கலசபாக்கம் : கலசபாக்கம் அருகே பர்வதமலை கிரிவலப்பாதையில் வெள்ளந்தாங்கிஸ்வரர் கோயில் திருப்பணியில் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியம் காந்தபாளையம் ஊராட்சி சீனந்தல் கிராமத்தில் பர்வதமலை கிரிவலப் பாதையில் மிருகண்டா நதி கரையோரம் வெள்ளந்தாங்கிஸ்வரர் கோயில் உள்ளது.
பழமை வாய்ந்த இந்த கோயிலில் பழமை மாறாமல் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என பக்தர்கள் பல ஆண்டு காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். இதுகுறித்து தொகுதி எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு சேகர்பாபு ஆகியோரிடம் தொடர்ந்து வலியுறுத்தியதின் பேரில் அதன் தொன்மை மாறாமல் திருப்பணி மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறை மூலம் ரூ.1.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான பாலாலயம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி முதல் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலையில் நடந்த திருப்பணியில் கோயில் வளாகத்தில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.
அப்போது வரலாற்று சிறப்புமிக்க கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டது. இதை பார்த்த பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்து உடனே இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் கோயில் தல வரலாறு, இக்கோயில் அமைந்த இடத்தின் கிராமத்தின் பெயர் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க தகவல்கள் கல்வெட்டில் இருப்பது தெரியவந்துள்ளது.
ஏற்கனவே கோயில் வரலாற்றுக் குறித்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர். தற்போது திருப்பணிகள் மேற்கொண்ட தருணத்தில் கிடைத்துள்ள கல்வெட்டுகள் குறித்து தொல்பொருள் துறை ஆய்வு மேற்கொண்டால் பல்வேறு வரலாற்று தகவல்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. மேலும் இப்பகுதியில் தான் சப்த கைலாயங்கள் சப்த கரை கண்டத் தளங்கள் உள்ளன. அதேபோல் வரலாற்று சிறப்புமிக்க சிவன் கோயில்களும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
