பொள்ளாச்சி : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழையில்லாததால் ஆழியார் அணை நீர் மட்டம் 91 அடியாக சரிந்தது.கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஆண்டு பெய்து தென்மேற்கு பருவமழையால், மொத்தம் 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தடன், அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது.
இதை தொடர்ந்து வடகிழக்கு பருவமழையும் பரவலாக பெய்தது.கடந்த மாதம் துவக்கம் வரை 110அடிக்கு மேலாக தண்ணீர் உயர்ந்திருந்தது. இதில், கடந்த சில வாரமாக போதிய மழையின்றி வெயில் தாக்கம் அதிகரிக்க துவங்கியது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழையில்லாமல் வறட்சி துவங்கியது.
இதனால், கடந்த சில வாரமாக அணைக்கு தண்ணீர் வரத்து அதிகபட்சமாக வினாடிக்கு 75 முதல் 100 கன அடியாக இருந்தது. இருப்பினும், ஆயக்கட்டு விவசாய பாசனத்துக்கும், குடிநீர் தேவைக்கும் மற்றும் ஒப்பந்தபடி கேரளாவுக்கு என வினாடிக்கு 650 கன அடிவரை தண்ணீர் திறப்பு தொடர்ந்துள்ளது. இதன் காரணமாக, கடந்த 2 வாரமாக அணையின் நீர்மட்டம் மெல்ல மெல்ல சரியத்துவங்கியது.
நேற்று நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 91 அடியாக சரிந்தது. தண்ணீர் வரத்து குறைவாக இருந்தாலும், வெளியேற்றம் அதிகரிப்பால் நீர்மட்டம் மெல்ல மெல்ல சரிந்து வருவதாகவும், கேரளாவுக்கு தண்ணீர் திறப்பு இருக்கும் வரை அணை நீர்மட்டம் சரிவை சந்திக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அணை நீர்மட்டம் சரிந்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
