மட்றப்பள்ளி கால்நடை சந்தையில் ரூ.25 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை

*விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், மட்றப்பள்ளி பகுதியில் வாரம் தோறும் செவ்வாய் கிழமைகளில் கால்நடை வார சந்தை நடைபெறும். அதன்படி நேற்று நடந்த சந்தையில் விவசாய பணிகள் மற்றும் குடும்ப தேவைகளுக்காக காளைகள், பசுக்கள் மற்றும் கன்றுக்குட்டிகளை வாங்குவதில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்குவதற்காக அதிக ஆர்வம் காட்டினர்.

இதன் காரணமாக மட்றப்பள்ளி கால்நடை சந்தையில் காளைகள், பசுக்கள், கன்றுக்குட்டிகள் ஆகியவற்றின் விலை வழக்கத்தைவிட சற்று அதிகமாக நடந்தது.இந்த சந்தையில் கன்றுக்குட்டிகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், பசுக்கள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது.

குறிப்பாக நல்ல சுகாதார அமைப்பு, வலுவான தோற்றம் மற்றும் உழைப்புத் திறன் கொண்ட காளைகள் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டதால், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் இடையே கடும் போட்டி நிலவியது.

மேலும், சந்தையில் காளைகளின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் தங்களின் கால்நடைகளுக்கு நல்ல விலை கிடைத்ததை கண்டு விவசாயிகள், பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற இந்த சந்தை, கிராமப்புற பொருளாதாரத்திற்கு உயிர்நாடியாக விளங்கி வருவதுடன், விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. நேற்று நடந்த வார கால்நடை சந்தையில், ரூ.25 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

Related Stories: