ஒடிசா மாநிலம் நிதி ரீதியாக நிலையாக உள்ளதாக ஒடிசா ஆளுநர் கம்பம்பதி ஹரிபாபு தெரிவித்துள்ளார். ஒடிசா மாநில ஆளுநர் கம்பம்பதி ஹரிபாபு புவனேஸ்வரில் உள்ள லோக் பவனில் தமிழ் ஊடகத்தை சேர்ந்தவர்களுடன் கலந்து உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: ஒடிசாவை பற்றி தெரியாமல் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரியாது, இந்த மாநிலம் நிதி ரீதியாக நிலையானது என்று. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஒடிசாவில் நிக்கல், இரும்புத்தாது, நிலக்கரி, மாங்கனீஸ் உள்ளிட்ட கனிமங்கள் அதிகமாக கிடைக்கும்.
கடந்த கால அரசு ஒடிசாவில் கிடைக்கும் கனிமங்கள் எடுக்கும் நிறுவனத்திடம் இருந்து குறிப்பிட்ட சதவீத பணமாக பெற்றுவந்தனர், ஆனால் தற்போது டெண்டர் வடிவில் கனிமங்கள் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது, இதனால் ரூ. 50,000 கோடி வருவாய் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி சில மாவட்டங்களில் இதன் மூலம் சிறப்பு நிதியும் கிடைக்கிறது. மேலும் இங்கு கிடைக்கும் கனிமங்கள் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் மின்சாரத்திற்கு தேவைப்படும் நிலக்கரி ஒடிசாவில் இருந்து தான் அனுப்பப்படுகிறது.
புவனேஸ்வரில் உலக திறன் மையம் உள்ளது. தொழில்துறை தேவைகளுடன் உலகத் தரம் வாய்ந்த கூடுதல் பயிற்சியை வழங்குவதன் மூலம் ஒடிஷாவின் இளைஞர்களை மேம்படுத்துவதில் இந்த மையம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒடிசா 62 தனித்துவமான பழங்குடி சமூகங்களைக் கொண்டுள்ளது, இது மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 22 சதவீதம் ஆகும். இதனால் ஒடிசாவில் வளமான கலாச்சாரம் கொண்டு உள்ளது.
ஓவ்வொரு பழங்குடி சமூகத்திற்கும் ஓவ்வொரு கலாச்சாரம் உள்ளது. அவர்களுக்கென தனி திறமைகள் உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பட்டசித்ரா ஓவியம் காலம்காலமாக வரைந்து வருகின்றனர். முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் ஒடிசாவின் சாலை நெட்வொர்க் இணைக்கிறது. எனவே ஒடிசா வளர்ந்து வரும் மாநிலமாக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
இது தொடர்பாக ஆளுநர் கம்பம்பதி ஹரிபாபு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: தமிழ் ஊடகத்துடன் கலந்துரையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. இது மாநிலங்களுக்கு இடையேயான இணைப்பை வலுப்படுத்தவும் உதவுகின்றன. ஒடிஷாவின் நிதி வலிமை, தொழில்துறை வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வளமான கலாச்சார பாரம்பரியம் குறித்த பேசினேன். மாநிலத்தின் வளர்ச்சிப் பயணம் மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து ஊடகங்கள் ஆழமான புரிந்துகொள்ள இந்தப் பயணம் உதவும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
