புதுடெல்லி: அசாமில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் முதல்வர் சர்மா இஸ்லாமிய அடையாளங்களை கொண்ட இரண்டு பேரை சுடுவது போன்ற வீடியோ வைரலானது. இந்த வீடியோ மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா மீது நடவடிக்கை எடுக்க இடதுசாரி தலைவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிபிஐ மற்றும் சிபிஐ(எம்) தலைவர்களுக்கான ஆஜரான வழக்கறிஞர், இந்த மனுவில்,‘‘அசாமின் தற்போதைய முதல்வர் ஆற்றிய சர்ச்சைக்குரிய பேச்சுகள் தொடர்பாக இந்த நீதிமன்றத்தின் அவசர தலையீட்டை நாங்கள் கோருகிறோம். அதில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை சுடுவது போல் சமீபத்தில் வெளியிடப்பட்ட வீடியோவும் அடங்கும். புகார்கள் பதிவு செய்யப்பட்டன.
ஆனால் எந்த எப்ஐஆரும் பதிவு செய்யப்படவில்லை என்றார். வழக்கறிஞர் சமர்ப்பித்த கோப்புக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜோய்மல்யா பாக்சி மற்றும் என்வி அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு கவனத்தில் கொண்டது. இந்த மனுவை பட்டியலிடுவது குறித்து பரிசீலிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.
