புதுடெல்லி: முன்னாள் ராணுவ தளபதி எம்.எம்.நரவனே தனது நினைக்குறிப்பு புத்தகத்தில் இந்தியா-சீனா இடையேயான கல்வான் எல்லை மோதல் தொடர்பாக சில விஷயங்களை எழுதியுள்ளார். இதுதொடர்பாக ஆங்கில இதழில் வெளியான கட்டுரையை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி மக்களவையில் பேச முயன்றதால் கடும் அமளி ஏற்பட்டது. இந்த விவகாரத்தால் நாடாளுமன்றம் முடங்கிய நிலையில், நரவனேவின் புத்தகம் வெளியாகவில்லை என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார். இதை மறுத்த ராகுல் காந்தி, நரவனேவின் ‘போர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ்டினி’ புத்தகத்தை நாடாளுமன்றத்திற்கு சமீபத்தில் எடுத்து வந்தார்.
இந்நிலையில், பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா பதிப்பக நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘நரவனேவின் போர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ்டினி என்ற நினைவுக் குறிப்பு புத்தகத்தின் வெளியீட்டு உரிமையை நாங்கள் மட்டுமே வைத்திருக்கிறோம். இந்த புத்தகம் வெளியிடப்படவில்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
அச்சு அல்லது டிஜிட்டல் வடிவத்தில் புத்தகத்தின் எந்த பிரதிகளும் நிறுவனத்தால் வெளியிடப்படவில்லை, விநியோகிக்கப்படவில்லை, விற்கப்படவில்லை அல்லது பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யப்படவில்லை. தற்போது புழக்கத்தில் உள்ள புத்தகத்தின் எந்தவொரு பதிப்பும், முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ எந்த வடிவத்திலும் இருந்தாலும், அது பதிப்புரிமை மீறலுக்குச் சமமாகும்’ என கூறி உள்ளது.
இதுதொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, 2023ல் நரவனேவின் டிவிட் பதிவை வாசித்து காட்டினார். அதில், ‘‘வணக்கம் நண்பர்களே. எனது புத்தகம் இப்போது கிடைக்கிறது. (ஆன்லைன்) இணைப்பை தொடரவும். மகிழ்ச்சியுடன் வாசியுங்கள். ஜெய் ஹிந்த்’’ என நரவனே கூறி உள்ளார்.
இது குறித்து ராகுல்காந்தி, ‘‘இதுதான் நரவனேவின் டிவிட். நான் நரவனேவை நம்புகிறேன். ராணுவ தளபதி பொய் சொல்ல மாட்டார். ஆனால் நரவனேவை விட பதிப்பக நிறுவனத்தை நீங்கள் நம்புகிறீர்களா? இந்த இருவரில் யார் உண்மையை சொல்கிறார்கள் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்’’ என்றார்.
இதற்கிடையே, நரவனே புத்தகத்தின் டிஜிட்டல் பதிப்பு ஆன்லைனில் கசிந்ததாக வந்த புகாரின் பேரில் டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். நரவனே புத்தகத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
* நரவனே விளக்கம்
இதற்கிடையே, தனது புத்தகம் தொடர்பாக முன்னாள் ராணுவ தளபதி நரவனே நேற்று மவுனம் கலைத்தார். எக்ஸ் பதிவில் அவர், பென்குவின் பதிப்பகத்தின் அறிக்கையை வெளியிட்டு, ‘இதுதான் புத்தகத்தின் நிலை’ என டிவிட் செய்துள்ளார்.
