புதுடெல்லி: உலகம் முழுவதும் ஊழல் உணர்வு குறியீட்டில் இந்தியா 91வது இடத்தை பிடித்துள்ளது. ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரை தலைமை இடமாக கொண்டு செயல்படும் உலகளாவிய அரசு சாரா நிறுவனமான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு உலகம் முழுவதும் உள்ள 182 நாடுகளில் ஊழல் தொடர்பாக ஆய்வு செய்து ஊழல் உணர்வு குறியீட்டை வெளியிட்டது. இதில் இந்தியா 91வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த முறை 96வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5 இடங்கள் முன்னேறி உள்ளது.
அதே நேரத்தில் இந்தியாவின் மதிப்பெண் முந்தைய ஆண்டை விட ஒரு புள்ளி மட்டுமே அதிகரித்துள்ளது. ஊழல் தொடர்பாக கடந்த ஆண்டு பல நாடுகளில் மக்கள் கோபம் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆசிய பசிபிக் பகுதியில் ஊழல் எதிர்ப்பு முன்னேற்றத்தில் மெதுவான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் 2025 ஊழல் உணர்வுகள் குறியீடு, உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஊழல் ஒரு கடுமையான அச்சுறுத்தலாகவே உள்ளது என்பதைக் காட்டுகிறது. அதனால் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் குறைவாகவே உள்ளன. இருப்பினும் உலகின் பல பகுதிகளில் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள், மக்கள் பொறுப்பற்ற தலைமையால் சோர்வடைந்து, சீர்திருத்தங்களைக் கோருகிறார்கள் என்பதைக் காட்டுகின்றன என்று தெரிவித்துள்ளது.
மேலும் ஊழல் குறித்து அறிக்கை அளிக்கும் பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. 2012 முதல், உலகளவில் ஊழலை வெளிப்படுத்தியதற்காக 829 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலைகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை ஊழல் உணர்வு குறியீட்டு மதிப்பெண் 50 க்கும் குறைவாக பெற்ற நாடுகளில் நடந்துள்ளன.
இந்த பட்டியலில் மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா இடம் பிடித்துள்ளது. அதில் பிரேசில் (35), இந்தியா (39), மெக்சிகோ (27), பாகிஸ்தான் (28), ஈராக் (28) ஆகியவை அடங்கும். இவை ஊழல் குறித்து செய்தி வெளியிடும் பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் ஆகும். 2012 முதல் 31 நாடுகள் தங்கள் ஊழல் அளவைக் கணிசமாகக் குறைத்திருந்தாலும், மீதமுள்ள நாடுகள் இந்தப் பிரச்சினையைச் சமாளிக்கத் தவறிவிட்டன என்று குறிப்பிட்டுள்ளது.
* ஊழல் இல்லாத நாடு டென்மார்க்
உலக அளவில் ஊழல் இல்லாத அல்லது மிகவும் குறைந்த பட்டியலில் முதல் இடத்தை டென்மார்க் பிடித்துள்ளது. அதை தொடர்ந்து பின்லாந்து, சிங்கப்பூர் உள்ளது. அமெரிக்கா 29வது இடத்திலும், இங்கிலாந்து 20வது இடத்திலும் உள்ளது. பட்டியலின் கடைசி இடங்களில் தெற்கு சூடான் மற்றும் சோமாலியா ஆகிய இரண்டும் உள்ளன. இந்த நாடுகளுக்கு முன்னதாக வெனிசுலா உள்ளது.
* வேலையின்மை 6.7 சதவீதமாக குறைவு
இந்தியாவில் முக்கிய நகரங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களிடையே வேலையின்மை விகிதம் 2025 அக்டோபர்-டிசம்பரில் 6.9 சதவீதத்திலிருந்து 6.7 சதவீதமாகக் குறைந்துள்ளதாக ஒன்றிய அரசு வெளியிடப்பட்ட தகவலில் தெரிவித்துள்ளது.
