ப்ளு காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் பறவைகள் இறந்து கிடந்தால் வெறும் கைகளால் தொடக்கூடாது

* அரைவேக்காட்டில் முட்டை, இறைச்சி உண்பதை தவிர்க்க வேண்டும்

* பொதுமக்களுக்கு கலெக்டர் கமல் கிஷோர் அறிவுரை

தென்காசி : தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:பறவை காய்ச்சல் என்பது பெரும்பாலும் பறவைகளுக்கு இடையே பரவும் ஒரு வைரஸ் நோய் ஆகும்.

பாதிக்கப்பட்ட பறவைகளிடமிருந்து மற்ற பறவைகளுக்கு பரவுவதால் பறவை இறப்பை வைத்து, இறந்த பறவைகளின் பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்கப்படுகிறது.

இந்நோயானது மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு மிகவும் அரிது. காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி போன்றவை இந்நோயின் சில அறிகுறிகள் ஆகும். இந்நோயானது பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கு நேரிடையாகவும், தூய்மை கேடு உள்ள சூழ்நிலையிலும் பரவ வாய்ப்பு உள்ளது.

எனவே காய்ச்சல், தலைவலி, தசை வலி, இருமல், சளி மற்றும் மூச்சு திணறல் உள்ளவர்கள் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். உடல்நலம் குன்றிய பறவைகளை கையாள்பவர்கள், இறந்த பறவைகளை கையாள்பவர்கள் மற்றும் இறைச்சி கூடத்தில் பணிபுரிபவர்கள் கவனத்துடன் பணிபுரியவும். ஏதேனும் ப்ளு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பின் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

வீட்டின் அருகிலோ அல்லது பொது இடங்களிலோ காகங்கள், பறவைகள் இறந்து கிடந்தால் வெறும் கைகளால் தொடக்கூடாது. அசாதாரண பறவை இறப்புகள் இருப்பின் உடனே உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத்துறை, கால்நடை மருத்துவ துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

கைகளை கழுவுதல் உட்பட தன் சுத்தம் மற்றும் சுற்றுப்புறத்தினை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். முற்றிலும் சமைக்கப்படாத மற்றும் சரிவர சமைக்கப்படாத முட்டை மற்றும் இறைச்சி வகைகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.

பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இந்நோய் சம்மந்தமான வதந்திகளை நம்ப வேண்டாம். மேலும் கூடுதல் தகவல்களுக்கு தொலைபேசி எண் 104ஐ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: