*கிராம மக்கள் கோரிக்கை
சாத்தான்குளம் : அமுதுண்ணாக்குடியில் தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக கட்டித்தர வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தான்குளம் ஒன்றியம் அமுதுண்ணாக்குடி பகுதியில் இருந்து நெடுங்குளம், கலுங்குவிளை, கொம்பன்குளம், காரியாண்டி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் கருமேனி ஆறு குறுக்கே செல்வதால் அமுதுண்ணாக்குடி பகுதியில் தரைமட்ட பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இவ்வழியாக மக்கள் இருசக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
மேலும் அரசு பேருந்து உள்ளிட்ட இதர வாகனங்களும் சென்று வருகின்றன. அமுதுண்ணாக்குடி பகுதியில் உள்ள தரைமட்ட பாலம் வழியாக மழை காலங்களில் கருமேனி ஆற்றில் தண்ணீர் சொல்லும்போது போக்குவரத்து முடக்கம் ஏற்படும் நிலை உள்ளது. இதனால் அமுதுண்ணாக்குடி மற்றும் பிற பகுதிகளை சேர்ந்த மக்கள், இந்த வழிப்பாதையில் ஆண்டுதோறும் மழை காலங்களில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே அமுதுண்ணாக்குடி தரைமட்ட பாலத்தை அகற்றிவிட்டு உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இதனை கவனித்து ஆய்வு மேற்கொண்டு இந்த தரைமட்ட பாலத்தை போக்குவரத்து தடை ஏற்படாமல் இருக்கும் வகையில் உயர்மட்ட பாலமாக கட்டித் தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் வடக்கு அமுதுண்ணாக்குடி செல்லும் வழியிலும் தரைமட்ட பாலம் சேதமடைந்து காணப்படுகிறது. அதனையும் மழை காலங்களில் பொதுமக்கள் பாதிக்காதவாறு வடக்கு அமுதுண்ணாக்குடி தரைமட்ட பாலத்தையும் தேவைக்கு ஏற்ப உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து சாத்தான்குளம் வர்த்தக சங்க செயலாளர் செல்வராஜ் மதுரம் கூறுகையில், அமுதுண்ணாக்குடி பகுதியில் 3 தரைமட்ட பாலங்கள் உள்ளது. இந்த பாலம் வழியாக மழை காலங்களில் தண்ணீர் செல்லும்போது மக்கள் செல்வது பாதிக்கப்படுகிறது. இதனால் தண்ணீர் அதிகமாக செல்லும்போது போக்குவரத்து தடை ஏற்படுவதால் இப்பகுதியை சேர்ந்த மக்கள் வேறு வழியாக ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
கடந்த 2023ல் பெய்த கனமழையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். எனவே தெற்கு அமுதுண்ணாக்குடி, வடக்கு அமுதுண்ணாக்குடி பகுதியில் கருமேனியாற்று படுகையில் உள்ள தரைமட்ட பாலங்களை போக்குவரத்துக்கு இடையூறாக இல்லாத வகையில் உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
