அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் கோவில்பட்டியில் ரிங் ரோடு திட்டம்

*நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு கோரிக்கை

கோவில்பட்டி : கோவில்பட்டி ரிங் ரோடு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைவுபடுத்த வேண்டுமென முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தின் 2வது பெரிய நகரமாகவும், மதுரை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நகரமாகவும் கோவில்பட்டி உள்ளது.

கோவில்பட்டி தொகுதியில் கோவில்பட்டி, கயத்தாறு என 2 தாலுகாக்களும், 100க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள், 2 ஊராட்சி ஒன்றியங்கள், 3 பேரூராட்சிகளை உள்ளடக்கி இருக்கிறது. சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.

அரசு மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள், நேஷனல் பொறியியல் கல்லூரி, 20க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகள், 200க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள், நாள் ஒன்றுக்கு சராசரியாக இரு மார்க்கங்களிலும் 50க்கும் மேற்பட்ட ரயில் போக்குவரத்து வசதிகள், விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி என 4 மாவட்டங்களின் நுழைவு வாயில் என எல்லா வகையிலும் முக்கியத்துவம் கொண்ட வளர்ச்சி பெற்ற தொகுதியாக கோவில்பட்டி உள்ளது.

பெரிய தொழில் நகரமாக திகழக்கூடிய கோவில்பட்டியில் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலை வசதிகள் போதிய அளவில் இல்லை. கோவில்பட்டி நகரத்தின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டும் நாளுக்குநாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையிலும் கடந்த ஆட்சியில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் கோவில்பட்டி பைபாஸ் சாலையில் இருந்து கோவில்பட்டியை சுற்றி 17 கி.மீ. தொலைவுக்கு ரிங் ரோடு (சுற்றுவட்ட சாலை) அமைக்க திட்டமிடப்பட்டது.

கோவில்பட்டி எஸ்எஸ்டிஎம் கல்லூரி அருகில் மாநில சாலை (எஸ்.ஹெச். யு) 26ல் இருந்து பிரிந்து இலுப்பையூரணி, லிங்கம்பட்டி, சிதம்பராபுரம், திட்டங்குளம், கெச்சிலாபுரம், பாண்டவர்மங்கலம், மந்திதோப்பு வழியாக நாலாட்டின்புதூரில் தேசிய நெடுஞ்சாலை என்.ஹெச்.7ல் இணையும் வகையில் 17 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிதாக புறவழிச்சாலை அமைத்திட திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.

இதன் முதற்கட்டமாக சென்னையை சேர்ந்த மெகா ஸ்டார் சர்வே கன்சல்டென்சி இந்தியா பிரைவேட் லிமிடெட் மூலம் கள ஆய்வுப் பணிகள், தொழில்நுட்ப ரீதியான சாத்தியக்கூறுகள், வடிவமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் 2021ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து கோவில்பட்டி ரிங் ரோடு அமைக்கும் திட்டப்பணிகள், கடந்த 5 ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் கிடப்பில் உள்ளது. கோவில்பட்டி ரிங் ரோடு அமைக்கும் திட்டம், தமிழக அரசின் ஒப்புதலை எதிர்நோக்கி காத்திருப்பில் உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோவில்பட்டியை சுற்றி ரிங் ரோடு திட்டம் செயல்படுத்துவதன் மூலம் மாவட்டத்தின் தலைநகரமான தூத்துக்குடியையும், நாட்டின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றாக திகழும் வ.உ.சி. துறைமுகத்துக்கான கனரக சரக்கு போக்குவரத்து மற்றும் அனல்மின் நிலையங்கள், காற்றாலை நிறுவனங்கள், சோலார் நிறுவனங்கள், தூத்துக்குடி சிப்காட்டில் அமைந்துள்ள பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் சுற்றுலா மையங்களை இணைக்க ஏதுவாகவும் எளிதாகவும் விரைவாகவும் அமையும்.

சிட்கோ மூலம் கோவில்பட்டி தாலுகா லிங்கம்பட்டியில் 54 ஏக்கரில் ரூ.25 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிதாக சிப்காட் அமைக்கப்பட உள்ளது. கோவில்பட்டியில் விமான பயிற்சி பள்ளி அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

எனவே கோவில்பட்டி நகரத்தின் வளர்ச்சி, உள்கட்டமைப்பு மட்டுமல்லாது தூத்துக்குடி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் பிற நகரங்கள் உடனான போக்குவரத்து தொடர்புக்கும் முக்கிய திட்டமாக உள்ள கோவில்பட்டி ரிங் ரோடு திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கியத்துவம் அளித்து நிர்வாக அனுமதி வழங்கி நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைவுபடுத்த வேண்டுமென கோவில்பட்டி நகர மதிமுக செயலாளர் பால்ராஜ், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

Related Stories: