*தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு
ஜோலார்பேட்டை : திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்னமூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவரது மனைவிகள் சித்ரா(50), குணவதி(52). பன்னீர்செல்வம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டின் எதிரே 11 சென்ட் நிலத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த இடம் தங்களுக்கு சொந்தம் என்று அதே பகுதியை சேர்ந்த ரவியும் அவரது மகன் அருள்பிரசாத்தும்(32), பன்னீர்செல்வத்திடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனால் பன்னீர்செல்வம் ஜோலார்பேட்டை போலீசார் பாதுகாப்புடன் சில மாதங்களுக்கு முன் கற்களை நட்டு கம்பிவேலி அமைத்துள்ளார். அந்த கம்பி வேலியை அருள்பிரசாத் இரவோடு இரவாக அகற்றினாராம்.இதுகுறித்து போலீசில் பன்னீர்செல்வம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பன்னீர்செல்வம் மீண்டும் கற்களை நட்டு கம்பிவேலி அமைத்துள்ளார். இதையறிந்த அருள்பிரசாத் நேற்று முன்தினம் அங்கு வந்து 2 கற்களை உடைத்தார்.
இதை பார்த்த பன்னீர்செல்வமும், அவரது மனைவிகள் சித்ரா, குணவதி ஆகியோர் தட்டிக்கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அருள்பிரசாத், சித்ரா, குணவதியை கடப்பாறையால் சரமாரி தாக்கி உள்ளார். பன்னீர்செல்வத்தை கற்களால் தாக்கியதாகவும் தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த சித்ராவும், குணவதியும் திருப்பத்தூர்-மூக்கனூர் சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர்.
பின்னர் காயம் அடைந்த சித்ரா, குணவதியை, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சித்ரா கொடுத்த புகாரின்பேரில் அருள்பிரசாத் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது தந்தை ரவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
