற்கரையில் நடைபெற்றதாகவிளக்குகிறது. இந்திர விழா கொண்டாடாவிட்டால் நாட்டில் மழை பெய்யாது. பசியும் பஞ்சமும் தோன்றும் என்ற நம்பிக்கை இருந்தது. இந்திரன் இடி, மழைக்குரிய கடவுள் என்பதாலும் இவ்விழா நீர்நிலைகளை ஒட்டி அவற்றின் அருகே நடைபெற்றது. அப்போது மக்கள் ‘வசியும் வளனும் சிறக்க’ என்று வாழ்த்தி வணங்கினார். இவ்விழா தண்ணீருக்கு நன்றி செலுத்தும் விழா ஆகும்.

கடல் நீராடலும் முன்னோர் அருளும்

கடலில் நீராடி நீர்க்கடன் இயற்றுவதால் முன்னோர்களின் அருளைப் பெற முடியும் என்ற நம்பிக்கை காரணமாக அமாவாசையன்று பலர் இச்சடங்கைச் செய்கின்றனர். முழு நிலவென்று கடல் கரை ஓரம் இருந்து தண்ணீர்ச் சடங்குகள் செய்வது களிப்பு, கலவியின்பம், வருங்கால மேன்மை, மகிழ்ச்சி, சந்ததிப் பெருக்கம் ஆகியவற்றிற்கு உதவும். இருட்டு நாளான அமாவாசையன்று நீர்க் கடன் செய்வது முன்னோரின் தீராத ஆசை களைத் தீர்க்கவும் அவர்களின் மனக் குறை களைப் போக்கவும் அவர்களிடமிருந்து பூரண ஆசிகளை பெறவும் உதவும். இருட்டு இறந்தவரோடும் வெளிச்சம் தேவர்களோடும் தொடர்பு படுத்தப்படுகிறது.

சூரியனின் பாதையைக் கணக்கில் கொண்டு ஆடி அமாவாசை, ஐப்பசி அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் நீத்தார் கடன் தீர்க்கும் சடங்குகளை கடலில் குளித்து செய்யும் மரபு உள்ளது. குறிப்பாக புரட்டாசி அமாவாசையில் இருந்து ஐப்பசி அமாவாசை வரை எந்த நாளில் கடலில் நீராடி நீர்க்கடன் செலுத்தினாலும், அதன் பலன் முழுமையாக கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. மாதந்தோறும் வரும் அமாவாசை அன்று நீத்தார் கடன் தீர்க்க முடியாதவர்கள் அல்லது தர்ப்பணம் செய்ய இயலாதவர்கள் புரட்டாசி அமாவாசை முதல் ஐப்பசி மஹாளய அமாவாசைக்கு ஒருநாள் கடலாடி நீத்தார் கடனை நிறைவேற்றலாம்.

கடல் நீர் என்பது மிகப்பெரிய அளவிலானது என்பதால் இவ்வுலகின் அனைத்துப் பாவங்களையும் தீர்க்க வல்லது என்ற நம்பிக்கையை இறந்தவர்களுக்கு இந்நாளில் நீர்க் கடன்கள் செய்யக் காரணமாய் அமைகின்றது. பாதாளத்தில் இருந்த கடலை மேலே பூமிக்கு கொண்டு வந்தவர்கள் அறுபதாயிரம் பேர் அவர்களின் தந்தை சாகரன் என்று அழைக்கப்படுகிறார். வருணன் பிரம்மஹத்தி தோஷத்தால் கட்டுண்டு செயலிழந்து கடலுக்குள் கிடந்தபோது சாபம் தீர்க்க அங்கிருந்தே சிவனை நோக்கித் தவம் செய்தான்.

அவனது பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. எனவே, கடலுக்குள் இருந்து இறைவனை வேண்டினால் தீராத பாவமும் தீரும் என்பது மாறாத நம்பிக்கை ஆயிற்று. பிள்ளை வரம் வேண்டுவோர் முன்னோர் சாபம் தீர பித்ரு தோஷம் போக்க ராமேஸ்வரம் போய் கடலில் குளித்து இறைவனை வேண்டுகின்றனர். சமணர்கள் அருகதேவனை அமுதசாகரன் என்று அழைக்கின்றனர். கிரேக்கர்களின் கடல் தெய்வம் போஸிடோன் இருக்கிறார். ஜப்பானியர்கள் கடல் தெய்வம் ஷிந்தயிசத்தில் சூயிஜின் என்பதாகும். சூயி என்றால் தண்ணீர். எகிப்தின் கடல் தெய்வம் க்னேம் என்பதாகும். இவ்வாறு நாகரிகம், பண்பாடு வளர்ந்த நாடு களில் தண்ணீர்க் கடவுள் கடல் தேவதை என்று பல வழிபடப்பட்டன.

விசர்ஜனம் என்ற தண்ணீர் சடங்கு

தண்ணீரில் சாமி சிலைகளை மூழ்கடித்தல் என்பது இந்து சமயத்தில் உள்ள ஒரு முக்கியச் சடங்காகும். விநாயகர் சிலைகளை விநாயகர் சதுர்த்தி அன்றும் துர்க்கை சிலையை காளி பூஜை அன்றும் தண்ணீரில் மூழ்கடிக்கின்றனர். இதற்கு சமஸ்கிருதத்தில் விசர்ஜனம் என்று பெயர். விசர்ஜனம் என்றால் ‘ஓய்வில் கிடத்து’ அல்லது அசைவின்றி கிடத்தி வை’ என்பது பொருள்.

புண்ணிய தீர்த்தமாடல்

சமய மரபுகளில் தண்ணீரில் மூழ்கி தூய்மை பெறுதல் அல்லது பாவம் நீங்குதல் மற்றும் புண்ணியம் பெறுதல் என்ற ஒரு கோட்பாடு பண்டைய காலம் தொட்டு இன்றுவரை தொடர்ந்து வருகின்றது. இதனால் இந்துக்களில் பலர் புண்ய ஷேத்திராடனம் என்ற பெயரில் புனித யாத்திரை மேற்கொண்டு புண்ணிய நதிகளில் மூழ்கி வருகின்றனர். தண்ணீரில் மூழ்கி நோய் நீங்குதல் அல்லது முடம் நீக்குதல், பார்வை பெறுதல் என்பவை இந்து, கிறிஸ்துவ, பௌத்த சமயங்களில் காணப்படுகின்றன.

தமிழகத்தில் சைவ சமய எழுச்சி ஏற்பட்டபோது எழுதப்பட்ட ஸ்தல புராணங்களில் கோயில் தீர்த்தத்தில் குளித்து இந்திரன், பிரம்மன் அல்லது வேறு அசுரன், பக்தன் போன்றோர் பாவம் நீங்கப் பெற்றனர் என்ற நிகழ்வுகள் இடம் பெற்றன. கோயில் என்றால் மூர்த்தி, தலம் இவற்றுடன் தீர்த்தமும், (கோயில் தீர்த்தம்) முக்கிய மூன்றில் ஒன்றாக இடம் பெற்றது. மதுரை சொக்கநாதர் பற்றிய திருவிளையாடல் புராணத்தில் பக்தர்கள் குறை தீர்ப்பதில் பொற்றாமரைக்குளம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

முனைவர் செ. ராஜேஸ்வரி

Related Stories: